1.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சந்தானம், வைபவி சாண்டில்யா, விவேக், சம்பத் ராஜ், ரோபோ சங்கர் மற்றும் பலர்.
இயக்கம் - ஜி.எல். சேதுராமன்
இசை - எஸ்டிஆர்
தயாரிப்பு - விடிவி புரொடக்ஷன்ஸ்

ஒரு காமெடி நடிகராக காலத்திற்கேற்ப, ரசிகர்களின் ரசனைக்கேற்ப காமெடி நடிப்பில் ரசிகர்களைக் கவர்ந்தவர் சந்தானம். ஆனால், ஒரு ஹீரோவாக என்ன மாதிரியான படத்தில் நடிக்க வேண்டும் என்பதில் அவர் இன்னமும் குழப்பத்தில் இருக்கிறார் என்பதற்கு 'சக்க போடு போடு ராஜா' படமும் ஒரு உதாரணம்.

கோபிசந்ந்த், ரகுல் ப்ரீத் சிங் நடித்து தெலுங்கில் வெளிவந்த 'லௌக்யம்' படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். ரீமேக் படம் என்று முடிவான பின் தனக்குப் பொருத்தமான ஒரு படத்தைத் தேர்வு செய்து நடித்திருந்தால் சந்தானமும் தப்பித்திருப்பார். இந்தப் படத்தில் அவர் தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்து அதற்கேற்றபடி நடித்திருக்கிறார்.

பெரிய தாதாவான சம்பத்ராஜின் தங்கையைக் காதலிக்கும் நண்பன் சேதுவுக்கும் திருமணம் செய்து வைக்கிறார் சந்தானம். அத்துடன் சென்னையை விட்டு பெங்களூர் சென்று விடுகிறார். அங்கு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வைபவி சாண்டில்யாவைப் பார்த்ததும் காதலில் விழுகிறார். சந்தானத்தைத் தேடி சம்பத் ராஜ் பெங்களூருக்குப் போகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் வைபவியும், சம்பத்ராஜின் தங்கை என்பது சந்தானத்திற்கத் தெரிய வருகிறது. வைபவிக்கும் வேறு ஒருவருக்கும் சம்பத்ராஜ் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். அதன் பின் சந்தானம் அவருடைய காதலியைக் கரம் பிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

வித்தியாசமான ஹேர் ஸ்டைல், டிரிம் செய்யப்பட்ட தாடி, மீசை, நடந்தாலும் ஸ்டைலாக நடக்க வேண்டும் என சந்தானத்திற்கு யார் சொல்லிக் கொடுத்தார்களோ தெரியவில்லை. ஒன்று கூட அவருக்குப் பொருத்தம் இல்லாமல் இருக்கிறது. ஓரிரு வசனங்களைத் தவிர அவரும் நகைச்சுவை செய்யவில்லை. காதலிக்கும் போது கூட உம்மென்றே இருக்கிறார். சண்டைக் காட்சிகளில் மட்டும் சக்க போடு போடுகிறார்.

சந்தானத்தின் காதலியாக வைபவி சாண்டில்யா. அரசாங்கமே தடை விதித்துவிட்ட 'ராகிங்'கைச் செய்து மகிழ்ச்சியடையும் ஒரு தாதாவின் தங்கை. திமிர் பிடித்த பெண்ணாக நடிக்க முயற்சிக்கிறார். ஆனால், அதற்கு சம்பந்தமில்லாமல் அவருடைய தோற்றம் இருக்கிறது. டப்பிங் குரல் கொடுத்திருப்பவர் பொருத்தமாகக் கொடுத்திருப்பதால் நடிப்பிலும் கொஞ்சம் தேறுகிறார் வைபவி.

தமிழ் சினிமா தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் சத்தம் போடும் தாதாவாக சம்பத் ராஜ். சந்தானத்திற்கு உதவி செய்யப் போய் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் டாக்சி டிரைவராக விவேக். சந்தானம் அவரை ஹீரோவாக்கிக் கொண்டு, விவேக்கை காமெடி செய்ய வைத்திருக்கிறார். கிளைமாக்சில் மட்டும்தான் விவேக் கொஞ்சம் கலகலக்க வைக்கிறார். பவர் ஸ்டார், ரோபோ சங்கர் நகைச்சுவை என்ற பெயரில் நம் பொறுமையை அதிகம் சோதிக்கிறார்கள்.

சிம்பு என்கிற எஸ்டிஆர் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாமகிறார். வேறு ஒரு நல்ல இசையமைப்பாளருக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கலாம். அவராவது கொஞ்சம் ஈடுபாட்டுடன் இசையமைத்திருப்பார். சண்டைக் காட்சிகளில் சந்தானத்தை விஜய், அஜித் ரேஞ்சுக்கு உயர்த்தியிருக்கிறார் ஸ்டன்ட் மாஸ்டர்.

சந்தானம் தொடர்ந்து ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என முடிவெடுத்திருந்தால் அவருக்குப் பொருத்தமான நல்ல கதைகளைத் தேர்வு செய்வது அவருக்கு நல்லது. இல்லையென்றால் நகைச்சுவைப் பக்கம் மீண்டும் வந்தால் அவரும் மீண்டு விடலாம்.

மொத்தத்தில், சக்க போடு போடு ராஜா - சரக்கு இல்லை

 

பட குழுவினர்

சக்க போடு போடு ராஜா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓