நாயகன் - நானி
நாயகிகள் - அனு இமானுவேல், ப்ரியா ஸ்ரீ
இயக்குனர் - விரின்சி வர்மா
அண்மை காலமாக காதலை மையப்படுத்தி வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் நானி இம்முறையும் காதல் கதையம்சம் கொண்ட படத்துடன் களம்காண்கின்றார். பாகுபலி படத்தில் இயக்குனர் ராஜமௌலியிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் நாயகன் ஆதித்யா (நானி), நாயகி சுமாவை(ப்ரியா ஸ்ரீ) காதலிக்கின்றார். சுமாவை காதலித்த போதும் முதல் காதலை மறக்கமுடியாததால் ஆதித்யா தனது முதல் காதல் கதையும், காதலியை பிரிந்ததற்கான காரணத்தையும் சுமாவிடம் கூறுகின்றார்.
ஆதித்யாவின் முதல் காதல் விபரம் அறியும் சுமா இன்னும் தீவிரமாக ஆதித்யாவை விரும்புகின்றார். இவ்வாறாக ஆதித்யா-சுமாவின் காதல் காலம் கடந்து கொண்டிருக்க, சுமாவின் நெருங்கிய உறவினர் தான் ஆதித்யாவின் முன்னாள் காதலி கிரண்(அனு இமானுவேல்) என தெரிய வருகின்றது. ஆதித்யாவின் இரண்டாவது காதலை அறியும் கிரண் என்ன செய்தார்? ஆதித்யாவின் முதல் காதலி தனது உறவுக்கார பெண் என அறியும் சுமா அதன் பின்னர் எடுக்கும் முடிவு என்ன? இறுதியில் ஆதித்யா யாரை கரம் பிடித்தார்? என்பதே மஜ்னு படத்தின் இரண்டாம் பாதி.
எந்த கதாபாத்திரத்திற்கும் ஏற்றால் போலும் தன்னை மாற்றிக் கொண்டு அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் நானி இம்முறையும் தனது திறமையை நிரூபித்துள்ளார். அனு இமானுவேலை காதல் வலையில் வீழ்த்த நானி மேற்கொள்ளும் முயற்சிகளும், நானி-அனு காதல் காட்சிகளும் படு ஜோராக வேலை செய்துள்ளது. நானி வழக்கமான உற்சாகத்துடன் படம் பார்ப்பவர்களின் மனதில் ஒட்டிக் கொள்கின்றார்.
இருப்பினும் நீச்சல்குளம் அருகே தனது காதல் கதையை நவரசத்துடன் எடுத்துக் கூறுகின்றேன் என்ற பெயரில் நானி போர் அடித்துவிட்டார் என்பதை மறுக்கமுடியாது. அனு இமானுவேல், ப்ரியா ஸ்ரீ இரு நாயகிகளில் நடிப்பில் முதிர்ச்சி காட்டி அனு இமானுவேல் ஸ்கோர் செய்து விட ப்ரியா ஸ்ரீயோ கோட்டை விட்டிருக்கின்றார். இயக்குனர் விரின்சி வர்மா ப்ரியா ஸ்ரீயின் கதாபாத்திரத்தில் கூடுதல் கவனம் காட்டியிருந்தால் ப்ரியாவிற்கு நல்ல அறிமுகம் கிடைத்திருக்கும். பாகுபலி இயக்குனர் ராஜமௌலியும், ராஜ் தருணும் சில காட்சிகளில் நடித்திருப்பது கூடுதல் சிறப்பு.
முக்கோண காதல் கதை இல்லை எனும் போதிலும் அதிகம் பழக்கப்பட்ட காதல் கதை தான் மஜ்னு. குதூகலமாகவும் பாடல்களுடனும் முதல் பாதியில் நகரும் திரைக்கதை, இடைவேளைக்கு பின்னர் திக்கு தெரியாமல் திரிகின்றது. அழுத்தாமன காட்சிகள் இரண்டாம் பாதியில் இடம்பெறாதது சலிப்பை ஏற்படுத்துகின்றது. இருப்பினும் இரண்டாம் பாதியில் நானி-வெண்ணிலா கிஷோர் இடையேயான நகைச்சுவை காட்சிகள் ஆறுதலாக அமைகின்றது.
ஒளிப்பதிவாளர் ஞானசேகரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். தொய்வாக செல்லும் இரண்டாம் பாதியை தூக்கி நிறுத்த முயற்சித்திருப்பது ஞானசேகரின் ஒளிப்பதிவே. மலையாளத்தில் தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் கோபி சுந்தரின் இசை வண்ணத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே மனதில் பதிகின்றது.
பாடல்களுக்கு சுமாராக வாசித்துள்ள கோபி காட்சிகளுக்கு பொருத்தமாக பின்னணி இசையில் வாசித்து கவனிக்க வைக்கின்றார். பிரவீன்-னின் எடிடிங் மஜ்னு படத்தின் பெரும் பலவீனம். சின்ன காட்சிகளை நேர்த்தியாக கொடுத்துள்ள இயக்குனர் கதை மற்றும் திரைக்கதை அமைப்பதில் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டிருக்கலாம்.
மொத்தத்தில் முதல் பாதியில் கொண்டாட்டம், மகிழ்ச்சிகரமான இறுதிக்காட்சிகள் என நானி மஜ்னு-வாக வசீகரிக்கின்றார். பழக்கப்பட்ட காதல் கதை பிரச்சனை இல்லை என்றால், ஒரு மஜ்னு, இரு லைலா கதையான “மஜ்னு” - வை கண்டிப்பாக பிடிக்கும்.