நடிகர்கள் : திலீப், மடோனா செபாஸ்டின், ஆஷா சரத், லால், ஜாய் மேத்யூ, நடாஷா சூரி, பாலு வர்கீஸ், ஹரீஷ்
இசை : அலெக்ஸ் பால், தீபக் தேவ்
ஒளிப்பதிவு : ஆல்பி
கதை : சித்திக்
டைரக்சன் : லால்
பல வருடங்கள் கழித்து சித்திக்-லால் காம்பினேஷனில் உருவாகியுள்ள படம் என்கிற ஒரு விஷயத்துக்காகவே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் இது.
சத்யநாராயணன் என்கிற பெயருக்கு நேர் எதிர்மறையாக நொடிக்கு ஒரு பொய் பேசுபவர் திலீப். பொய் பேசி சிக்கலில் மாட்டுவதுபோல தெரிந்தாலும், சமயோசிதமாக இன்னொரு பொய்யை சொல்லி தப்பிக்க கூடியவர். மாடலிங் துறையில் சாதிக்க விரும்பும் மடோனா செபாஸ்டினை காதலுக்காக துரத்துகிறார். பின்னர் அவர் தனது பள்ளித்தோழி என்பதும் தெரிய வருகிறது. அவருக்காக தனது புளுகும் புலமையை பயன்படுத்தி சில காரியங்களை சாதித்தும் கொடுக்கிறார். ஆனாலும் திலீப் சரியான பொய்யர் என்பதை ஓரளவு யூகிக்கும் மடோனா அவரிடம் இருந்து விலக முயற்சிக்கிறார்.
இந்நிலையில் துபாயில் மிகப்பெரிய விளம்பர நிறுவனம் நடத்தும் கோடீஸ்வரர் லாலை தனக்கு தெரியும் என அடித்துவிடுகிறார் திலீப். இதையும் பொய்யென கண்டுபிடிக்கும் மடோனா, தனது காதலை சொல்லாமலேயே பெங்களூருக்கு கிளம்புகிறார். விடாமல் அவரை பின் தொடரும் திலீப், விமான நிலையத்தில் உண்மையிலேயே லாலை சந்திக்கிறார். அவரிடம் கெஞ்சிக்கூத்தாடி சம்மதிக்க வைத்து அவர் ஏற்கனவே தனக்கு நன்கு பழக்கமானவர் என்பதாக விமான நிலையத்தில் மடோனாவிடம் காட்டிக்கொள்ளும் நாடகத்தை அரங்கேற்றி அதில் வெற்றியும் பெறுகிறார் திலீப்.
துபாயில் உள்ள தனது மனைவி ஆஷா சரத்தாள் வெறுக்கப்பட்டு டைவர்ஸுக்காக காத்திருக்கும் லால், திலீப்பிற்கு செய்த உதவிக்கு கைமாறாக, துபாய்க்கு சென்று தனது மனைவியின் எண்ணத்தை மாற்றி தன்னுடன் சேர்த்து வைக்குமாறு வேண்டுகோள் வைக்கிறார். மடோனாவையும் பெரிய மாடல் ஆக்குவதாக வாக்கும் தருகிறார். துபாய்க்கு செல்லும் திலீப், ஆஷா சரத்தின் நன்மதிப்பை பெற்றாரா..? அவரால் ஆஷாவையும் லாலையும் மீண்டும் ஒன்றுசேர்க்க முடிந்ததா..? தனது காதலியை பெரிய மாடல் ஆக்குவதுடன் அவரது காதலையும் பெற முடிந்ததா என்பதெல்லாம் விறுவிறுப்பான கலகலப்பான மீதிக்கதை.
இது நூறு சதவீதம் திலீப்புக்கு ஏற்ற கதை. திலீப் மட்டுமே நடிக்க கூடிய கதை. தமிழில் வெளிவந்த 'ராஜா கைய வச்சா' பிரபுவையும் அரிச்சந்திரா' கார்த்திக்கையும் மிக்ஸ் பண்ணினால் ஒரு பவரான புளுகன் கிடைப்பான் அல்லவா..? அதுதான் திலீப்பின் கதாபாத்திரமும் கூட.. அதில் எள்ளளவும் பிசகில்லாமல் ஜாமய்த்திருக்கிறார் திலீப். புளுகு மன்னன் என டைட்டில் வைத்ததற்கேற்ப தான் சரியான தேர்வு என்பதை காட்சிக்கு காட்சி நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்.
அழகுராணியாக மடோனா.. சென்டிமென்ட், ரொமான்ஸ் என இரண்டிலும் ஸ்கோர் பண்ணுகிறார். க்ளைமாக்ஸ் ரேம்ப் வாக்கிங்கில் அழுகையை கட்டுப்படுத்தி, சிரிப்புடன் நடந்துவர முயற்சிக்கும் ஒரு காட்சி போதும் அவர் சரியான நடிகை என்பதை பறைசாற்ற. கண்டிப்பான, கறாரான முதலாளியாக ஆஷா சரத் கம்பீரம்.. தனக்கு துரோகம் செய்துவிட்ட தனது நிறுவன விளம்பர மாடல் பெண்ணை துரத்தி துரத்தி அடிக்கும் கட்சியில் உக்கிர முகம் காட்டுகிறார். அவருக்கு இணையாக, அவரது கணவராக வரும் லாலும் பக்குவப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பலமே நான்ஸ்டாப் காமெடிதான்.. திலீப் ஒரே ஆளாக அதை சமாளித்து விடுவார் என்றாலும் அவரது நண்பராக வரும் பாலு வர்கீஸ் படம் முழுவதும் அந்த காமெடி சோடைபோகாமல் இருக்க கைகொடுத்து உதவியதோடு ஹீரோவோடு பயணிக்கும் அளவுக்கு சோலோ காமெடியனாகவும் உயர்ந்துள்ளார். ஆஷா சரத்தின் உதவியாளராக வரும் ஹரீஷும் மிதமான காமெடியில் ஸ்கோர் பண்ணுகிறார். ஸ்ட்ரிக்ட் வாத்தியாராக, மடோனாவின் தந்தையாக ஜாய் மேத்யூ வரும் காட்சிகளும் கலகல ரகம் தான்.
பிரிந்து வாழும் கணவன் மனைவியை சேர்த்துவைப்பது என்கிற சாதாரண ஒன்லைனாக இருந்தாலும், சரளமான நகைச்சுவை காட்சிகளால் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் பயணிக்கிறது சித்திக்கின் திரைக்கதை. பிபின் சந்திரனின் வசனங்கள் பல இடங்களில் கைதட்டலை வாங்கி தந்துகொண்டே இருக்கின்றன. அதிக பாடல்கள் கூட படத்திற்கு தொந்தரவாகி விடுமோ என்பதால் ஒரே ஒரு ஒரு பாடலுடன் நிறுத்திவிட்டு, ட்டைரக்சனில் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார் இயக்குனர் லால்.
இந்த சம்மர் சீசனுக்கு ஜாலியாக பார்த்து ரசிக்க கூடிய படமாக பாஸ் மார்க்.. இலையில்லை பர்ஸ்ட் மார்க்கே வாங்கியுள்ளது இந்த 'கிங் லையர்'.