'காமெடி நைட்ஸ் வித் கபில்' எனும் காமெடி நிகழ்ச்சியை நடத்தி வந்த கபில் சர்மா, ஹீரோவாக அவதரித்திருக்கும் ரொமான்ட்டிக், காமெடி படம் தான் ''கிஸ் கிஸ்கோ பியார் கரோன்''.
ஷிவ் ராம் கிஷன் எனும் கபில் சர்மாவுக்கு சிம்ரன் கவுர் முன்டி, சாய் லோக்கர், மஞ்சிரி பத்னீஸ் எனும் மூன்று மனைவிகள். கூடவே தீபிகா எனும் எலி அவ்ரம் என்ற காதலியும் இருக்கிறார். தனது நண்பர் வருண் சர்மாவின் உதவியால் மூன்று மனைவிகளையும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் அடுத்தடுத்து தங்க வைக்கிறார். மூன்று பேரின் கணவர் கபில் தான் என்று மூவருக்கும் தெரியாது. நான்காவதாக எல்லியை திருமணம் செய்ய எண்ணும்போது ஏற்படும் பிரச்னைகள் என்ன.? எல்லியை அவர் திருமணம் செய்தாரா...? என்பதை காமெடியாக சொல்லியிருக்கிறது இந்த ''கிஸ் கிஸ்கோ பியார் கரோன்'' படத்தின் கதை.
கபில் வழக்கம் போல தனது டைமிங் காமெடிகளால் ரசிகர்களை கவருகிறார், ஆனால் நடிப்பு அந்தளவுக்கு எடுபடவில்லை. கபிலின் நடிப்பின் அநேக இடங்களில் மாஜி ஹீரோக்களான கோவிந்தா மற்றும் அனில் கபூர் எட்டி பார்க்கிறார்.
வருண் சர்மா தனது ரோலை சரியாக செய்திருக்கிறார். அவரைப்போலவே மஞ்சிரி பத்னீஸ், சிம்ரன் கவுர் முன்டி, சாய் லோக்கர், அர்பாஸ் கான், எலி அவ்ரம், சுப்ரியா பதக் ஆகியோரது நடிப்பும் ஓ.கே.,
முதன்முறையாக இயக்குநர் அப்பாஸ் முஸ்தான், காமெடி படத்தை கையில் எடுத்திருக்கிறார். ஆனால் அவருக்கு காமெடி படம் சுத்தமாக எடுபடவில்லை. படத்தில் நிறைய காமெடிகள் இருக்கிறது, ஆனால் அவையெல்லாமே கடிப்பதாகவே இருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சி உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது, ஆனால் அது படத்திற்கு சுத்தமாக எடுபடவில்லை.
''கிஸ் கிஸ்கோ பியார் கரோன்'' காமெடி படம் என்றாலும், கபில் சர்மாவுக்காக பார்க்கலாம். அதேசமயம் இந்தப்படத்தை காட்டிலும் கபிலின், 'காமெடி நைட்ஸ் வித் கபில்' நிகழ்ச்சி எவ்வளவோ பரவாயில்லை!