தினமலர் விமர்சனம்
வல்லமை தாராயோ, கொலகொலையா முந்திரிக்கா ஆகிய படங்களை இயக்கிய பெண் இயக்குநர் மதுமிதாவின் இயக்கத்தில் வௌிவந்திருக்கும் மற்றுமொரு படம் தான் மூணே மூணு வார்த்தை!
இயக்குநர் பெயர் மதுமிதாவாக இருந்துவிட்டு போகட்டும்... அதற்காக காட்சிக்கு காட்சி மது குடிக்கும் சீன்களை வலிய திணிக்க வேண்டுமா.? என்ன..? ஹீரோவும், அவரது நண்பரும், பீர்பாட்டிலும் கையுமாக இல்லாத காட்சிகளை விரல்விட்டு எண்ணி விடலாம் எனும் அளவிற்கு படம் முழுக்க குடிக்கும் காட்சிகள். என்ன ஆச்சு மதுமிதா..?! யார் தவறாக சொன்னது உங்களுக்கு குடிக்கும் சீன்கள் அதிகம் இருந்தால் படம் ஓடிவிடுமென்று.?
சரி அதுபோகட்டும், மூணே மூணு வார்த்தை படத்தின் கதை என்ன.? நாயகரும், அவரது நண்பரும் அடிக்கடி குடித்து, ஐடி கம்பெனி வேலையை விட்டுவிட்டு சொந்தமாக தொழில் தொடங்குகின்றனர். அதுவும் நம்பிக்கையுடன் இருப்பவரிடம் அவரது நம்பிக்கைக்குரியவர் சொல்ல தயங்கும் சேட் - பேட் நியூஸ்களை சோக செய்திகளை துணிச்சலாக சொல்வதை ஒரு வேலையாக்கி கொண்டு கைநிறைய கட்டுக்கட்டாக சம்பாதிக்கின்றனர். காசுக்காக விசாரிக்காமலேயே காதலியின் அக்கா திருமணத்தையும் நிறுத்துகின்றனர். அதன்பின் உண்மை தெரிந்து காதலியின் அக்காவுக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வைத்து காதலியை கைபிடிக்கிறார் ஹீரோ! கூடவே அவரது கார்ட்டூன் முக நண்பரும், தோழியை கரம் பிடிக்கிறார். எந்த காலத்தில் இருக்கீங்க.? என யாரும் இயக்குநரை கேட்டுவிடக் கூடாது.. என்பதால் கதையில் பூகம்பம், பேய் பிசாசு என இன்னும் கொஞ்சம் பீலாக்களை சேர்த்துவிட்டு அதையும் சரியாக பினீஷ் பண்ணாமல் ரசிகர்களை திராட்டில் விட்டிருக்கிறார் இயக்குநர்.
அதிலும், மூணே மூணு வார்த்தையில சொல்லு... என அடிக்கடி டைட்டீலை கொண்டு வந்து சேர்த்து கடுப்பும் ஏற்றுகிறீர்கள்! கூடவே எஸ்.பி.பி., லட்சுமி, இருவரையும் இணைத்து ஹீரோவுக்கு தாத்தா பாட்டி சென்ட்டிமென்ட்டை வேறு வலிய திணித்து ரசிகர்களுக்கு சொல்ல முடியாத மனவலியை ஏற்படுத்தியிருப்பதும் நியாயமா.? அம்மணி!
அர்ஜூன் சிதம்பரம், அதிதி செங்கப்பா, வெங்கடேஷ் ஹரிநாதன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், லட்சுமி, தர்ஷனா ராஜேந்திரன், கே.பாக்யராஜ், எம்.எஸ்.பாஸ்கர், எஸ்.பி.சரண், நிதின் சத்யா, ரோபோ சங்கர், ஆர்த்தி கணேஷ் என ஏகப்பட்ட புதுசு மற்றும் பழைய நட்சத்திரங்கள் எல்லோரும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர்.
மூணே மூணு வார்த்தை படத்தில் ஹீரோ அர்ஜூன் சிதம்பரம், திரைக்கதை புலி இயக்குநர் கே.பாக்யராஜிடம் அடிக்கடி தன் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை கதையாக சொல்லி திரைக்கதையாக தயார் செய்து திரைப்படமாக எடுக்க இருப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. நிஜத்தில் பெண் இயக்குநர் மதுமிதாவும், மூணே மூணு வார்த்தை படத்தை எடுப்பதற்கு முன் மொத்த கதையையும் பாக்யராஜிடம் சொல்லி விட்டு பிறகு இந்த படத்தை எடுத்திருந்தார் என்றால் நிச்சயம் ரசிகர்கள் தப்பித்திருப்பார்கள்!
கார்த்திகேய மூர்த்தியின் இசை, சீனிவாசன் வெங்கடேஷின் ஔிப்பதிவு இரண்டும் படத்திற்கு பெரிய ப்ளஸ். பாவம், படத்தொகுப்பாளர் கிரண் கன்டியின் கத்திரியை இன்னும் கொஞ்சம் சாணை பிடித்திருக்க வேண்டும். ஆயிரமிருந்தும் வசதிகள் இருந்தும் மதுமிதாவின் எழுத்து இயக்கத்தில், மூணே மூணு வார்த்தை - முடியல, தாங்க முடியல, தாங்கவே முடியல!! எனும் ரீதியில் முடிவது வேதனை!!