புதுமுகம் ராஜா - ஹரிப்ரியாவுக்கு கண்டதும் காதல்! அந்த காதலை இருவருமே வெளிக்காட்டிக் கொள்ளாமல் பழகி வருகிறார்கள். இந்நிலையில் இருவரும் நண்பர்களுடன் பெங்களூர் டூர் செல்கின்றனர். அங்கு ஓர் இரவு முழுவதும் இருவரும் தனியாக இருக்க வேண்டிய சூழல்! இருவரும் தனிமையில் இனிமை கண்டுவிட்டனர் என்று நட்பு வட்டாரம் சந்தேகம் கொள்ள, அந்த சந்தேகமே இருவரது வாழ்க்கையிலும் புயலை கிளப்புகிறது! அந்த புயல் இருவரையும் இணைத்ததா? பிரித்ததா...? என்பது க்ளைமாக்ஸ்!
ராஜா, ஹரிப்ரியா, பூமிகா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் மொத்தமும் நடிப்பிலும், இளமை துடிப்பிலும் ரசிகர்களை கட்டி போட்டுவிடுவது படத்தின் பலம்.
போபோ சசியின் இசை, கே.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்டுகளுடன் இயக்குநர் ஸ்ரீஹரி நானு, காதலின் மகத்துவத்தை, சந்தேகங்கள் சிதைத்து சின்னா பின்னாபடுத்திவிடுவதாக மெஸேஜ் சொல்லி இருக்கிறார். அதை இன்னும் துள்ளலாக சொல்லி இருந்தால் "துள்ளி எழுந்தது காதல்" ரசிகர்களையும் துள்ளி எழ வைத்திருக்கும்! அவ்வாறு இல்லாதது "கிள்ளி விழுந்தது காதல்" எனும் அளவில் போரடிக்கிறது!