தினமலர் விமர்சனம் » அன்புள்ள கமல்
தினமலர் விமர்சனம்
புற்று நோயாளிகளின் உணர்வுகளை உலகிற்கு உணர்த்தும்படியாக வெளிவந்திருக்கும் திரைப்புதினம் தான் "அன்புள்ள கமல்". "ஃபோர் பிரண்ட்ஸ்" எனும் பெயரில் கமல்ஹாசன், கெஸ்ட் ரோலில் நடித்து மலையாளத்தில் வெளிவந்து வெற்றி வாகை சூடிய திரைப்படம் தமிழில் "அன்புள்ள கமல்" ஆகி இருக்கிறது.
வெவ்வேறு குணாதிசயங்களும், வெவ்வேறு பொருளாதார சூழ்நிலைகளும் கொண்ட ஜெயராம், மீராஜாஸ்மின், ஜெய்சூர்யா, குஞ்சக்கோபன் ஆகிய நால்வரும் புற்றுநோயாளிகள், இவர்களது ஆசாபாசங்களை அந்த கூட்டாளிகளில் ஒருவரான கோடீஸ்வரர் ஜெயராமே நிறைவேற்ற களம் இறங்குகிறார். அவர்களின் ஆசாபாசங்கள் நிறைவேறியதா...? அதற்கு அவர்களின் உள்ளே முற்றிவரும் புற்றுநோய் எந்தெந்த விதத்தில் எல்லாம் தடையாக இருந்தது...? என்பதை கதையாகவும், காட்சிகளாகவும் காண்போரின் விழியோரம் கண்ணீர் எட்டிபார்க்கும் விகிதத்தில் சொல்லியிருக்கும் படம்தான் "அன்புள்ள கமல்!"
இதில் கமல், கெஸ்ட்ரோலில் நடித்திருந்தாலும் அவரது கேரியரில் பெஸ்ட் ரோல்! எனும் அளவு புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு பாத்திரத்தில் அழகாக மிளிர்ந்திருக்கிறார். அவரை மாதிரியே ஜெயராம், மீரா ஜாஸ்மின், ஜெய்சூர்யா, குஞ்சக்கோபன் உள்ளிட்ட மலையாள நட்சத்திரங்களும் மலைக்கும் அளவு நடித்து மனதை விட்டு அகல மறுக்கின்றனர். நால்வரின் நடிப்பும், நான்றென்றாலும் வாட்டசாட்டமான அவர்களது உருவம் அவர்களை புற்று நோயாளிகளாக ஏற்றுக்கொள்ள மறுப்பது படத்தின் பலவீனம்!
அணில் அய்யரின் ஒளிப்பதிவு ஓ.கே. எம்.ஜெயச்சந்திரனின் இசை ஒட்டவில்லை! எனினும் சாஜி சுரேந்தரனின் இயக்கத்தில் "அன்புள்ள கமல்", "அர்த்தமுள்ள கமல்!"