தினமலர் விமர்சனம் » கந்தா
தினமலர் விமர்சனம்
பத்திரிகையாளரும், ஆயிரம் சிறு கதைகளுக்கு மேல் எழுதிய இளம் எழுத்தாளரும், இயக்குனர் சரணின் உதவியாளருமான திருவாரூர் பாபு, பாபு கே.விஸ்வநாத் எனும் பெயரில் தமிழ் சினிமா இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் "கந்தா".
கதைப்படி, தஞ்சாவூரை சேர்ந்த படித்த இளைஞரான கரண், சில வருடங்கள் மலேசியாவிற்கு வேலைக்கு போய் கைநிறைய காசு பணத்துடன் ஊர் திரும்புகிறார். கரண் எதிர்பார்த்து திரும்பிய தஞ்சை காணாமல் போயிருக்கிறது. காரணம் தாதாயிசம்! இதில் கடுப்பாகும் கரணை அவ்வப்போது அவரது பால்ய காலத்து நண்பர்கள் பக்குவமாக பேசி கட்டுப்படுத்தி வர, ஒருநாள் தனக்கு கல்வியையும், வாழ்க்கையையும் வகையாக அமைத்துக் கொடுத்த வரது வாத்தியாரைத் தேடி புறப்படுகிறார் கரண். அப்பொழுது அவர் கண் எதிரேயே வரது வாத்தியாரை அடிக்கத் துரத்துகிறது ரவுடிக்கும்பல்! பொறுத்தது போதும் என பொங்கி எழும் கரண், அந்த கும்பலை நையப்புடைத்து அனுப்புகிறார். அவர்கள் தஞ்சையை கலக்கும் வில்லன் போஸின் ஆட்கள்! அப்புறம் விடுமா வில்லன் கோஷ்டி...?! கரணை விடாமல் துரத்துகிறது. போலீஸ்க்கு போகும் கரணுக்கு தாதா போஸ், தன் குருநாதர் வரது வாத்தியாரின் வாரிசு என்பது தெரிய வருகிறது. படிக்க வசதி இன்றி வாடிய தன்னை படிக்க வைத்து ஆளாக்கிய வரது சாரின் வாரிசு, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை என தஞ்சையை நஞ்சாக்குவது கரணுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை! வரது சார் விரும்பும் வகையில் போஸை திருத்த முற்படுகிறார். போஸ் திருந்தினாரா? கரண் வருந்தினாரா..? எனும் வித்தியாசமும், விறுவிறுப்புமான கதையுடன் கரண்-மித்ரா ஜோடியின் காதல் களியாட்டத்தையும் கலந்துகட்டி கந்தா படம் தந்திருக்கிறார் பாபு கே.விஸ்வநாத்!
கரண், கந்தா எனும் பாத்திரத்தில் மலேசியா ரிட்டர்னாக பந்தாவாக அறிமுகமாகிறார். வில்லன்களுடன் வித்தியாசமாக மோதுகிறார். நாயகி மித்ராவுடன் விறுவிப்பாக ஆடுகிறார், என்றெல்லாம் சொல்வதற்கு ஆசை தான். ஆனால் எல்லாமே ஏற்கனவே எங்கோ பார்த்த சாயலிலேயே இருப்பது பலவீனம். ஆனாலும் அவரது வாத்தியார் - ராஜேஷின் எண்ட்ரிக்குப்பின் படத்திற்கு புதிய பலமும், புத்தம் புதிய களமும் கிடைக்கிறது! வரது வாத்தியாரின் வாரிசுதான் தஞ்சையை கலக்கும் தாதா போஸ் என்பது ட்விஸ்ட்!
கதாநாயகி மித்ரா தேய்த்து வைத்த வெள்ளி குத்துவிளக்காக வருகிறார், போகிறார். அம்மணிக்கு நடிப்பு எனும் ஜொலிப்பு மட்டும் கம்மியாக இருக்கிறது பாவம்! அவருடன் வரும் குண்டு ஆர்த்தி கடிக்கிறார். ஆர்த்தியை விட காமெடி என்ற பெயரில் அதிகம் கடிக்கின்றனர் விவேகமில்லாத நடிகரும், செல்முருகனும்! அதேநேரம் கரணின் நண்பராக வரும் சத்யனை இந்தப்படத்தில் சகித்துக் கொள்ள முடிவது ஆறுதல்!
போலீஸ் அதிகாரி ரியாஸ்கான், அரசியல்வாதி காதல் தண்டபாணி உள்ளிட்டோர் கந்தாவுக்கு பலம்! அதேநேரம் இந்தப்படத்திலும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவரான ரியாஸ்கான், தன் மகனுக்கு வரதராஜன் என தன் பள்ளி ஆசிரியரின் (கரண் மாதிரி ரியாஸ்க்கும் ராஜேஷ் தான் ஆசிரியர்) பெயரை சூட்டியிருப்பது டிராமாவாகத் தெரிவதும் மாதிரியே, க்ளைமாக்ஸில் வில்லனுக்கு சுதந்திரதினமன்று காந்தி வேஷம் கட்டி போலீஸிடமிருந்து அவரை காப்பாற்ற போராடும் கரணின் சாதுர்யமும் புதுமை என்றாலும் நாடகத்தன்மையாக இருப்பது கந்தாவின் பலவீனம்!
ஆக மொத்தத்தில், சக்தி ஆர்.செல்வாவின் இனிய இசை, சிவக்குமாரின் அழகிய ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் பாபு கே.விஸ்வநாத்தின் எழுத்து - இயக்கத்தில்,
"கந்தா" பாதி "பந்தா!" மீதி...?!!----------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
முதல் படத்திலேயே மசாலா மாயையில் முழுக்க விழுந்து விடாமல் காந்திய விஷயத்தைக் கையில் எடுத்ததற்காக இயக்குநர் பாபு கே விஸ்வநாத்தைப் (திருவாரூர் பாபு) பாராட்டலாம்.
காந்தியவாதியான ஒரு நல்ல ஆசிரியரின் மகன் தாதாவாகிறான். அவனை என்கவுன்டரில் போட்டுத் தள்ள போலீஸ் துரத்துகின்றது. காந்தியவாதியால் வளர்க்கப்பட்ட கரண், அந்த தாதாவிற்கு காந்தி வேடம் போட்டுக் காப்பாற்ற முயல்கிறான். காந்தி வேடம் போட்டதால் அந்த தாதாவும் மனம் மாற, கடைசியில் என்ன நடந்தது என்பதுதான் கந்தா.
கரண் கச்சிதம். எல்லாம் இருந்தும் இவர் ஏன் ஒரு ரவுண்ட் வரவில்லை என்பது தெரியவில்லை.
கதாநாயகி மித்ரா ஓ.கே.!
நல்லாசிரியராக ராஜேஷ். அவர் முன்னால் அவரது மகனை அடிக்க கரண் தயங்கும்போது, ராஜேஷ் கண்ணை மூடிக் கொள்வது நல்ல காட்சி.
படத்தின் பெரும்பாலான காட்சிகளில் தஞ்சைப் பெரிய கோயில் தலைகாட்டுவது அழகாக இருக்கிறது.
கந்தா - வந்தேமாதரம்.
குமுதம் ரேட்டிங் - ஓகே