தினமலர் விமர்சனம் » அகடம்
தினமலர் விமர்சனம்
உலகில் முதன்முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் எனும் கின்னஸ் சாதனை சான்றிதழுடன் 2 மணிநேரம், 2 நிமிடங்கள் ஓடக்கூடிய விதத்தில் நல்லதொரு விழிப்புணர்வு மெஸேஜூடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் அகடம்
போலி மருந்துகளின் போக்கிரி தனங்களாலும், மனித உயிர்கள் பற்றி கவலைப்படாமல் அதை தயாரிப்பவர்களின் பொல்லாத குணங்களாலும், தன் குழந்தையையும், குடும்பத்தையும் அநியாயமாக இழக்கும் ஹீரோ, தன் மனைவியின் ஆவி உதவியுடன், போலி மருந்து பொறுக்கிகளின் கதையை முடிக்கும் கதை தான் அகடம் படத்தின் கையடக்க கரு, கதை, களம் எல்லாம்!
கதாநாயகர் தமிழ், போலி மருந்து தயாரிப்பாளர்களின் கூட்டாளியாகவே களம் இறங்கி, தன் மனைவி பாத்திமா எனும் ஸ்ரீபிரியங்காவின் உயிரற்ற உடலுடனும், உயிரோட்டமான ஆவியுடனும் கயவர்களை பயமுறுத்தி பழிதீர்க்கும் காட்சிகள் திக் திக் திகில் காட்சிகள்!
கதையின் நாயகி பாத்திமாவாக நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்கா கை குழந்தையுடன், ஆவியாக அசால்ட்டாக பயமுறுத்தியிருக்கிறார். சஞ்சய்-பாம்பே பாஸ்கர், ஜான் - ஸ்ரீனிஐயர், அசோக்-கலைசேகரன், பிச்சை பெருமாள்-சவரண பாலாஜி, குழந்தை அப்துல் கலாமாக வரும் மாஸ்டர் அஜெய், விலைமாதுவாக வரும் அனிஷா உள்ளிட்ட அனைவரும் தாங்கள் ஏற்ற பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர். பலே, பலே!
கே.பாஸ்கரின் பின்னணி இசை, இ.ஜே.நவுஷத்கானின் ஒளிப்பதிவு, இசட்.முகமது கிஷாக்கின் இயக்கம் எல்லாம் சேர்ந்து சில காட்சிகளை ஜவ்வாக இழுத்தாலும், நல்ல மெடிக்கல் மெசேஜ் உடன் சிறந்து நிற்கும்
அகடம், புதிய முயற்சிக்கு மகுடம்!
------------------------------------------------------------
கல்கி திரைவிமர்சனம்
கேமராவைக் கட் பண்ணாமல் முழு படத்தையும் எடுக்க முடியுமா? முடியும் என்று எடுத்துக்காட்டியிருக்கிறார்கள் "அகடம் திரைப்படக் குழுவினர். இந்தச் சாதனைக்காக உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று "கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்டு தி லார்ஜஸ் அன்கட் பிலிம் விருது பெற்றிருக்கிறார்கள்.
குழந்தைகளுக்கான போலிமருந்து தயாரித்து விற்கும் ஒரு கும்பலால் ஒரு குழந்தை இறந்து விடுகிறது. அதைத் தட்டிக் கேட்டு காவல்துறையில் புகார் கொடுக்கும் தாயையும் கொன்றுவிடுகிறார்கள். பயந்தாங்கொள்ளியான அவள் கணவன் அவர்களைப் பழிவாங்குகிறான். இந்த மையக் கருவை வைத்துக் கொண்டு கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் இசட். முகம்மது இசாக். மூன்று அடுக்குக் கட்டடத்தில் நடு இரவில் நடக்கும் இந்தச் சம்பவத்தை ஒளிபதிப்பாளர் இ.ஜெ. நௌசத் கான் மிக அழகாகப் படம் பிடித்ததுதான் மிராக்கிள். சஸ்பென்ஸ் கதைக்கு ஏற்ற மிரட்டல் இசையை தந்திருக்கிறார் கே. பாஸ்கர்.
படம் முழுக்க ஒரே காட்சி என்பதால் வசன உச்சரிப்பு. ஆக்ஷன் சரியாக இருக்கவேண்டும். அதில் எந்த விதத்திலும் குறையில்லாமல் பாம்பே பாஸ்கர், ஸ்ரீநிதி ஐயர், கலைசேகரன், ஸ்ரீபிரியங்கா சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நான்கு கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு கதையை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார்கள். பாடல்களே இல்லாமல் உரையாடலை, கேரக்டர் நகர்வை, காட்சி மாற்றத்தை மூன்று மாடிகளில் பல அறைகளில் பிரவேசித்து போர் அடிக்காமல் ஒரு அவார்ட் தமிழ்த் திரைப்படத்தை எடுத்திருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் காட்சிகளில் சில கெட்ட வசனங்கள், மது வாடை வீசும் காட்சிகள் நெருடுகிறது. ஒரு நல்ல கருத்தைச் சொல்ல நல்ல காட்சிகளைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
திரைக்கதை, கேமரா, இசைதான் படத்தின் ஹீரோ. இரண்டு மணிநேரம் என்ன நடக்குமோ என்று எதிர்பார்க்க வைத்திருக்கிறார்கள்.
அகடம் - மிரட்டல்.