Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

நேரம்

நேரம்,Neram
28 மே, 2013 - 12:10 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » நேரம்

   

தினமலர் விமர்சனம்



"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்", "பீட்சா", "சூது கவ்வும்" படங்களின் வரிசையில் வித்தியாசமான கதையம்சத்தில் விறுவிறுப்பாக வெளிவந்திருக்கும் படம் தான் "நேரம்". என்ன ஒரே மாற்றம்.? விஜய் சேதுபதிக்கு பதில் இதில் நிவின் எனும் புதுமுகம் கதாநாயகராக அறிமுகமாகியிருக்கிறார் அவ்வளவே!

அமெரிக்காவில் சின்னதாக ஒரு பாம் வெடிக்க (குண்டு அல்ல...), இந்தியாவில் "நேரம்" ஹீரோ வெற்றி எனும் நிவினுக்கு கைநிறைய சம்பளத்துடன் கூடிய ஐ.டி. கம்பெனி வேலை பறிபோகிறது. தங்கையின் திருமணத்திற்காக ஊரையே தன் வட்டித் தொழிலால் கட்டி மேய்க்கும் வட்டி ராஜா எனும் சிம்ஹாவிடம் கைநீட்டி கொஞ்சம் பணம் அதிக வட்டிக்கு வாங்குகிறார். கூடவே சின்ன வயது முதல் கூட படித்த வேணி எனும் நாயகி நஸ்ரியா நசிம்மை காதலிக்க தொடங்குகிறார். முதலில் இவர்களது காதலை ஏற்றுக்கொள்ளும் வேணியின் அப்பா தம்பிராமையா, நிவினுக்கு வேலை இல்லை என்று தெரிந்ததும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். வேணி, வெற்றியுடன் ஓடிப்போய் வாழ வீட்டை விட்டு கிளம்புகிறார். அதேநாளில் வட்டிராஜாவுக்கு ஐம்பதாயிரம் வட்டி பணத்தை செட்டில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் வெற்றி!

வீட்டில் இருந்து வெளியேறிய வேணி, வெற்றிக்காக வெயிட் பண்ணும்போது பட்டபகலில் தனது தங்க செயினை வழிப்பறி கொள்ளையர்களிடம் பறி கொடுக்கிறார். அதே நேரம் வெற்றியும், நண்பரிடம் வட்டிராஜாவுக்கு கொடுக்க வாங்கி வந்த ஐம்பதாயிரம் பணத்தை பிட்பாக்கெட் பேர்வழிகளிடம் பறிகொடுத்துவிட்டு பரிதவித்து போகிறார். இந்நிலையில் ஊரில் இருந்து வெற்றியை தேடி வரும் அவரது தங்கை புருஷன், வரதட்சனை பணத்தின் மீதியை பிஸினஸ் செய்யப்போகிறேன் பேர்வழி... என வாங்கி போக வருகிறார். வேணியின் அப்பா போலீஸ்க்கு போகிறார். காத்திருக்கும் காதலி, தேடும் போலீஸ், டவுரி மீதியை கேட்கும் மச்சான், வட்டி ராஜாவின் கெடு என ஏகப்பட்ட சிக்கலில் தனது கெட்ட நேரத்தால் சிக்கி தவிக்கும் ஹீரோ வெற்றி எனும் நிவினுக்கு நல்ல நேரம் பிறந்ததா?, இழந்ததை எல்லாம் மீட்டாரா? என்பது நேரம் படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!

"உன்னை கட்டிக்கப்போறவ ரொம்ப கஷ்டப்படுவா... என எங்கம்மாவும், ப்ரண்ட்ஸூம் சொல்லுவாங்க, கஷ்டப்பட வர்ரியா..." என தன் காதலை நாசுக்காக வெளிப்படுத்தும் வெற்றி எனும் நிவின், வட்டிராஜாவிடம் பணம் வாங்க போன இடத்தில் அவர் பண்ணும் சேட்டைகளால் காட்டும் முகபாவனைகள், தேர்ந்த நடிகர்களையே திக்குமுக்காட செய்துவிடும் ரகம்! மனிதர் முதல் படத்திலேயே பர்ஸ்ட்கிளாஸில் பாஸ் செய்து விடுகிறார். கீப்இட் அப் நிவின்!

நாயகர் மாதிரியே, நாயகி வேணியாக வரும் நஸ்ரியா நசீமும் நடிப்பிலும் சரி, குடும்பபாங்கிலும் சரி செம சூப்பர்ப்! அம்மணி அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் கிளாமர் காட்டினார் என்றால் தமிழ் சினிமாவின் நம்பர்-ஒன் இடத்திற்கு போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...!

வில்லன் வட்டி ராஜாவாக வரும் சிம்ஹா, செம சூப்பர்ப்பா! கழுத்து நிறைய தங்கசங்கிலிகளும், கூட இரண்டு கருப்பு சிவப்பு அடியாட்களுமாக படு பந்தாவாக வட்டி வசூலிக்கும் இவரது பாணியே தனி. டச்போனை ஆப்ரேட் செய்யத்தெரியாமல் "பத்தாயிரம் ரூபாய்க்கு போன் பட்டன் இல்லை... வேஸ்ட்!" என அவர் அலுத்துக் கொள்ளும் ஒரு காட்சி போதும் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது!

வேணியின் அப்பா தம்பிராமையா, எஸ்.ஐ., கட்டகுஞ்சாக வரும் ஜான் விஜய், நாசர், அவரது தம்பி மாணிக்கம் அலைஸ் மாணிக் - அனந்த்நாக், லைட்ஹவுஸ் - ரமேஷ் திலக், காளான் - ஆனந்த், ஜான் - சபரீஷ் வர்மா உள்ளிட்ட ஒவ்வொரு பாத்திரமும் பலே சொல்ல வைக்கும் படைப்புகள்!

அதேநேரம் ஊரிலேயே ஒரே ஒரு வட்டிக்காரர் இருப்பது மாதிரியும், அவரிடமே ஹீரோ, ஹீரோவிடம் பிக்பாக்கெட் அடிக்கும் ஆசாமிகள், ஹீரோவுக்கு வேலை தரும் நாசரின் தம்பி என எல்லோரும் அநியாய வட்டிக்கு கடன் வாங்கியிருப்பது, எஸ்.ஐ., ஜான் விஜய்க்கு கட்ட குஞ்சு என வித்தியாசமாக பெயர் சூட்டியிருக்கும் இயக்குனர், நாயகியின் அப்பா தம்பி ராமைய்யாவுக்கு சரவணன் என சாதாரணமாக அவரது வயதுக்கு பொருந்தாத பெயரை சூட்டியிருப்பது உள்ளிட்ட ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், டைட்டில் கார்டு போடும் இடத்தில் விதவிதமான கை கடிகாரங்கள், சுவர் கடிகாரங்கள், காலமானிகள் என ஆரம்பத்திலேயே நம்மை வாய்பிளக்க வைக்கும் இயக்குனர், அடுத்தடுத்த காட்சிகளிலும் நமது திறந்த வாயை மூட விடாமல் இறுதிவரை அழைத்து செல்வது சிலிர்ப்பு!

ராஜேஷ் முருகேஷனின் மிரட்டும் பின்னணி இசையும், ஆனந்த் சி.சந்திரனின் அசத்தும் ஒளிப்பதிவும், பிரதீப்பாலாரின் டைமிங் வசனங்களும், அல்போன்ஸ் புத்ரனின் எழுத்து - இயக்கத்தில் "நேரத்தை - நல்ல நேரம்" ஆக்கியுள்ளன என்றால் மிகையல்ல!

மொத்தத்தில், "நேரம்" - ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இப்பட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் "நல்ல நேரம்!"



--------------------------------------------------------------


குமுதம் சினி விமர்சனம்



விஜய் சேதுபதி டைப் படம்! கொஞ்சம் கதை, நிறைய சிரிப்பு என்று அதே யூத் ஃபார்முலா!

டைட்டிலில் கடவுளில் ஆரம்பித்து, மாஜிக் காதலிகள் வரை நன்றி சொல்லியிருப்பது புதுமை. இயக்கம் அல்ஃபோன்ஸ் புத்திரன்.

மாலை ஐந்து மணிக்குள் வட்டி ராஜாவுக்கு ஹீரோ காசு தராவிட்டால் ஆளையே காலி செய்து விடுவான். நேரம் டிக்... டிக்... டிக்.... அங்கே இங்கே காலில் விழுந்து காசு ஏற்பாடு செய்து கொண்டு போனால், அதை யாரோ பிக்பாக்கெட் அடித்து விடுகிறார்கள். இந்தக் கொடுமையில் காதலி வேறு வீட்டை விட்டு ஓடி வருகிறாள். ஹீரோ என்ன செய்தான்? அவனுக்கு நல்ல நேரமா? கெட்ட நேரமா? என்பதுதான் நேரம்!

தலைக்கு மேல் சாண் போனால் என்ன? பேன் போனால் என்ன? என்ற தவிப்பை நன்றாகக் காட்டுகிறார் ஹீரோ நவின். கதாநாயகி நஸ்ரியா நஸிம் செமை! அந்தக் கண்கள். உதடுகள். ஏன் மூக்குக்கும் உதடுக்கும் இடைப்பட்ட தண்டவாளப் பிரதேசம் என்று எல்லாமே க்யூட்.

படம் ஓடுகிறதோ இல்லையோ படத்தில் எல்லோருமே எப்போதும் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்! இது யார்? பிக்பாக்கெட் அடித்தது அவனா? செயினைத் திருடியது இவனா? இவன் ஏன் இவனைத் துரத்துகிறான்? என்று அங்கங்கே குழப்பம் ஏற்படுவதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.

இன்ஸ்பெக்டராக வரும் ஜான் விஜய் நச். அந்த வட்டி ராஜா யாருங்க? டெரராக அவரைக் காட்டினாலும் பார்க்க சிப்பு சிப்பா வருது! பேசாம காமெடி ரூட்டுக்கு மாறிடுங்க ராசா!

தட்டுத் தடுமாறி ஓடுகிறது கடிகாரம்!

குமுதம் ரேட்டிங்: ஓகே



------------------------------------------------------------


கல்கி சினி விமர்சனம்



“நேத்துவரைக்கும் அவன் டீ க்ளாஸ்... இன்னைக்கு அவன்தான் சொஸைட்டில ஹைக்ளாஸ் மச்சி. நேரம்னு ஒண்ணு இருந்தா இப்படித்தான் வொர்க்-அவுட் ஆகணும்.’ - ஊருக்குப் பத்து பேராவது இப்படிப் புலம்பிட்டுத் திரிவாங்க. அந்த “டைம்’ ஒர்க் - அவுட் ஆகும் கான்செப்ட்தான் “நேரம்’ படத்தின் கதை.

புதுமுக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனுக்கு தன் முதல் படத்திலேயே வெற்றிக்கனி. நம்பிக்கையான புதுமுக இயக்குனர் வரிசையில் சேர்ந்துவிட்டார் அல்போன்ஸ். கெட்ட நேரத்தில் ஆரம்பித்து நல்ல நேரத்தில் முடிகிற திரைக்கதையில் முடிந்த அளவுக்கு காதல், காமெடி, சென்டிமெண்ட், கலவரம்.... எல்லாவற்றையும் கலந்து கொடுத்ததில் கச்சிதம். கட்டுத்திட்டான திரைக்கதையால் கதை அங்கு இங்கு என நகராமல் இலக்கு நோக்கி ஓடுகிறது!

புதுமுக ஹீரோ நவீனுக்கு நடிக்கவும், துடிக்கவும் தெரிந்திருக்கிறது. பணத்தைப் பறிகொடுப்பதும் அதனை மீட்க முடியாமல் திணறும்போதும் அந்தோ பரிதாபம். முயன்றால் ஆரம்ப கால மாதவன் இடத்தை நவீன் பிடிக்கலாம்.

ஹீரோயின் நஸ்ரின் அழகு, அழகு, அழகு. அவர் வருவது ஆறேழு காட்சிகளே... ஆனால் அழுதாலும் சிரித்தாலும் அத்தனை அழகு. நஸ்ரினைத் தந்த மலையாளப் பூமிக்கு வணக்கமும், வந்தனமும்.

“சூது கவ்வும்’ படத்தில் காமெடி பீஸாக ஆக்ட் கொடுத்த கிஷோர்தான் இந்தப் படத்தில் வில்லன். திணறத் திணற அதிரடியாகச் செய்திருக்கிறார். வார்ம் வெல்கம் பாஸ்!

தம்பி ராமையா வரும் காட்சிகள் எல்லாம் சிரிப்பு வெடிகள்! “சரவணன்’ என்கிற தம் பெயரை நான் வளர்த்துவிட்டேன் அதனால், “சரவணர்’ என்று சொல்லும் இடத்திலிருந்து ஆரம்பித்து விடுகிறது அவரது அதகளம்!

இயக்குனருக்கு இணையாகக் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு நபர் வசனகர்த்தா பிரதீப் பாலார். “பட்டனே இல்லாத போனுக்கு எதுக்குடா பத்தாயிரம்’, “என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு கஷ்டப்படடுவான்னு ஜாதகத்துல இருக்கு. நீ கஷ்டப்பட வர்றியா’, தம்பி ராமையா போலீஸ் ஸ்டேஷனுக்கு எப்படிப் போகறது என்று கேட்கும் இடத்தில், “இந்தா... இவனைப் போட்டுத் தள்ளு நீ போலீஸ் ஸ்டேசன் போயிடலாம்’ என்பது போன்ற வசனங்கள் மத்தாப்பூப் பொறி!

ராஜேஷ் முருகேசனின் இசையில் பிஸ்தா பாடல் சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால், பின்னணி இசையில் வசனங்கள் காயப்பட்டுப் போகிறது! ஆனந்த் சந்திரனின் ஒளிப்பதிவில் வெளிச்சமும், விவேகமும் கம்மி!

இயக்குனரே எடிட்டர் என்பதால் எங்கும் தடுமாறாத எடிட்டிங்! சில இடங்களில் லாஜிக் உதைத்தாலும் “டைம்’ மேஜிக் ஒர்க் அவுட் ஆனதால் ரசிகன் ரசித்துச் சிரிக்கிறான்!

நேரம் - ஒர்க் அவுட் ஆகிடுச்சு!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

நேரம் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in