ஆவேசம் (மலையாளம்),Aavesham

ஆவேசம் (மலையாளம்) - பட காட்சிகள் ↓

Advertisement
3.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : நஸ்ரியா பஹத் பாசில் மற்றும் அன்வர் ரஷீத்
இயக்கம் : ஜித்து மாதவன்
இசை : சுஷின் ஷியாம்
நடிப்பு : பஹத் பாசில், மன்சூர் அலிகான், ஆசிஷ் வித்யார்த்தி
வெளியான தேதி : 11 ஏப்ரல் 2024
நேரம் : 2 மணி 38 நிமிடம்
ரேட்டிங் : 3.25 / 5

கேங்ஸ்டர் கதையம்சத்தில் இதுவரை இப்படி ஒரு கோணத்தில் ஒரு படம் வந்திருக்குமா என்கிற ஆச்சரியத்துடன் வெளியாகியிருக்கும் படம் தான் ஆவேசம்.

கிராமத்தில் இருந்து கல்லூரியில் சேரும் மூன்று மாணவர்கள், சீனியர்களின் ராக்கிங் டார்ச்சருக்கு ஆளாகிறார்கள். சிட்டியில் நமக்கென தட்டிக்கேட்பதற்கு ஒரு குரூப் இருந்தால் நன்றாக இருக்குமே என ஒவ்வொரு ஒயின்ஷாப்பாக சென்று ஏதோ ஒரு கேங்ஸ்டர் குரூப்பிடம் நெருக்கமாக முயற்சிக்கிறார்கள். அப்படி எதிர்பாராத விதமாக அவர்களுக்கு அறிமுகமாகிறார் கேங்ஸ்டர் ரங்கா என்கிற பஹத் பாசில்.

இவர்கள் மீது ஏற்பட்ட அன்பால் தனது சொந்த சகோதரர்களை போல பார்த்துக் கொள்ளும் பஹத் பாசில் அவர்களுக்கென தனி வீடு, பைக், சாப்பாடு என எல்லாமே கொடுத்து மேலும் தாங்கள் சம்பவம் செய்யும் இடங்களுக்கு எல்லாம் அழைத்தும் செல்கிறார். கல்லூரியில் இவர்களை ராக்கிங் செய்த குரூப்பை போட்டு பொளந்து எடுக்கிறார். இதனால் குஷியாகும் இந்த மூன்று இளைஞர்களும் படிப்பில் கோட்டை விடுகின்றனர். இன்னும் 15 நாட்களுக்குள் அடுத்த தேர்வு எழுதி பாஸ் ஆகவிட்டால் பெற்றோரிடம் சொல்லிவிடப்போவதாக கல்லூரி முதல்வரால் அழைத்து எச்சரிக்கப்படுகின்றனர்.

தாதாக்களுடன் சுற்றுவதை என்ஜாய் செய்த இவர்கள் ஒரு கட்டத்தில் அதுவே அலுத்துப்போய் படிப்பில் கவனம் செலுத்த நினைத்தாலும் பஹத் பாசிலின் அன்புக்கட்டளை மற்றும் அதிரடி செயல்களால் அது முடியாமல் போகிறது. இதனால் பஹத் பாசிலிடம் இருந்து விலக நினைத்து செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்து இரண்டு நாட்கள் எஸ்கேப் ஆகிறார்கள். ஆனால் பஹத் பாசிலோ இவர்களை காணாமல் பதறிப்போய், இவர்களை தேடுவதற்காக கல்லூரி உள்ளிட்ட இடங்களில் அதிரடி நடவடிக்கைகளில் இறங்குகிறார்.

இதற்கு ஒரு முடிவு கட்ட நினைக்கும் மூவரும் பஹத் பாசிலின் குருவும் அவரது தற்போதைய எதிரியுமான மன்சூர் அலிகானின் உதவியை நாடுகிறார்கள். பஹத் பாசில் தனியாக இருக்கும் சமயத்தில் அவருக்கு செய்தியை அனுப்பி வரவழைக்கிறார்கள். இறுதியில் என்ன நடந்தது என்பது கிளைமாக்ஸ்.

கல்லூரி உண்டு.. ஆனால் மாணவர்களின் காதல் காட்சிகள் ஒரு சொட்டு கூட இல்லை.. கதாநாயகன் உண்டு.. ஆனால் கதாநாயகி இல்லை.. கேங்ஸ்டர் படம்.. ஆனால் மெயின் வில்லன் என யாருமே இல்லை.. இப்படி படம் முழுக்க பல ஆச்சரியங்களுடன் நம்மை இருக்கையில் இழுத்துப் பிடிக்கிறது இந்த ஆவேசம்.

இதற்கு முன் இவர் இப்படி நடித்தது இல்லை என உறுதியாக சொல்லும் விதமான ஒரு அட்ராசிட்டி கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பஹத் பாசில். அவரது உடல் மொழி, கன்னடம், மலையாளம் என கலந்து அவர் பேசும் ஒரு விதமான பாஷை, ஒயிட் அண்ட் ஒயிட் உடையில் கழுத்து மற்றும் கைகள் நிறைய தங்க நகைகளுடன் பார்ப்பதற்கே வித்தியாசமாக காட்சியளிக்கிறார், தன்னுடைய அடியாட்களிடம் காட்டும் அன்பு கலந்த அதிகாரமாகட்டும், தன்னை நம்பி வந்த இளைஞர்களை சொந்த சகோதரர்களாக நினைத்து உரிமை எடுத்து நடந்து கொள்வதாகட்டும் எதிலுமே தனித்து தெரிகிறார் பஹத் பாசில். குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வரை நான்கைந்து சண்டைக் காட்சிகளில் அவர் சண்டையே போடாமல் வெறும் ஆவேசம் மட்டுமே காட்டுவது சினிமாவுக்கே புதுசு. அதற்கு அவர் சொல்லும் காரணமும் கிளைமாக்ஸில் அவரே அதை மீறும்போதும் தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளுகிறது.

இந்த படத்தில் நமக்கு பஹத் பாசிலை தவிர தெரிந்த முகம் என்றால் படத்தின் துவக்கத்திலும் கிளைமாக்ஸிலும் மட்டுமே வரும் மன்சூர் அலிகான் தான். பஹத் பாசிலின் குருவாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் தன்னுடைய உடை, கண்ணாடி, நகை அணியும் ஸ்டைல்களை எல்லாவற்றையும் தன்னிடம் இருந்து அவர் திருடிக் கொண்டார் என்பதாலும் அதனால் தன்னுடைய தனித்தன்மையை போய்விட்டது என்பதாலும் தான் அவரை கொல்ல துடிக்கிறேன் என்று அவர் சொல்லும் காரணம் சிரிக்காதவர்களை கூட சிரிக்க வைத்து விடும்.

கல்லூரி மாணவர்களாக வரும் மூன்று இளைஞர்களுமே படம் முழுவதும் துறுதுறுப்பாகவும் துடிப்பாகவும் இருக்கிறார்கள். கூடவே தங்களது செயல்பாடுகளால் நகைச்சுவைக்கு உத்தரவாதமும் தருகிறார்கள். அதேபோல பஹத் பாசில் கூட்டத்தில் அடியாட்களாக வரும் சிலர் கூட காமெடியை கையில் எடுத்துக்கொண்டு கலகலப்பூட்டுகின்றனர். அதிலும் அந்த டிரைவர் தாத்தாவின் திடீர் ஜாக்கிசான் அவதாரம் விசில் பறக்க வைக்கிறது. கல்லூரியில் சீனியர் கேங் தலைவனாக வரும் மாணவனை பார்க்கும்போதே சிரிப்பு வந்தாலும் அவர் பண்ணும் வேலைகள் எல்லாம் அதிரடியாக இருக்கிறது. கல்லூரி முதல்வராக ஒரே ஒரு காட்சியில் மட்டுமே வந்து விட்டுப் போகிறார் ஆசிஷ் வித்யார்த்தி.

சமீர் தாஹிரின் ஒளிப்பதிவு இந்த கேங்ஸ்டர் படத்தை இன்னும் ஒரு படி தூக்கி நிறுத்துகிறது. அதிலும் குறிப்பாக பஹத் பாசிலின் பிறந்தநாள் கொண்டாட்ட பாடலை படமாக்கிய விதம் பிரமிக்க வைக்கிறது. கூடவே சுஷின் ஷியாமின் பாடலும் பின்னணி இசையும் இந்த கேங்ஸ்டர் படத்தை உற்சாக துள்ளலுடன் ரசிக்க வைக்கிறது.

ஒரு கேங்ஸ்டர் படத்தை முழுக்க முழுக்க காமெடி பாணியில் தர முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் ஜித்து மாதவன். சாதாரணமாக கடந்து சென்றிருக்க வேண்டிய ஒரு பிரச்சனைக்காக தேவையில்லாமல் ஒரு பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொள்ளும் இன்றைய பல இளைஞர்களின் போக்கை அழகாக வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். அதேசமயம் கல்லூரி மாணவர்களை தனது தம்பிகளாக நினைத்து அன்பு காட்டி அனைத்தையும் அவர்களுக்கு செய்து கொடுக்கும் பஹத் பாசில் அவர்களுக்காக விலைமாதுகளையும் ஏற்பாடு செய்து தருவது மட்டும் சற்று நெருடலாக இருக்கிறது. ஒரு ஆவேசமான கேங்ஸ்டர் தலைவனாக பஹத் பாசிலை காட்டியதுடன் சண்டைக் காட்சிகளில் அவரை வித்தியாசமாக பயன்படுத்தியதில் அடடே என ஆச்சரியப்படுத்துகிறார் ஜித்து மாதவன். ஜிகர்தண்டா பாணியில் இதுவும் இன்னொரு வகை காமெடி கேங்ஸ்டர் ட்ராமா என்பதில் சந்தேகமே இல்லை.

ஆவேசம் : அன்புக்கு நான் அடிமை

 

பட குழுவினர்

ஆவேசம் (மலையாளம்)

  • நடிகர்
  • இயக்குனர்

பஹத் பாசில்

கேரள மாநிலம் ஆலப்புழாவில், 8ம் தேதி ஆகஸ்ட் மாதம் 1982ம் ஆண்டு பிறந்தவர் பஹத் பாசில். பிரபல மலையாள இயக்குநர் பாசிலின் மகனான இவர், காயிதம் தூரத் என்ற படத்தின் மூலம் தனது சினிமா கேரியரை துவங்கிய பஹத், தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். தற்போது மலையாள சினிமாவின் இளம் முன்னணி நடிகராக விளங்குகிறார். நடிகை நஸ்ரியா நஸீமை காதலித்து மணந்து கொண்டார்.

மேலும் விமர்சனம் ↓