அதோ முகம்,Atho mugam
Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ரீல் பெட்டி
இயக்கம் - சுனில் தேவ்
இசை - மணிகண்டன் முரளி, சரண் ராகவன்
நடிப்பு - எஸ்பி சித்தார்த், சைதன்யா பிரதாப்
வெளியான தேதி - 1 மார்ச் 2024
நேரம் - 2 மணி நேரம் 10 நிமிடம்
ரேட்டிங் - 3/5

புதுமுகங்களின் உருவாக்கத்தில் வரும் சில படங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும். அந்த விதத்தில் கொஞ்சம் ஆச்சரியப்படுத்தியுள்ள படம்தான் இந்த 'அதோ முகம்'.

எத்தனையோ த்ரில்லர் படங்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளன. குற்றம் செய்வது யார் என்ற சஸ்பென்ஸை திரைக்கதையில் எப்படி வைத்துள்ளார்கள் என்பதுதான் படத்தின் ஜீவனாக இருக்கும். இந்தப் படத்தில் கடைசி வரையில் நாம் யூகிக்க முடியாதபடி அதை வைத்து அதிர்ச்சியும் கொடுத்திருக்கிறார்கள். அதுதான் இந்தப் படத்தின் ஹைலைட்டான விஷயம். அறிமுக இயக்குனர் சுனில் தேவ் முதல் படத்திலேயே ரிஸ்க்கான ஒரு கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஊட்டி எஸ்டேட்டில் மேனேஜராக வேலை பார்ப்பவர் எஸ்பி சித்தார்த். அவரது காதல் மனைவி சைதன்யா பிரதாப். மனைவிக்கு அடிக்கடி சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து அதில் தோற்றுப் போகிறார் சித்தார்த். அடுத்து ஒரு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக மனைவியின் மொபைல் போனில் ஒரு 'ஸ்பை ஆப்' ஒன்றைப் பொருத்தி அதில் வரும் வீடியோக்களை வைத்து 'சர்ப்ரைஸ் கிப்ட்' கொடுக்க நினைக்கிறார். நேரடியாக வீடியோக்களை பார்க்கும் வசதி கொண்ட அந்த 'ஆப்' மூலம் பார்க்கும் போது மனைவி சைதன்யாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் வருகிறது. அவரை அடிக்கடி ஒருவர் வந்து பார்த்துவிட்டுப் போகிறார். அதோடு மட்டுமல்ல அந்த நபரை கொன்றும் விடுகிறார் சைதன்யா. அவர் ஏன் அந்த நபரைக் கொல்ல வேண்டும். அந்தக் கொலைக்குப் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அறிமுக நாயகன் எஸ்பி சித்தார்த்துக்கு முதல் படத்திலேயே நடிக்க நல்ல வாய்ப்பு. முடிந்தவரையில் அவருடைய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதிர்ச்சியும், ஆச்சரியமும், ஏமாற்றமும் கலந்த ஒரு கதாபாத்திரம். மனைவி போனில் விளையாட்டாக ஒரு 'ஆப்'ஐ வைக்கப் போக அதனால் அடுத்தடுத்து சிக்கலை சந்திக்கிறார். கடைசியில் அவரையே கொலைக் குற்றவாளியாகவும் மாற்றிவிடுகிறார்கள். தன்னை இந்த வலையில் சிக்க வைப்பது யார் என்பதை பரபரப்பாகக் கண்டுபிடிக்க முனைகிறார். அறிமுகப்படத்தில் கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்து ஓரளவிற்குப் பெயர் வாங்கிவிடுகிறார்.

சித்தார்த்தின் மனைவியாக சைதன்யா பிரதாப். சினிமாத்தனமில்லாத சாதாரண முகம். ஆனால், நடிப்பில் சைதன்யா சாதாரணமானவரல்ல என காட்சிக்குக் காட்சி வியக்க வைக்கிறார். திடீரென ஒரு கொலையையும் செய்துவிட்டு அதிர்ச்சியளிக்கிறது அவரது கதாபாத்திரம். போகப் போக அவர் யார் என்பது தெரிய வருவதெல்லாம் திரைக்கதை யுத்தியின் சிறப்புகளில் ஒன்று.

சித்தார்த், சைதன்யா இருவரைச் சுற்றியே அதிகம் நகரும் கதை. இருந்தாலும் படத்தில் வரும் சில துணைக் கதாபாத்திரங்களுக்கும் நல்ல முக்கியத்துவம் உள்ளது. சைதன்யாவை பிளாக் மெயில் செய்பவராக சரித்திரன், சித்தார்த்தின் நண்பனாக ஜேஎஸ் கவி, டீ எஸ்டேட் முதலாளி மகனாக அனந்த் நாக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஊட்டியில் நடக்கும் கதை என்றாலே பசுமையைத்தான் காட்டுவார்கள் ஒளிப்பதிவாளர்கள். ஆனால், இந்தப் படத்தில் பயத்தையும் சேர்த்து பதிவு செய்யும் விதத்தில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் அருண் விஜய்குமார். சரண் ராகவன் பின்னணி இசை காட்சிகளோடு பரபரப்பைக் கூட்டுகிறது.

மொபைல் போன்களைப் பயன்படுத்துவதன் மூலம் இப்படியான சில விஷயங்களையும் செய்ய முடியும் என்பது பலருக்கான பாடம். நாம் நம்பும் பலரே நமக்கு விரோதிகளாகவும் இருப்பார்கள் என சில அதிர்ச்சிகளையும் இயல்பாக சேர்த்து கொடுத்திருக்கிறார் இயக்குனர். கதை, திரைக்கதையில் இன்றைய தொழில்நுட்பங்கள், சில துரோகங்கள் என எழுதிய விதம் ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் கொஞ்சம் குழப்பம் வந்தாலும் அந்த 'சஸ்பென்ஸ்' தான் படத்தை அதிகம் காப்பாற்றுகிறது.

அதோ முகம் - அறிவுமுகம்…

 

அதோ முகம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

அதோ முகம்

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓