மருத,Marutha
Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - பிக் வே பிக்சர்ஸ்
இயக்கம் - ஜிஆர்எஸ்
இசை - இளையராஜா
நடிப்பு - ஜிஆர்எஸ், ராதிகா, சரவணன், விஜி, லவ்லின்
வெளியான தேதி - 21 ஜனவரி 2022
நேரம் - 2 மணி நேரம் 45 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் பலவிதமான சம்பிராதயங்கள், பழக்க வழக்கங்கள், நடைமுறைகள், செய்முறைகள் என இருக்கின்றன. அவற்றில் ஒன்றாக தென் மாவட்டங்களில் நடைபெறும் 'செய்முறை' என்ற நிகழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் இது.

அந்தக் காலத்தில் வசதி, வாய்ப்புகளில் குறைவாக இருக்கும் உறவினருக்கு அவரது உற்றார், உறவினர் பண உதவி செய்து உதவும் வழக்கம்தான் பிற்காலத்தில் 'செய்முறை' என அழைக்கப்பட்டது. ஒரு நல்ல விஷயத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது போகப் போக தங்களது பண வசதி, அந்தஸ்து ஆகியவற்றை வெளிக்காட்டுவதாக மாறியது. அதனால், கொலை வரை கூட பல சம்பவங்கள் நடந்துள்ளது. அந்த 'செய்முறை'யை ஒரு பதிவாக சொல்வதற்காகவே இந்தப் படம் என்கிறார் இயக்குனர் ஜிஆர்எஸ்.

சரவணன், ராதிகா இருவரும் அண்ணன் தங்கை. ராதிகாவின் மகன் காது குத்திற்கு அண்ணன் சரவணன் ரொக்கப் பணம், தங்கச் செயின் என செய்முறை செய்து அசத்துகிறார். பதிலுக்கு சரவணன் குடும்பத்து விசேஷம் ஒன்றில் ராதிகா செய்முறை செய்ய வராமல் போகிறார். அதனால், சரவணன் மனைவியான விஜி சந்திரசேகர், ராதிகா கணவரான மாரிமுத்துவை அவமானப்படுத்த, அவர் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால், அண்ணன், தங்கையான சரவணன், ராதிகா பிரிகின்றனர். பல வருடங்கள் கழித்தும், அந்த செய்முறையை எப்படியாவது வாங்க வேண்டுமென துடிக்கிறார் விஜி. ராதிகாவின் மகனான ஜிஆர்எஸ் கடன் வாங்கியாவது செய்முறை செய்ய நினைக்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

90களில் இந்தப் படம் வந்திருந்தால் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும். இந்தக் காலத்தில் இப்படியான அண்ணன், தங்கை பாசத்தை நமது ரசிகர்கள் ஏனோ ரசிக்கத் தயங்குகின்றனர். அதற்கு சமீபத்திய உதாரணம் 'அண்ணாத்த'.

பொதுவாக ஒரு படத்தில் நாயகன், நாயகிக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும். இந்தப் படத்தில் பலருக்கும் சரியான முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

இயக்குனர் ஜிஆர்ஸ் தான் படத்தின் நாயகன். அம்மா ராதிகா புளியை உடைத்து விற்று குடும்பத்தை நடத்தும் ஏழ்மையான அம்மா. மகனோ ஊரைச் சுற்றி வரும் ஒரு ஊதாரி. கிளைமாக்ஸ் முன்பாகத்தான் அவர் பிளாக்கில் சரக்கு விற்பவர் என்றே காட்டுகிறார். கொஞ்சம் ஓவராக நடித்து அலப்பறை கூட்டுகிறார் ஜிஆர்எஸ்.

தன் முறைப் பையன் ஜிஆர்எஸ்ஸைக் காதலிப்பவராக லவ்லின் சந்திரசேகர். முறைப் பையன் எப்படியிருந்தாலும் பரவாயில்லை, அவரைக் காதலிக்கலாம் என்ற வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகி. ஒரே ஒரு காட்சியில் மட்டும் காதலனின் பொறுப்பற்ற தன்மையை சுட்டுக் காட்டுவதோடு அவரது பொறுப்பு முடிந்து விடுகிறது.

அம்மா கதாபாத்திரம் என்றாலே ராதிகாவின் நடிப்பை சொல்லத் தேவையில்லை. வழக்கம் போல அவரது அனுபவ நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது. மகனை சரியாக வளர்க்கவில்லையோ என்று கலங்கும் காட்சியில் நெகிழ வைக்கிறார்.

மனைவிக்கு அடங்கிய கணவனாக, பாசக்கார அண்ணனாக சரவணன். தங்கை வீட்டு நிகழ்வில் தனது கௌரவம் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக ஏட்டிக்குப் போட்டியாக செய்முறை செய்யும் சரவணன், தான் புலி மீசை வைத்திருப்பதாக கர்வத்துடன் பேசுகிறார். மற்ற காட்சிகளில் மனைவி விஜிக்கு அடங்கிய பூனை மீசை கணவராக வலம் வருகிறார்.

காளி ஆக காட்சிக்குக் காட்சி ஆவேசமாக மட்டுமே நடித்திருக்கிறார் விஜி சந்திரசேகர். ஓவராக நடிக்கிறார் என்று தெரிந்தாலும் அவருடைய கதாபாத்திரம் அப்படித்தான் என்பதால் மிரளத்தான் வைக்கிறார்.

சில காட்சிகளில் மட்டும் மாரிமுத்து, வேல ராமமூர்த்தி, கஞ்சா கருப்பு வந்து போகிறார்கள்.

இளையராஜாவின் இசையில் சித் ஸ்ரீராம் பாடும் 'இல்லாம இருந்த எனக்கு' பாடல் தாய்ப் பாசத்தில் உருக வைக்கிறது. 'மாமன் கொடுக்கும் சீரு…' பாடல் 90களில் வந்த பாடல் போல் உள்ளது.'மருதமல்லி' டூயட் பாடல் இளையராஜாவின் தனித்துவ பாடலாய் ரசிக்க வைக்கிறது.

படத்தின் நீளம் ரொம்ப அதிகம். படத்தில் தேவையற்ற சில காட்சிகளை நீக்கியிருக்கலாம். சரவணன், ராதிகா பிரிவுக்கு என்ன காரணம் என்பதை தனிக் காட்சியாக வைத்திருக்க வேண்டும். அதை ஒரு பாடலில் சில வினாடி காட்சியாக நகர்த்தியிருப்பதால் பிரிவுக்கான தாக்கம் ஏற்படவில்லை. இருப்பினும் மண் மனம் மாறாத ஒரு செய்முறையைப் பதிவு செய்துள்ளதற்கு இயக்குனரைப் பாராட்டலாம்.

மருத - மருவாத

 

மருத தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மருத

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓