திருமணத்துக்கு பிறகு நடிகை பூமிகா நடிக்கும் தமிழ் படம் மல்லிகை. தெலுங்கில் மல்லப்பூவு என்ற பெயரில் வெளியாகி வெற்றி வாகை சூடிய படம்தான் தமிழில் மல்லிகை என்ற பெயரில் உருவாகி வருகிறது.
சமுத்திரா சில்வர்ஸ்க்ரீன்ஸ் வழங்க சாய்துர்கா தன்மயஸ்ரீ மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் மோகன்குமார்.ஜி. அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி வி.சமுத்திரம் என்ற புதிய இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார். மல்லிகை படத்தில் முரளிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் பூமிகா. தெலுங்கிலும் பூமிகாதான் நாயகியாக நடித்திருந்தார். அதனால்தான் பூமிகா ஆர்வமுடன் மல்லிகையில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக கூறுகிறார் படத்தின் இயக்குனர் சமுத்ரா.
இந்தப்படத்தின் பல காட்சிகளில் ஆண் வேடத்தில் பூமிகா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சரத்குமார் நடிக்கும் 1977 படத்தில் நாயகியாக நடித்து வரும் பர்ஸானா இப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார். மற்றும் கோவை சரளா, சுமன்ஷெட்டி, காதல் சுகுமார், அபிநயஸ்ரீ, அனுராதா ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் வில்லனாக பிரபல இந்திப்பட நடிகர் மகேஷ் நடிக்கிறார்.
காதல் கதை அம்சத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அதிரடி காட்சிகள் கொண்ட ஆக்ஷன் படமாகவே மல்லிகை படம் தயாராகி வருகிறது. பல கோடி செலவில் தயாரிக்கப்பட்ட மல்லிகை திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. படத்தினை ஒளிப்பதிவு செய்பவர் அனில். இசை இளையராஜா. பாடல்கள்: சினேகன், யுகபாரதி. கலை: ராஜன். நடனம்: கிருஷ்ணா ரெட்டி. சண்டைப்பயிற்சி : செல்வம். படத்தொகுப்பு : ஹரி.
- தினமலர் சினி டீம் -