அனந்தா,Anantha
Advertisement
3.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி
இயக்கம் : சுரேஷ்கிருஷ்ணா
நடிப்பு : ஜெகபதிபாபு, ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசன் விஜய், நிழல்கள் ரவி, சுகாசினி, ஸ்ரீரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம்
ஒளிப்பதிவு : சஞ்சய்
இசை : தேவா
வெளியான தேதி : ஜனவரி 13, 2026
நேரம் : 2 மணிநேரம் 10 நிமிடம்
ரேட்டிங் : 3.5 / 5

புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அவரின் மகிமை, பக்தர்கள் வாழ்க்கையில் அவர் நிகழ்த்திய அற்புதங்களை அழகாக, உணர்ச்சிபூர்வமாக சொல்லும் படம் அனந்தா. ஜியோ சினிமாஸ் மற்றும் சில ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது. பல்வேறு ஆக் ஷன், சென்டிமென்ட் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா ஆன்மிக அனுபவம் சொல்லும் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

5 பக்தர்கள் தங்கள் வாழ்வில் சத்ய சாய்பாபாவால் நடந்த அற்புதங்களை, அவர் ஆசியால் வாழ்க்கையில் நடந்த மாற்றங்களை விவரிக்கும் வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. தொழிலதிபரான ஜெகபதி பாபு, பிஸினஸ், பணம், ஓய்வில்லாமல் உழைப்பு என வேறு உலகில் இருக்கிறார். அப்போது அவர் பகவான் அருளால் உண்மையான பக்தி பாதைக்கு மாறுகிறார். வாழ்க்கையின் அர்த்தத்தை அறிந்து கொண்டு, ஒரு கொள்ளை முயற்சியில் ஈடுபடும் சிலரை எப்படி மாற்றுகிறார் என்பது முதல் கதை.

தனது மனைவி திடீரென இறக்க, கடவுள் மீது அதிருப்தி அடைகிறார். அப்போது அவருக்கு மனைவியின் மறைவு குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வர, அவர் எப்படி சாய்பாபாவை போற்றுகிறார் என்பது 2வது கதை.

நடன கலைஞரான அபிராமி வெங்கடாசலத்துக்கு டான்ஸ் நிகழ்ச்சி நடக்கும் சிறிது நேரத்துக்கு முன்பு காலில் பிரச்னை ஏற்பட்டு, அவரால் டான்ஸ் ஆட முடியாத நிலை. அவர் தந்தை தலைவாசல் விஜய் கடவுளை திட்ட, அபிராமி புட்டபர்த்தி நோக்கி பிரார்த்தனை செய்ய என்ன நடக்கிறது என்று வேறொரு கதை.

தனது ஒரே மகன் காசியில் கங்கை நதியில் முழ்கி மரண படுக்கையில் போராட, டாக்டர்கள் கை விரித்த நிலையில் பாபாவை சரணாகதி அடையும் பாசமுள்ள தாய் சுகாசினி வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது இன்னொரு கதை.

அமெரிக்காவில் வசிக்கும் சாய்பாபா பக்தர்களான இரண்டு வெள்ளைக்காரர்கள் வீட்டை சுற்றி காட்டு தீ சூழும் நிலையல், பாபா அருளாள் அவர்கள் எப்படி பிழைக்கிறார்கள் என்பது கடைசி கதை. தன்னை நம்பும், பக்தியுடன் அழைக்கும் ஒரு சிறுமிக்கு சத்யசாபா காட்சி கொடுத்தாரா என்பதுடன் படம் முடிகிறது.

தொழில் அதிபராக கடவுள் பக்தியால் மனம் மாறி நல்லது செய்பராக ஜெகபதி பாபு சிறப்பாக நடித்திருக்கிறார். மனைவியை இழந்த சோகத்தில் தவிப்பராக, முதலில் கடவுளை தூற்றி விட்டு பின்னர் நடந்ததை கேள்விப்பட்டு பகவான் பக்தராக மாறுபவராக ஓய்.ஜி. மகேந்திரன் தனி முத்திரை பதித்திருக்கிறார்.

உயிருக்கு போராடும் மகனை காப்பாற்ற தவிப்பராக, கடவுளுடன் சரணாகதி அடைந்து அவரை நம்பும் பல கோடிக்கணக்கான உண்மையான பக்தர்களின் பிரதிநிதியாக சுகாசினி வருகிறார். படத்துக்கு அவரின் போர்ஷன், அவர் நடிப்பு, அவரின் டயலாக் ரொம்பவே பலம். காலில் அடிபட்டதால் டான்ஸ் ஆட முடியாமல் தவிப்பராக உணர்ச்சிகரமாக நடித்து இருக்கிறார் அபிராமி. இவர்களை தவிர அமெரிக்காவில் வசிப்பவரும் பாவின் அருளை எப்படி பெறுகிறார்கள் என்ற கேரக்டரில் இரண்டு வெள்ளைக்கார தம்பதிகள் எளிமையான, உருக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

படம் முழுக்க கடவுள் நம்பிக்கை, பாசிட்டிவ் சிந்தனை என ஒருவித பரவச நிலை திரைக்கதையாக சென்று இருக்கிறது. கேரக்டர் வடிவமைப்பு, நடிப்பு, சொல்லப்படும் கருத்து, இறை நம்பிக்கை, சத்ய சாய்பாபா பக்தர்கள் மீது காட்டும் பதிவு, பாசம் அருள் என பல சீன்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

காசி, புட்டபர்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகளை தத்ரூபமாக காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சஞ்சய். தேவாவின் பின்னணி இசை ஆங்காங்கே வரும் இறை பாடல், படத்தை இன்னும் அழகாக்கி இருக்கிறது.

கிளைமாக்சில் வரும் ஒரு குழந்தை சம்பந்தப்பட்ட காட்சிகளும் அதன் மூலம் சொல்லப்படும் விஷயமும் பிரமாதம். படத்தின் முக்கியமான சில இடங்களில் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நிஜ வீடியோ புட்டேஜ் பயன்படுத்தப்பட்டிருப்பதும், அதில் பல்வேறு காலகட்டங்களில் பாபாவின் தோற்றத்தை அவருடைய ஆசியை பார்ப்பதும் சாய்பாபா பக்தர்களை இன்னும் மெய்சிலிர்க்க வைத்து கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

முழுக்க முழுக்க ஆன்மிக படமாக அல்லாமல் பக்தர்களுக்கும், பகவானுக்கும் இடையான உறவை, பாசத்தை நம்பிக்கையை சொல்லும் ஒரு தன்னம்பிக்கை படமாகவும், பாபாவை நம்பியவர்கள் கைவிடப்பட மாட்டார்கள், எந்த இக்கட்டான காலகட்டத்திலும் சோதனையிலும் அவரை அழைத்தால், அவரை கைகூப்பி வணங்கினால் கண்டிப்பாக ஓடி வந்து உதவுவார், ஏதாவது ஒரு வகையில் கஷ்டங்களை கரைப்பார் என்று சொல்லும் அனந்தாவின் தத்துவ மெசேஜ் பீல் குட்.

ஐந்து பக்தர்களின் வாழ்க்கை நிகழ்ச்சியில் இருந்து அற்புதமான அனுபவத்தை கடவுள் நம்பிக்கை சொல்லும் நல்ல படைப்பை கொடுத்து இருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. அவரின் முயற்சிகளுக்கு படக்குழு உதவி இருக்கிறது. ஒரு மணி நேரத்தில் இந்த படக்கதை எழுதினேன். அது பாபா அருள் என்று சொல்லி இருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா இந்த படம் முழுக்க அவர் அருளும் நிரம்பி இருக்கிறது

அனந்தா - ஸ்ரீ சத்ய சாய்பாபாவை பேரருளை அனுபவிக்கும் ஆனந்தமான அனுபவம்

 

அனந்தா தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

அனந்தா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓