ராஹிட் ஸ்டூடியோஸ் சார்பில் கோவை.பி.தண்டபாணி, எஸ்.பி.ராஜா இணைந்து தயாரிக்கும் புதிய படம் ஊராட்சி ஒன்றியம். புதுமுகம் ஸ்ரீதர் ஹீரோவாகவும், தேனியை சேர்ந்த தமலி என்ற பெண் நாயகியாகவும் அறிமுகமாகிறார். பூந்தோட்ட காவல்காரன், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம், திரைக்கதை எழுதியதுடன், ஏழை ஜாதி, பாட்டுக்கொரு தலைவன், எங்கமுதலாளி உள்ளிட்ட ஐந்து படங்களை இயக்கியும் இருப்பவர் லியாகத் அலிகான். இவர் தற்போது ஊராட்சி ஒன்றியம் என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.சுந்தராஜன், கஞ்சா கருப்பு, ராஜேந்திரன், லாவண்யா, சாதனா, திண்டுக்கல் ஜெயபால், செல்லத்துரை மற்றும் பலர் நடிக்கின்றனர். மேலும் முன்னணி நடிகை ஒருவர் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார்.
இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் கே.எம்.கிருஷ்ணமூர்த்தி. புதிய படம் பற்றி டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி அளித்துள்ள பேட்டியில், "இந்தியாவின் உயிர்நாடி எங்கே இருக்கிறது என்ற போது அது கிராமத்தில் இருக்கிறது என்று பதிலளித்தார் காந்தி. கிராமங்கள் முன்னேறினால்தான் நாடு முன்னேறும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி கிராமங்களை வைத்தே மதிப்பிடமுடியும். என்று காந்தி கடைசி வரை வலியுறுத்தி வந்தார். நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் கிராமங்கள் சரியாக இருந்தால் தான் நாடு தலை நிமிர்ந்து நிற்க முடியும். ஆனால் இன்றைய நிலை என்ன? கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. கிராம மக்களிடம் விழிப்புணர்ச்சி இல்லை. அரசு போடும் திட்டங்கள் கடைக்கோடியில் இருக்கும் கிராமங்களை சென்றடைய வேண்டும். அதற்கு அந்த ஊராட்சி சரியாக செயல்பட வேண்டும். ஊராட்சி மன்றத்துக்கும், ஊராட்சி ஒன்றியத்துக்கும் உள்ள வேறுபாடுகூட நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்கிறார்கள். ஆனால் அதை செயல்படுத்த நினைப்பதில்லை. இந்த கருத்தை செய்தியாக சொல்லாமல் புதுக்கோட்டையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியில் ஜனரஞ்சகமான கதையோடு சொல்லியிருக்கிறேன். கிராமத்து மக்களின் விழிப்புணர்ச்சியை வலியுறுத்துகிற இக்கதையில் ஒரு சாதாரண கிராமத்து இளைஞர், ஊராட்சி நிலையில் உள்ள சிற்றூரை ஊராட்சி ஒன்றிய நிலைக்கு எப்படி மாற்றி உயர்த்துகிறார் என்பதை காதல், சென்டிமெண்ட், நகைச்சுவை என சுவாரஸ்யம் கலந்து உருவாக்கியிருக்கிறேன், என்று கூறியுள்ளார்.
எஸ்.சுரேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு எஸ்.ஆர்.பிரசாத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.