தமிழரசன்
விமர்சனம்
தயாரிப்பு - எஸ்என்எஸ் மூவிஸ்
இயக்கம் - பாபு யோகேஸ்வரன்
இசை - இளையராஜா
நடிப்பு - விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி
வெளியான தேதி - 21 ஏப்ரல் 2023
நேரம் - 2 மணி நேரம் 16 நிமிடம்
ரேட்டிங் - 2/5
தமிழ் சினிமா உலகில் வெளியீட்டுத் தேதியை அறிவித்து, அறிவித்து, அறிவித்து பின் தள்ளி வைத்து வெளியான படங்கள் நிறைய உண்டு. அந்த விதத்தில் ஐந்தாறு முறை வெளியீடு அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்ட படம் இது.
“சித்தி, அண்ணாமலை” ஆகிய தொடர்களுக்கு ரைட்டராகப் பணிபுரிந்து பின் ஜெயம் ரவி நடித்து 2005ல் வெளிவந்த 'தாஸ்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாபு யோகேஸ்வரன். 18 வருடங்களுக்குப் பிறகு அவருடைய இரண்டாவது படமாக இந்த 'தமிழரசன்' படம் வெளிவந்திருக்கிறது.
படத்தின் தலைப்பு 'தமிழரசன்', அவர் 'லோட்டஸ்' என்ற மருத்துவமனையை எதிர்த்து செய்யும் ஒரு தீவிரவாதப் போராட்டம்தான் இந்தப் படத்தின் கதை. ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த படத்தின் தயாரிப்பாளர் தயாரித்த படத்தில், அந்தக் கட்சியைச் சேர்ந்த பலரும் படத்தில் நடித்திருக்க மருத்துவமனைக்கு 'லோட்டஸ்' எனப் பெயர் வைத்து அம்மருத்துவமனையில் சிகிச்சைக்காக சில வரம்பு மீறல் நடைபெறுவதாகவும், அதிகக் கட்டணம் வாங்குகிறார்கள் என்றும் ஏதோ ஒரு வன்மத்துடன் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாபு யோகேஸ்வரன்.
இன்ஸ்பெக்டராக இருப்பவர் விஜய் ஆண்டனி. மனைவி ரம்யா நம்பீசன், ஒரே ஒரு மகன் என நடுத்தரமான குடும்பம். மேலதிகாரியுடனான மோதலில் சஸ்பென்ட் ஆகியிருக்கிறார். இந்நிலையில் அவருடைய ஒரே மகனுக்கு இதயத்தில் ஒரு பாதிப்பு ஏற்பட்டு, அதை மாற்ற வேண்டிய நிலை. மருத்துவமனையில் வந்து சிகிச்சைக்குச் சேர்க்கிறார். ஆனால், தானம் பெறுவதற்கானப் பட்டியலில் அவர் பெயரைச் சேர்க்கவும், அதற்காக 25 லட்ச ரூபாயை முன்பணமாகச் செலுத்த வேண்டுமெனவும் மருத்துவமனை நிர்வாகம் சொல்கிறது. சில பல பேச்சுவார்த்தைக்குப் பிறகும், விஜய் ஆண்டனிக்கும், மருத்துவ நிர்வாகத்திற்கும் மோதல் வருகிறது. இதனால், ஒரு நாள் திடீரென மருத்துவமனையின் ஒரு பிரிவின் அனைத்து கதவுகளையும் சாத்தி அங்குள்ளவர்களையும், அவரது மகனுக்கு சிகிச்சை செய்யும் டாக்டர் சுரேஷ் கோபியையும் பிணயக் கைதியாக பிடித்து வைக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
பொங்கலுக்கு அஜித் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'துணிவு', எஸ்ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் நரேன் நடித்து 2007ம் ஆண்டில் வெளிவந்த 'நெஞ்சிருக்கும் வரை' ஆகிய இரண்டு படங்களையும் இந்தப் படம் ஞாபகப்படுத்துகிறது.
விஜய் ஆண்டனி அவரது அறிமுகப் படம் முதல் இந்தப் படம் வரை ஒரே மாதிரிதான் நடித்து வருகிறார். அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் அப்படி இருக்கிறதா அல்லது, எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அவர் அப்படித்தான் நடிக்கிறாரா என்று ஒரு குழப்பம். அதையும் யோகிபாபுவை வைத்தே படத்தில் கிண்டலடித்தும் விடுகிறார்கள். விஜய் ஆண்டனிக்கு ஒரு வேண்டுகோள், ஒன்று நடிப்பை மாற்றுங்கள், அல்லது தேர்வு செய்யும் கதாபாத்திரங்களை மாற்றுங்கள்.
ரம்யா நம்பீசன் மகனுக்காக அழுது தவிக்கும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். யோகி பாபு காமெடி என்று சொல்லி என்னமோ செய்கிறார், சிரிப்பே வரவில்லை. மற்ற கதாபாத்திரங்களில் சுரேஷ் கோபிக்கு மட்டும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ராதாரவி, சோனு சூட், சங்கீதா, சாயா சிங் ஆகியோரும் படத்தில் உண்டு.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் மிகச் சுமார்தான், பின்னணி இசை அவரா என்று ஆச்சரியமாக உள்ளது. ஒரே மருத்துவமனையில் நடக்கும் கதை என்றாலும் காட்சிகளில் அந்தத் தேக்கம் தெரியாமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஆர்டி ராஜசேகர்.
மருத்துவமனையில் உள்ளவர்களை விஜய் ஆண்டனி பிணயக் கைதியாக பிடித்து வைத்ததுமே, படம் இப்படித்தான் போய் முடியும் என நம்மால் யூகித்துவிட முடிகிறது. அதுவரையிலான அவருடைய போராட்டத்தில் பாசப் போராட்டம்தான் அதிகம் இருக்கிறது. வேறு எந்த ஒரு அதிரடியும் இல்லாததால் சுவாரசியமாக ரசிக்க முடியவில்லை. தன் மகனுக்காக தன் இதயத்தையே எடுத்துக் கொள்ளுங்கள் என்று கதாநாயகன் பேசும் காட்சிகள் எல்லாம் 80களில் வந்திருந்தால் ஆஹா, ஓஹோவென்று கண்ணீர் சிந்தி தாய்மார்கள் ரசித்திருப்பார்கள். இந்த 2023ல் அதெல்லாம் டூடூடூடூடூடூடூ லேட்.
தமிழரசன் - ரசனை கடந்து…