மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகரான பிரவீன் பிரேம் தமிழில், டம்மி டப்பாசு என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் என்பவர் நடிக்கிறார். இவர் நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள். ஓ.எஸ்.ரவி தயாரித்து இயக்குகிறார். படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது.
இதுகுறித்து இயக்குனர் ரவி கூறியதாவது: சென்னையை சுற்றியுள்ள குடிசை பகுதியில் வாழும் ஒரு குண்டு பையனின் காதலையும், வாழ்க்கையையும் காமெடியாக காட்டும் படம். குண்டான இளம் காமெடி நடிகர்கள் யாரும் தமிழ்நாட்டில் இல்லை என்பதால் கேரளாவில் இருந்து பிரவீன் பிரேமை அழைத்து வந்திருக்கிறோம். சந்தானம் போன்று அங்கு அவர் பிசியான நடிகர். கதை பிடித்து நடிக்க ஒத்துக் கொண்டு வந்தார்.
படத்தில் வன்முறை காட்சிகள் துளியும் கிடையாது. சண்டை நடிகர்களைகூட காமெடியன்களாக மாற்றி நடிக்க வைத்திருக்கிறோம். புதுமையான பல கதாபாத்திரங்கள் படத்தில் இருக்கிறது. சென்னை ஸ்லம் ஏரியா மக்கள் ஏழைகளாக இருந்தாலும், அவர்கள் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கிறார்கள். அந்த கான்செப்ட்டைத்தான் படத்தில் வைத்திருக்கிறோம். படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டது. விரைவில் ரிலீசாகிறது. என்கிறார் ரவி.