அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
"என் எதிரிக்குகூட இந்த மாதிரி நிலைமை வரக்கூடாது". இது சினிமாவில் அடிக்கடி கேட்கும் வசனம். இந்த வசனம் நிஜத்தில் பொருந்தியது சரண்யா சசிக்குதான். அவரே இதனை ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். தன் வாழ்நாளில் 3ல் ஒரு பகுதியை தன் உயிரை காப்பாற்றிக் கொள்ளவே போராடி வந்தவர் அவர். தொடர்ந்து வந்த துன்பங்கள், வேதனைகள், வலிகள் இவற்றிலிருந்து மரணத்தின் மூலம் தனது 35வது வயதில் விடுதலை அடைந்திருக்கிறார்.
2006ஆம் ஆண்டு பாலச்சந்திர மேனன் இயக்கிய சூர்யோதயம் சீரியல் மூலம் அறிமுகமானார் சரண்யா சசி. இது தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது. அவர் சினிமாவில் நாயகியாக அறிமுகமானது தமிழில். கீரா இயக்கிய பச்சை என்கிற காத்து படத்தில் தேவதை என்ற பெயருடன் அறிமுகமானார். அந்த படம் தோல்வி அடைந்ததால் அதன்பிறகு அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
மலையாளத்தில் சாக்கோ ராண்டமன் படத்தின் மூலம் அறிமுகமானார். மோகன்லாலின் சோட்டா மும்பை, தலப்பாவு, பாம்பே மார்ச் 12, மரியா காலிப்பினலு உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு பல படங்களில் நடித்தாலும், அவருக்கு நிரந்தர வாய்ப்புகள் குவிந்தது சீரியல்களில்தான். மலையாளத்தில் ஏராளமான தொடர்களில் நடித்தவர் தமிழில் பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சில தொடர்களில் நடித்தார்.
இந்த நிலையில்தான் 2012ம் ஆண்டு அவருக்கு மூளை நரம்பில் உள்ள பிரச்சினை (பிரைன் டியூமர்) கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். 11 முறை அறுவை சிகிச்சை செய்தார். அவரின் மருத்துவ செலவுக்கு மலையாள நடிகர், நடிகைகள் உதவி செய்து வந்தனர். குறிப்பாக அவரது தோழியான மலையாள நடிகை ஸீமா நாயர் அருகில் இருந்து கவனித்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருடைய தண்டுவடத்திலும் நோய் பரவியதால் உடல் நிலை மேலும் மோசமடைந்தது. சோதனை மேல் சோதனை என்கிற மாதிரி சரண்யாவுக்கு கொரோனா தொற்று பரவியது. இதனால் அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலமானார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கேரள முதல்வர் பினராய் விஜயனும் சரண்யா சசியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் பெருமழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது தனது மருத்துவ செலவுக்காக வந்திருந்த நிதியில் இருந்து ஒரு பகுதியை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியவர் சரண்யா சசி. மலையாள திரையுலகம் இழந்தது ஒரு நல்ல நடிகையை மட்டுமல்ல... நல்ல மனுஷியை.