8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் |

எம் ஜி ஆர் நடித்து வெளிவந்த அவரது 136 திரைப்படங்களில் அதுவரை யாரும் யோசித்திராத ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் வெளிவந்த திரைப்படமாகவும், வேற்று கிரகவாசிகளின் பூலோக வருகையை சித்தரிக்கும் முதல் விண்வெளி சார்ந்த திரைப்படமாகவும் வெளிவந்ததுதான் “கலை அரசி”. அறிவியல் புனைக்கதை திரைப்படங்களின் முன்னோடியாக வெளிவந்த இத்திரைப்படத்தில் பூலோகவாசி மோகன் என்ற கதாபாத்திரத்திலும், வேற்றுகிரகவாசி ஜெஸ்டர் என்ற கதாபாத்திரத்திலும் எம் ஜி ஆர் இரட்டை வேடத்திலும், வாணி, வள்ளி என்ற இரட்டை வேடத்தில் நடிகை பானுமதியும் நடித்திருந்தனர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் மேலோங்கி இருக்கும் வேற்று கிரகம் ஒன்றிலிருந்து வரும் வேற்று கிரகவாசியான நடிகர் எம் என் நம்பியார், அவர்களது கிரகத்தில் இல்லாத கலாச்சார கலைகளான இசை, நடனம் ஆகிய கலைகளை வளர்க்க பூலோகவாசியான நடிகை பானுமதியைக் கடத்திக் கொண்டு அவர்களது கிரகத்திற்குச் செல்ல, பானுமதியின் காதலரான எம் ஜி ஆர் எவ்வாறு பானுமதியை அங்கிருந்து மீட்டெடுத்து பூலோகம் திரும்புகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
2018ம் ஆண்டு நடிகர் ரவிமோகன் நடிப்பில் விண்வெளி சார்ந்த அறிவியல் புனைக்கதையாக வெளிவந்த “டிக் டிக் டிக்” திரைப்படத்திற்கு முன்பாகவே, ஏறத்தாழ 55 ஆண்டுகளுக்கு முன்பு தொழில்நுட்ப வளர்ச்சி ஏதும் இல்லாத 1960களின் முற்பகுதியிலேயே அப்போதிருந்த குறைந்தபட்ச தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, விண்வெளி சார்ந்த ஒரு அறிவியல் புனைக்கதையை எடுக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய நம் தமிழ் திரையுலகின் ஓர் அரிய கலைப்படைப்பாக வந்ததுதான் இந்த “கலை அரசி”.
வேற்று கிரகவாசிகளின் பூலோக வருகை, அவர்களது ஆடை அணிமணிகள், கால்களில் அவர்கள் அணிந்திருக்கும் ஈர்ப்பு எதிர்ப்பு காலணிகள் (ஆன்ட்டி கிராவிட்டி ஷூ), கதிரியக்க துப்பாக்கி, அவர்கள் பயணிக்கும் விண்கலம் என ஒவ்வொன்றிலும் தீவிர கவனம் செலுத்தி, அப்போதிருந்த தொழில்நுட்ப வசதி கொண்டு, அற்புதங்கள் பல செய்து, படத்தின் ஒளிப்பதிவாளர் ஜே ஜி விஜயத்தோடு இணைந்து இயக்குநர் ஏ காசிலிங்கம் பார்வையாளர்களுக்கு காட்சிகளால் ஒரு விருந்தே படைத்திருப்பார்.
1963ம் ஆண்டு கருப்பு வெள்ளைத் திரைப்படமாக வெளிவந்த இத்திரைப்படம் அன்று எம் ஜி ஆர் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஒரு புதிய யுகத்தைக் காட்டிய திரைப்படமாகத்தான் இருந்தது என்றாலும், அன்றைய நாளில் இத்திரைப்படம் ஒரு தோல்வித் திரைப்படமாகத்தான் அமைந்தது என்பதை யாரும் மறுக்க இயலாது.




