சப்தம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதோ | விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் அப்டேட் வெளியானது | சிவராஜ்குமாருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நிறைவு | அதிரடியாய் எடை குறைத்த அறந்தாங்கி நிஷா! | 'புஷ்பா 2' - இந்தியாவில் மட்டும் 1300 கோடி வசூல் | எதிர்பார்ப்பை எகிற வைத்த சிந்து பைரவி புரோமோ! | பவுஸி ஹிதாயா நடிக்கும் புதிய தொடர் | எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : கமல்ஹாசன் இரங்கல் | எதிர்நீச்சல் 2வில் என்னை ஏமாத்திட்டாங்க! | ஹைதராபாத்தில் 'விடாமுயற்சி' டப்பிங்கை முடித்த அஜித் குமார் |
இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஆளுமையான ஷியாம் பெனகல் நேற்று(டிச., 23) காலமானார். திரைப்படத்துறையின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய இவர் சுயாதீன படங்களின் மூலம் மக்களை கவர்ந்தவர். சுயாதீன படங்களையும் வசூல் குவிக்கும் படங்களாக மாற்றியவர்.
ஆங்கூர் (1973), நிஷந்த் (1975), மந்தன் (1976), பூமிகா (1977), மம்மோ (1994), சர்தாரி பேகம் (1996), ஜுபைதா (2001) ஆகியன இவரது முக்கிய படைப்புகளாக கருதப்படுகின்றன. பல குறும்படங்களையும், தொடர்களையும் தயாரித்துள்ளார். இயக்கிய படங்கள் குறைவுதான் ஆனால் பெற்ற விருதுகள் அதிகம், இந்திய அரசின் பத்மஶ்ரீ (1976), பத்மபூஷண் (1991) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். மாநிலங்களவை நியமன உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார். 7 தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.
1976ம் ஆண்டு இவர் இயக்கிய 'மந்தன்' படம் பல சுவாரஸ்யங்களை கொண்டது. இந்த திரைப்படத்தின் கதையை இவரும், இந்திய வெண்மைப்புரட்சியின் தந்தை என்று கூறப்படும் வர்கீஸ் குரியனும் இணைந்து எழுதினர். கூட்டுறவு இயக்கங்கள் எத்தகைய வெற்றியை தரும் என்பதை வர்கீஸ் குரியன் நடத்திய வெண்மைப் புரட்சி இயக்கம் நடைமுறையில் காட்டியது. இந்திய மக்கள் பாலுக்கு அலைந்த நிலை மாறி பால் தாராளமாக கிடைக்கும் நிலை இந்த புரட்சியின் மூலம் உருவானது.
இதை அடிப்படையாக வைத்துதான் 'மந்தன்' படம் உருவானது. இந்த படத்தை தயாரிக்க பணம் இல்லாமல் ஷியாம் தவித்தபோது குஜராத் பால் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் 5 லட்சம் பேரும் தலா இரண்டு ரூபாயை நன்கொடையாக வழங்கினர். 10 லட்சம் ரூபாயில் படம் உருவானது.
சுமிதா பட்டீல், கிரிஷ் கர்நாட், நஸ்ருதீன் ஷா, அம்ரீஷ் புரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கோவிந்த் நிஹலானி ஒளிப்பதிவு செய்திருந்தார், வன்ராஜ் பாட்டியா இசை அமைத்திருந்தார். படம் 3 தேசிய விருதுகளை பெற்றது.
குஜராத் மாநிலம் கெடா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் எப்படி பால் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள், அதற்கு பண்ணை முதலாளிகளால் ஏற்பட்ட தடை என்ன? கெடா மாவட்ட கிராமங்களில் உருவான பால் உற்பத்தியாளர் சங்கம் எப்படி மாநில அளவில் விரிவடைந்தது என்பதை சுவாரஸ்மான கதை ஒன்றில் மூலம் சொல்வதுதான் இந்த படம். படத்தை பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கூட்டம் கூட்டமாக குடும்பத்தோடு சென்று பார்த்தனர். படம் பெரிய வெற்றி பெற்றது. படத்தை தயாரிக்க உதவிய 5 லட்சம் பேரும் இந்த படத்தின் தயாரிப்பாளர்களே என்று ஷியாம் பெனகல் அறிவித்தார்.