ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 | வனிதா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு | நயன்தாரா ஒரு சொகுசு பூனை: சுசித்ரா தாக்கு | படம் பிடிக்காமல் பாதியில் வெளியேறினால் பாதி கட்டணம் திருப்பித் தரப்படும்: புதிய திட்டம் அறிமுகம் | ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுக்கு இங்கிலாந்தின் உயரிய பட்டம் | பத்திரிகையாளர் மீது தாக்குதல் : மோகன் பாபுவுக்கு ஜாமீன் மறுப்பு | பிளாஷ்பேக் : தயாரிப்பாளரை டைட்டில் கார்டில் நக்கலடித்த கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : பாகவதர் ரசிகர்களை சின்னப்பா பக்கம் திருப்பிய 'ஆர்யமாலா' | 2024 - தமிழில் வசூலை அள்ளிய டப்பிங் படங்கள் |
தெரு நாய்களை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'கூரன்'. இதில் எஸ்.ஏ. சந்திரசேகரன், ஒய். ஜி. மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார். வருகிற 27ம் தேதி வெளியாகிற இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இதை தொடர்ந்து படத்தின் அறிமுக விழா மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:
அற்புதமான ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தத் திரைப்பட விழாவுக்கு என்னை அழைத்த போது மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டேன். திரைப்படத்தில் சிறிய திரைப்படம் என்று எதுவும் இல்லை. இது பெரிய கருத்தை, சிந்தனையை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் அனைத்து உயிரினங்களும் ஒன்று என்று சொல்கிறது. உயிரினம் ஒவ்வொன்றும் சோகத்தை உணர்கிறது, மகிழ்ச்சியை உணர்கிறது, பயத்தை உணர்கிறது, வாழ விரும்புகிறது, அமைதியான வாழ்க்கை வாழ விரும்புகிறது.
நான் பிறந்ததிலிருந்து என் வாழ்க்கையை விலங்குகளுடன் கழித்து வந்திருக்கிறேன். விலங்குகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு மொழி உள்ளது. அவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன. அவை அனைத்துமே மனிதர்களைப் புரிந்து வைத்துள்ளன. ஆனால் நாம் தான் அவைகளைப் புரிந்து கொள்வதில்லை. விலங்குகளின் மகிழ்ச்சியையும் வலிகளையும் பார்க்கும் போது, அது நம்முடையதாக உணர வேண்டும். நாம் அனைவரும் ஒன்று என்பதைத்தான் இந்தப் படம் முழுமையாக வெளிப்படுத்துகிறது. நீங்கள், நான், அது, உங்கள் காலடியில் செல்லும் எறும்பு ஆகியவற்றுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை.
உயிரினங்களில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை நீங்கள் உணர வேண்டும். விலங்குகள் மீது போர் தொடுப்பதை நிறுத்தும் வரை, நமக்குள் அமைதி இருக்காது. அனைத்து உயிரினங்களும் ஒன்று என்பதை நாம் உணர்ந்து அங்கீகரிக்க வேண்டும். அதன் பிறகு மனிதர்களின் வாழ்க்கை முறையிலும், நாம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் முறையிலும் நல்ல மாற்றம் ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள்.
இந்த படம் நகைச்சுவை நிறைந்தது. இது ஒரு பிரச்சார படம் அல்ல, கலகலப்பான படம். மென்மையான உணர்வுகளைக் கூறுகின்ற நல்ல படம். இதற்கு வரி விலக்கு வழங்க அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதற்கான வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.
இவ்வாறு மேனகா காந்தி பேசினார்.