ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
சென்னையில் சினிமா தயாரிப்பாளர் ஒருவரை கொலை செய்து, உடலை பிளாஸ்டிக் பையில் கட்டி சாலையோரம் வீசிச் சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை, விருகம்பாக்கம், சின்மயா நகர் பகுதியில், நேற்று காலை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விருகம்பாக்கம் கால்வாயை ஒட்டி சாலையோரம் கிடந்த கறுப்பு நிற பிளாஸ்டிக் பையில், முழுமையாக கட்டப்பட்ட நிலையில், ஒருவரது உடல் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பையை பிரித்து பார்த்தபோது, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டு, உடலில் காயங்களுடன், 60 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் இருந்தது.உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் கொலை குறித்து விசாரித்தனர்.
இந்த நிலையில், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் 'தந்தையை காணவில்லை' என, ஒருவர் புகார் அளித்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் அழைத்து வரப்பட்டார். அப்போது, உடல் அவரது தந்தையுடையது என, அவர் அடையாளம் காட்டினார்.
முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாவது: கொலை செய்யப்பட்டவர், ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணபுரம், 3வது தெருவைச் சேர்ந்த பாஸ்கர், 65. இவரது மனைவி பாக்கியம்மாள், 62. இவர்களுக்கு கார்த்திகேயன், 40, கவுசிக், 36, என, இரண்டு மகன்கள் உள்ளனர். கொலை செய்யப்பட்ட பாஸ்கர், கட்டுமான நிறுவனம் நடத்தி வந்ததுடன், 1997ல் ராம்கி நடித்த 'சாம்ராட்'மற்றும் 'ஒயிட்'உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
இவர், நேற்று முன்தினம் இரவு, விருகம்பாக்கத்தில் இருப்பதாகவும், சென்னையில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று வீட்டிற்கு வருவதாகவும், தன் மகனிடம் மொபைல் போனில் பேசியுள்ளார். சிறிது நேரத்திற்குப் பின் தொடர்பு கொண்டபோது போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.இதனால், அதிர்ச்சியடைந்த மகன்கள், பாஸ்கரை தேடி பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் 'ஆன்லைன்' வாயிலாக புகார் அளித்துள்ளனர்.
மேலும், பாஸ்கர் பயன்படுத்திய கார், உடல் கிடந்த அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில், வாடகைக்கு வசித்து வந்த நபர் ஒருவர், வீட்டை பூட்டி மாயமாகியுள்ளார்.எனவே, பாஸ்கர், குறிப்பிட்ட வீட்டில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. அது மட்டுமின்றி, நிதி நிறுவனங்களில் பணம் பெற்று பாஸ்கர், சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
பாஸ்கர் கொலை செய்யப்பட்ட பின், அவரது உடல் கறுப்பு நிற பிளாஸ்டிக் கவரில் கட்டப்பட்டு, கூவத்தின் அருகே வீசப்பட்டுள்ளார். அவரது ஏ.டி.எம்., கார்டில் இருந்து அதிகமான தொகையும் எடுக்கப்பட்டது தெரிய வந்தது. பாஸ்கரன் கடைசியாக யார் யாரிடம் எல்லாம் பேசினார்; கொலைக்கு காரணம் முன் விரோதமா அல்லது பணம் கொடுக்கல் - வாங்கல் தகராறா என, பல்வேறு கோணங்களில், மூன்று தனிப்படைகள் அமைத்து, விருகம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.