டிவிக்களில் தங்களது கடை விளம்பரங்களின் மூலம் பிரபலமானவர் சரவணன். முன்னணி நடிகைகளுடன் விளம்பரப் படங்களில் நடித்து தன்னைப் பற்றி அதிகம் பேச வைத்தார். அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'தி லெஜன்ட்'. பல விளம்பரப் படங்களை இயக்கியவர்களும், 'உல்லாசம், விசில்' படங்களை இயக்கிய ஜேடி--ஜெர்ரி இயக்கியுள்ள படம் இது.
இப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் பிரம்மாண்டமான நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வெளியிடப்பட்டது. யு-டியூபில் வெளியான இப்படத்தின் டிரைலர் இதுவரையிலும் 26 மில்லியன் பார்வைகளை யு டியுபில் பெற்றுள்ளது.
இது ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'அண்ணாமலை' படத்தின் டிரைலர், அஜித் நடித்து வெளிவந்த 'வலிமை' படத்தின் டிரைலர் ஆகியவற்றின் பார்வைகளைக் காட்டிலும் அதிகம்.
சமீபத்தில் வெளிவந்த படங்களில் டாப் நடிகர்களின் பட டிரைலர்களைப் பொறுத்த வரையில், விஜய் நடித்து வெளிவந்த 'பீஸ்ட்' படத்தின் டிரைலர் 56 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படத்தின் டிரைலர் 33 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
'தி லெஜன்ட்' பட டிரைலர் விரைவில் 'விக்ரம்' பட டிரைலர் சாதனையை முறியடித்துவிடும் என எதிர்பார்க்கலாம். 'பீஸ்ட்' படத்தின் டிரைலர் சாதனையை முறியடிப்பதுதான் சவாலான ஒரு விஷயமாக இருக்கும். பட வெளியீட்டிற்குள் அந்த சாதனை முறியடிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.