விமர்சனம்
கல்கி சினி விமர்சனம்
ரவுடியைக் கதாநாயகனாகக் காண்பிப்பது வழக்கம்தான் என்றாலும் அவன் கடைசியில் திருந்துகிற மாதிரியாகவாவது காட்சி வைப்பார்கள். ஆனால் இந்தப் படம் முடியும்போது முன்னைக் காட்டிலும் காத்திரமான ரவுடியாகக் கதாநாயகன் உருவெடுப்பதாய்க் காட்டியிருக்கிறார்கள். ஏற்கெனவே வெளியான தனுஷ் படத்தைப் பார்க்கும் ஒரு ஃபீல் படம் முழுக்கத் தொடர்கிறது.
வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றில் ப்ரொபெக்ஷன் மனி என்ற பெயரில் சமூகவிரோதிகள் மாமூல் வசூலிப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். தமிழகத்தில் இதுவரை பரவாத அதுபோன்ற தீய வழக்கங்களை இந்தப் பட ரவுடி ஆரம்பித்துவைத்திருப்பது வேதனைக்குரியது.
கதாநாயகி காஜல் அகர்வால், தனுஷை மாட்டிவிடுவதற்காக நடிக்கிறார் என்பதை இடைவேளைக்கான பெரிய சஸ்பென்ஸ் என்று நினைத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அதைப் பல வேளைகளுக்கு முன்னரே அனுமானித்துவிட முடிகிறது.
போலீஸ்காரரையே வில்லனாக்கி இருக்கிறார்கள். அவ்வளவு புத்திசாலியான போலீஸ்கார வில்லன், லோக்கல் ரவுடியை அடக்கப் பழங்காலக் கொலைக்கேஸைத் தருவுவது புறா தலையில் - சாரி - கொக்கு தலையில் வெண்ணை வைப்பதை நினைவூட்டுகிறது. நேரடியாக மார்க்கெட் மாமூலில் இறங்குவதாகக் காண்பித்திருப்பதும் சொதப்பல்.
ஒவ்வொரு காட்சியிலும் சிகரட்டை ஊதித் தள்ளியபடியோ, குடித்துக் கொண்டே, ஆடிக் கொண்டோ சண்டை போட்டுக் கொண்டோ இருக்கும் கதாநாயகன், எப்போது நடிப்பார் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.
பல படங்களில் பார்த்துத் தேய்ந்த மார்க்கெட் சண்டைகள், ஒற்றை நாடிக்கும் குறைவான உடல்வாகுடைய ரவுடி பலரையும் ஒற்றையாளாய்ச் சவட்டி எடுப்பது, நல்ல குடும்பத்துக் கதாநாயகிக்கும் ரவுடியின்மேல் காதல் வருவது போன்ற காட்சி அமைப்புகள் சோர்வையே தருகின்றன.
ரவுடியின் அல்லக்கை வேடம் என்றிருக்கும் ரோபோ ஷங்கரின் டைமிங் காமெடி, காஜல் அகர்வாலின் அழகு இரண்டை மட்டுமே சிலாகிக்க முடியும்!
நுணுக்கமான காட்சி அமைப்புகள் நிரம்ப உண்டு. உதாரணமாகப் பிரதான ரவுடியிடம், துணை ரவுடிகள் காதலுக்கு ஐடியாக் கொடுக்கும் காட்சியைச் சொல்லலாம்.
உன்னை மாதிரி ஒரு அழகான மாப்பிள்ளை என்று ரவுடியிடம் ஆரம்பிக்கும் அல்லக்கை, முழு போதையிலும் தன் தவறை உணர்ந்து, அழகான என்ற வார்த்தையை நீக்கவிட்டு, உன்னை மாதிரி மாப்பிள்ளை என்று திருத்திச் சொல்வது புன்முறுவலை வரவழைக்கிறது.
ரவுடித்தனத்தை மேன்மைப்படுத்தும் இவை போன்ற படங்கள், இளைய சமுதாயத்தின் மனத்தில் நேர்மறை எண்ணங்களைச் சிதைத்து, சமூக அமைப்பின்மீது ஓர் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் அபாயகரமான சாத்தியங்கள் நிரம்ப உண்டு.
மொத்தத்தில் மாரி... வெரி சாரி!
குமுதம் சினி விமர்சனம்
சுத்தமான கெட்டவனின் கதை!
காதலில் சொதப்பாத பாலாஜிமோகனின் ஆக்ஷன் படம். ஆடுகளம், புதுப்பேட்டை மாறியான களம் என்றால் தனுஷூக்கு சொல்லவா வேண்டும்? எக்ஸ்ட்ரா கெத்து! உதவிக்கு அனிருத்தின் குத்து!, அசால்ட்டாக பட்டாசை கொளுத்திப் போட்டுக் கொண்டே எதிரிகளை கல்லா கட்டுவதும், காதலி ஏமாற்றிவிட்டாள் என்பது தெரிந்ததும் பெண்களே இப்படித்தாண்டா என்று புலம்புவதுமாக செஞ்சுருக்கார் தனுஷ்! (படம் பூராவும் சிகரெட் குடிப்பது அக்கிரமம்)
காஜல் அகர்வால் க்யூட். ஆனால் எச்சரிக்கை - முத்த முகம் கொஞ்சம் முத்திக் கொண்டு வருகிறது.
போலீஸ் வேடத்துக்கு விஜய் யேசுதாஸ் பொருத்தம்.
இசை ஹனிருத்!
பெண்களைக் கலாய்த்து வரும் ஒவ்வொரு வசனத்துக்கும் கைதட்டல் மழை பொழிகிறது. பொம்பளைங்களும் தட்டறாங்க பாஸு!
ரோபோ சங்கர் களை கட்டுகிறார், இடி சாரி அடிதாங்கியும் ஓகே.
கலாட்டாவில் செலுத்திய கவனத்தை கதையிலும் செலுத்தியிருக்கலாம்
மாரி - சுள்ளான்களுக்காக
குமுதம் ரேட்டிங் - ஓகே























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!