தினமலர் விமர்சனம் » முகமூடி
தினமலர் விமர்சனம்
சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன், அயர்ன்மேன் ஆகிய ஹாலிவுட் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டுகளுக்கு போட்டியாக தமிழில் வெளிவந்திருக்ம் முதல் சூப்பர் ஹீரோ கதையம்சம் உடைய படம்தான் "முகமூடி".
வீட்டில் தண்டச்சோறு, வெட்டி ஆபிஸர் என பெயர் எடுக்கும் ஹீரோ ஜீவா, தான் கஷ்டப்பட்டு, இஷ்டப்பட்டு பயின்ற தற்காப்பு கலை மூலம் வெளியில் தீமைகளுக்கு தீங்கு செய்து நன்மைக்கு நாற்று நடுகிறார். இதனால் ஜீவாவாலும் அவரது தற்காப்பு குரு செல்வாவாலும் தொடர் பாதிப்பிற்கு உள்ளாகும் கொள்ளை கும்பல் தலைவன் நரேனும் அவரது சகாக்களும் குருவையும், சிஷ்யனையும் தீர்த்து கட்ட முயற்சிக்கின்றனர். அதிலிருந்து ஜீவா எப்படி தப்பித்து நரேன் அண்ட் கோவினரை தனது சூப்பர் ஹீரோ பவரால் கூண்டோடு கைலாசம் அனுப்புகிறார் என்பதுதான் முகமூடி படத்தின் மொத்த கதையும், இதனூடே ஜீவாவிற்கும் போலீஸ் ஆபிஸர் நாசரின் மகள் பூஜா ஹெக்டேவுக்குமிடையேயான காதலையும் கலந்துகட்டி கலர்புல்லாக முகமூடியை தர முயற்சித்திருக்கும் இயக்குநர் மிஷ்கினை பாராட்டியே ஆக வேண்டும்!
தமிழில் இப்படி ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்டை முதன்முறையாக முயற்சித்திருக்கும் இயக்குநர் மிஷ்கின் சொன்னதை ஏன்? எதற்கு? என்று கேட்காமல் செய்திருக்கும் நடிகர் ஜீவா முகமூடிக்காக ரொம்பவும் கஷ்டப்பட்டிருப்பது ஒவ்வொரு காட்சியிலும் அப்படியே தெரிகிறது. சில இடங்களில் அது காமெடியாகவும் தெரிவதுதான் முகமூடியின் பலவீனம்! ஜீவா தன் தாத்தாவின் உதவியுடன் சூப்பர் ஹீரோவாக படிப்படியாக உருவாவது எல்லாம் ஓ.கே. தற்காப்பு கலையை தீவிரமாக பயிலும் ஒருவர், குடி, கும்மாளம் என்று ஆரம்பகாட்சிகளில் இருப்பதும், லட்சியமே இல்லாமல் சுற்றுவதும் சுத்தமாக நம்ப முடியாதது. மிஷ்கின் நினைத்திருந்தால் இவற்றை தவிர்த்திருக்கலாம்! மற்றபடி மெலிதாக பூஜா ஹெக்டேவுடன் பிறக்கும் காதலுடன் சூப்பர் ஹீரோவாக ஜீவா சூப்பர்ப்!
கொள்ளைக்கும்பல் தலைவன், அங்கு சாமியாக நரேன் நடுங்க வைக்கிறார்! சுத்தியலும் கையுமாக அவர் திரிவது முகமூடியின் முகமூடியை உடைக்கத்தான் எனப்பார்த்தால் அது சும்மா ஷோவிற்குத்தான் என்பது மாதிரி புஸ்ஸாகி போகிறது. அதேமாதிரி க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க நரேன் செய்யும் மேனரீஸங்களும், தாங்கலைடா சாமி எனும் அளவில் ஜீவாவுடன் சேர்ந்து ரசிகர்களையும் சித்ரவதை செய்வது வேதனை! நரேனின் மேனரீஸங்களை விடுங்கள் ஜீவாவை ஒரு காட்சியில் அடித்து உதைத்து, அவர் பேசும் டயலாக்கிலாவது பேட்மேன், ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், அயர்ன்மேன் முகமூடி "நீ டவுன்மேன்... என்றோ நீ டவுன் மாஸ்க்மேன்" என்றோ ரைமிங் பன்ச் இருந்திருக்கலாம் அதுவும் மிஸ்ஸிங்! மிஸ்கினின் "கிங் எங்கே என்று தேட வேண்டியதாகிவிடுகிறது! மற்றபடி நாயகி பூஜா ஹெக்டே, நாசர், செல்வா, கிரீஷ்கர்னாட் எல்லோரும் தங்கள் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். முகமூடி ஜீவாவை அவர் வாயாலேயே சொல்லும் வரை பூஜாவிற்கு தெரியாமலே இருப்பது சுத்த ஹம்பக்!
மெயின் டைரக்டர் மிஷ்கினை விட, மியூசிக் டைரக்டர் கே-க்கு தான் படத்தில் செம வேலை! அதை வெகு சிறப்பாக பின்னணி இசையிலும் பாடல்கள் இசையிலும் செய்திருக்கிறார் கே. அதிலும் "வாயமூடி சும்மா இருடா...", "பார் ஆன்த்தம்..." பாடல்களில் கே கலக்கி இருக்கிறார். சத்யாவின் ஒளிப்பதிவும், கே.வின் இசை மாதிரியே முகமூடியின் பெரும்பலம்! ஆனாலும், சீரியஸான கதையில் சிறுபிள்ளை தனமாக பொதிந்து கிடக்கும் சில விஷயங்களை மிஷ்கின் தவிர்த்திருந்தார் என்றால் "முகமூடி" கம்பீரமான "ராஜமுடி!"