பெத்தி,Peddi
Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு: விருத்தி சினிமாஸ்
இயக்கம்: புச்சி பாபு சனா
நடிப்பு: ராம்சரண், சிவராஜ்குமார், ஜெகபதிபாபு, ஜான்விகபூர், பொமன்இரானி, திவ்யேந்துசர்மா
ஒளிப்பதிவு: ரத்னவேலு
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
வெளியான தேதி: ஜூன் 4, 2026
நேரம்: 2 மணி 41 நிமிடங்கள்
ரேட்டிங்: 2.5 / 5

ஆந்திராவில் விஜய நகரம் ஏரியாவில் உள்ள ஒரு மலையடிவாரத்தில் வசிக்கும் தொழிலாளியான ராம்சரண் கிரிக்கெட் விளையாடுகிறார், குஸ்தி சண்டை போடுகிறார், கடைசியில் பாரா ஆசியன் போட்டியில் கலந்துகொள்கிறார். எதற்காக? தங்கள் ஊருக்கு ஒரு ரயில்வே ஸ்டேஷன் வேண்டும் என்பதற்காக. இந்த போட்டிகளில் தடைகளை மீறி அவர் ஜெயித்தாரா? அந்த ஊரில் ரயில் நின்றதா? இதுதான் பெத்தி படத்தின் கதை.

தெலுங்கில் 'உப்பென்னா' என்ற ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குனர் புச்சி பாபு சனா, இவர் சில ஆண்டுகளாக உருவாக்கிய படம் பெத்தி. ராம்சரணும் 3 மாறுபட்ட கெட்அப், கேரக்டருக்காக 2 ஆண்டுகளாக உழைத்து உருவாக்கிய படம். தமிழிலும் பெத்தி அதே பெயரில் டப்பாகி உள்ளது. ராம்சரண் கேரக்டர் பெயர் பெத்தி என்பதால் இந்த தலைப்பு. செல்போன் வராத முந்தைய காலகட்டத்தில் இந்த கதை நடக்கிறது. சர்க்கரை ஆலையில் கூலி தொழிலாளியாக இருக்கும் ராம்சரண் 'கூலிக்காக' கிரிக்கெட் விளையாடுகிறார். மலைவாசிகள் வசிக்கும் மலைகிராம பகுதியில் ரயில் நிற்க வேண்டும். ஒரு ஸ்டேஷன் வர வேண்டும் என்று 30 ஆண்டுகளாக போராடி அவமானப்பட்டு செத்துபோகிறார். அவர் ஊர் பெரியவரான ஜகபதிபாபு. கிரிக்கெட் விளையாட்டில் ஜொலிக்கும் ராம்சரணை அடிமை என்று வில்லன் டீம் அவமானப்படுத்தி பழிவாங்க, அவர் என்ன முடிவெடுக்கிறார் என்ற ரீதியில் கதை நடக்கிறது.

வழக்கமான தெலுங்கு படம், கலர்புல் பாடல் இருக்கும். காமெடி, அதிரடி ஆக் ஷன் இருக்கும். பக்காக கமர்ஷியலாக இருக்கும் என நினைத்தால், பெத்தி வேறு ரகம். ஒரு அழுத்தமான கதையில், சமூக கருத்துள்ள விஷயத்தில் ஹீரோயிசம், பில்டப்புடன் நடித்து இருக்கிறார் ராம்சரண். கிரிக்கெட் வீரராக அவர் ஆடும் ஆட்டங்கள் செம கைதட்டல். சூழ்நிலை காரணமாக குஸ்தி சண்டை வீரராக மாறியும், களத்தில் கலக்குகிறார். கிளைமாக்சில் பாரா ஆசியன் போட்டியில் ஓடுகிறார். இப்படி 3 கேரக்டரிலும் கடுமையான உழைப்பை, அதற்கேற்ப உடல்வாகை தந்து கொடுத்து இருக்கிறார். உண்மையிலே சண்டைக்காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். கிரிக்கெட் பின்னணி சண்டை மாஸ் என்றால், குஸ்தி சண்டை கிளாஸ். பாடல் காட்சிகளில் வழக்கம்போல் ஆடி தீர்த்து இருக்கிறார். மாஸ் ஹீரோவாக இருந்தாலும் கிராமம், விளையாட்டு, மலைவாழ் மக்களின் வலியை சொல்லும் கதைகளை தேர்ந்தெடுத்தற்காக பாராட்டலாம். இதற்காக அவர் கடுமையாக உழைத்ததும் படத்தில் தெரிகிறது. ஆனால், அவர் ரசிகர்களை தவிர மற்றவர்கள் பல காட்சிகளில் ஏமாற்றம் அடைய வேண்டியது இருக்கும். அவ்வளவு பில்டப். அதிலும் அந்த கிளைமாக்ஸ் முந்தைய டில்லி காட்சிகள் ஏகப்பட்ட பில்டப். எப்போதும் ஒருவித இறுக்கமான முகத்துடன் இருக்கிறார். முக்கியமான இடங்களில் கூட எமோஷன் மிஸ்சிங்.

ராம்சரண் ஜோடியாக, அந்த ஏரியா பெரியமனிதர் பொண்ணாக ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வருகிறார். உண்மையை சொன்னால், அவரை கவர்ச்சிக்கு ஊறுகாய் மாதிரி பயன்படுத்தி இருக்கிறார்கள். அவருக்கான சீன்களும் குறைவு. ஒரு பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கும் ஸ்ருதிஹாசன் வயது அதில் தெரிகிறது. ராம்சரண் தவிர, குஸ்தி வாத்தியாராக வரும் சிவராஜ்குமார், விளையாட்டுதுறை அதிகாரியாக வரும் போமன் இரானி, ரயில்வே ஸ்டேஷனுக்காக போராடும் ஜெகபதிபாபு ஆகியோர் வலுவான கேரக்டர். கதையை இவர்கள் நகர்த்தியிருக்கிறார்கள். தெலுங்கு படம் சென்றும் ஜான் விஜய் கத்திக்கொண்டே இருக்கிறார். நல்ல நடிகரான திவ்யந்துக்கு கூட சுமார் கேரக்டர். ராம்சரண் கதையை சொல்லும் நபர் நல்ல தேர்வு. மற்றபடி பல நடிகர்கள் நடிப்பில் அவ்வளவு செயற்கைதனம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிக்கிரி, ராம்சரண் ஓபனிங் பாடல் ஓகே. இன்னும் சிறப்பாக பாடல்கள் கொடுத்து இருக்கலாம். பின்னணி இசையும் ஓகே. ரத்னவேலு ஒளிப்பதிவு, அவர் விளையாட்டு போட்டிகளில் காட்டிய உழைப்பு தெரிகிறது. 3.மணி நேரம் 9 நிமிடம் படம் ஓடுகிறது. முதல் பாதி நெளிய வைக்கிறது. அரை மணி நேர படத்தை வெட்டி எறிந்து இருக்கலாம். அதிலும் பல காட்சிகள் இழு, இழுவென இழுக்கிறது. ஹீரோவை சந்தோஷப்படுத்த வேண்டும். அவர் பில்டப் காட்சிகள் மட்டுமே இருக்க வேண்டும். அவருக்கு விருது கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இயக்குனர் சீன் வைத்து இருக்கிறார். அது ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது. கிளைமாக்ஸ் டச்சிங் என்றாலும், அதை இன்னும் ஷார்ப்பாக சொல்லியிருக்கலாம்.

'லப்பர்பந்து, கர்ணன், தங்கல், பைசன்' என பல படங்களின் சாயல், காட்சிகள் பெத்தியிலும் இருக்கிறது. மலைவாழ் மக்களின் வலியை, அவர்களுக்கு போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் இல்லாததை, அவர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதை சொல்லும் அருமையான கரு. கிராமங்களில் விளையாட்டு எப்படி இருக்கிறது. இந்திய விளையாட்டுதுறை, அதிகாரிகள் எப்படி இருக்கிறார்கள் என்பதை காண்பித்த விதமும் நச். ஆனால், ஒட்டுமொத்தமாக பார்த்தால் சில சீன்கள் பரபரப்பு. பல சீன்கள் போரடிக்கிறது.தெலுங்கு படமாக இருந்தாலும் என்டர்டெயின்ட்மென்ட் குறைவு.

பெத்தி - விளையாட்டு பற்றி கதை, அதை விளையாட்டாக சொல்லலை

 

பெத்தி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பெத்தி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓