சாலா,Saala
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - பியூப்பிள் மீடியா பேக்டரி
இயக்கம் - மணிப்பால்
இசை - தீசன்
நடிப்பு - தீரன் ஸ்ரீ நட்ராஜ், ரேஷ்மா வெங்கடேஷ், அருள்தாஸ்
வெளியான தேதி - 23 ஆகஸ்ட் 2024
நேரம் - 2 மணி நேரம் 1 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

“மது அருந்துதல் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும், பாதுகாப்பாக இருப்பீர் - மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்,” என பல படங்களின் ஆரம்பத்தில் எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெறும். ஆனால், அந்த வாசகங்களுக்கேற்ப படங்களில் எந்த ஒரு காட்சியிலாவது அதன் தீங்கைப் பற்றிப் பேசும் வசனங்களை வைப்பதில்லை. அந்த இடங்களிலும் அந்த எச்சரிக்கை வாசகங்கள் மட்டுமே வந்து போகும்.

மதுவுக்கு எதிரான படங்கள், பெண் கொடுமைகளுக்கு எதிரான படங்கள் என ஒரு சில படங்கள் மட்டுமே எப்போதாவது வருகின்றன. அதுவும் குடிப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய படங்கள் வருவது அபூர்வமாகிவிட்டது. மதுப் பழக்கத்தைத் தீவிரமாக எதிர்க்கும் ஒரு படமாக இந்த 'சாலா' படம் வந்திருப்பது அபூர்வம், ஆச்சரியம்.

சென்னை, ராயபுரம் பகுதிதான் கதையின் கதைக்களம். அங்கு பல பார்களை நடத்தி வருபவர் ஏரியாவின் பெரிய ஆளான அருள் தாஸ். ஒரு சம்பவத்தில் தன் உயிரைக் காப்பாற்றிய சிறுவனை எடுத்து வளர்க்கிறார் அவர். அந்த சிறுவன்தான் வளர்ந்து ஆளான படத்தின் நாயகன் தீரன். அருள் தாஸுக்கு பார்களை நடத்துவதில் தொழில் போட்டியாளர் சார்லஸ் வினோத். போலி மதுபானங்களைத் தயாரித்து விற்பவர் சார்லஸ். பழைய பகையின் காரணமாக அருள்தாஸைக் கொல்ல நினைக்கிறார் சார்லஸ். தன்னை வளர்த்த அருள்தாஸுக்கு பாதுகாவலனாக நிற்கிறார் தீரன். இவர்களது பகை எப்படி முடிவுக்கு வருகிறது என்பதுதான் மீதிக் கதை.

எதிர்மறை நாயகன் என்பதால் இந்தக் கதைக்குப் பொருத்தமாகவே இருக்கிறார் தீரன். வாட்ட, சாட்டமாய் இருக்கிறார், நன்றாக நடனமாடுகிறார், சண்டை போடுகிறார். நடிக்கக் கொஞ்சம் கற்றுக் கொண்டால் நல்லது. முதல் படம் என்பதால் பாஸ் மார்க் மட்டும் தரலாம்.

ஸ்கூல் டீச்சராக ரேஷ்மா வெங்கடேஷ். பள்ளியில் பாடம் எடுக்கும் நேரம் போது மீதி நேரங்களில் பார்களை நடத்துபவர்களுக்குப் பாடம் நடத்துகிறார். அதற்காக தன்னுடன் சில சிறுவர்கள், சிறுமியர்கள், பெண்களை சேர்த்துக் கொண்டு மதுப் பழக்கத்திற்கு எதிராகப் போராடுகிறார். அதனால், ஏற்படும் தீமைகளைப் பற்றிப் பேசுகிறார். அழகான பெண்கள் பேசினால் காது கொடுத்து கேட்பார்கள் சிலர். அப்படித்தான் படத்தின் கதாநாயகன் தீரனும் கேட்கிறார். தனது தொழிலான பார் நடத்துவதை எதிர்த்தாலும் நாயகி மீது கொஞ்சம் அனுதாபப்படுகிறார். ரேஷ்மா படிக்க வைக்கும் குழந்தைகளுக்காக தீரன் செலவு செய்கிறார். இருவருக்கும் இடையே காதல் இல்லை என்றாலும் ஒரு புரிதல் இருக்கிறது. ரேஷ்மாவுக்கு புதிய பட வாய்ப்புகள் வரலாம்.

நாயகன் தீரனின் நண்பனாக ஸ்ரீநாத். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்காக தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டாரா அல்லது அவரது தோற்றமோ அப்படி மாறிவிட்டதா என்று தெரியவில்லை. முகத் தோற்றத்தில் டல்லடிக்கிறார்.

தீரனை சிறு வயதிலிருந்து எடுத்து வளர்க்கும் ஏரியாவின் பெரிய ஆளாக அருள் தாஸ். நிறைய பார்களை ஏலத்தில் எடுத்து அவர்தான் நம்பர் 1 என சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறார். அவருக்கான முடிவு எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது. தோற்றத்திலேயே மிரட்டி இருக்கிறார் அருள் தாஸ். அவருக்கு எதிரானவராக சார்லஸ் வினோத், அவர்தான் படத்தின் வில்லன். இவருக்குத் துணை போகும் இன்ஸ்பெக்டராக சம்பத் ராம்.

தீசன் இசையமைப்பில் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. ரவிந்திரநாத் குரு ஒளிப்பதிவில் வட சென்னை பகுதி என 'லிமிட்' செய்துவிட்டார்.

படத்தின் ஆரம்பம் முதல் ஒரு சராசரிப் படமாகப் போனாலும் படத்தின் கடைசி 20 நிமிடக் காட்சிகள் உலுக்கி விடுகிறது. குடிப்பழக்கத்தால் நடக்கும் பல விபத்துகளுக்கான சாட்சியாக ஒரு சில வீடியோக்களைத்தான் நிஜ வாழ்க்கையில் பார்க்க முடியும். ஆனால், இந்தப் படத்தில் காட்டப்படும் அந்த விபத்துக் காட்சி நம்மை உருக வைத்துவிடுகிறது. அந்தக் கடைசி நிமிடங்களுக்காக முன்னர் தெரிந்த சில பல குறைகளும் மறந்துவிடும்.

சாலா - மதுப்ரியனை மாற்றும் மாது

 

சாலா தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

சாலா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓