வெப்பம் குளிர் மழை,Veppam Kulir Mazhai
Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஹாஷ்டேக் எப்டிஎஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - பாஸ்கல் வேதமுத்து
இசை - சங்கர் ரங்கராஜன்
நடிப்பு - திரவ், இஸ்மத் பானு, எம்எஸ் பாஸ்கர்
வெளியான தேதி - 29 மார்ச் 2024
நேரம் - 2 மணி நேரம் 12 நிமிடம்
ரேட்டிங் - 3/5

2024ல் கிராமம் சார்ந்த வாழ்வியல் படங்களையும் தர வேண்டும் என ஒரு அறிமுக இயக்குனர் நினைப்பது அபூர்வமான ஒன்று. இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து குழந்தையின்மை பற்றிய முக்கிய பிரச்னையை, அருமையான கிராமத்து வாழ்வியலோடு யதார்த்தமாய் கொடுத்திருக்கிறார்.

திரவ், இஸ்மத் பானு இருவருக்கும் பெற்றோர்களாகப் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணமாகி நான்கைந்து ஆண்டுகள் ஆன பிறகும் இருவருக்கும் குழந்தை பிறக்கவில்லை. ஊரார் பேச்சு, மாமியார் பேச்சு ஆகியவற்றால் மனமுடைந்த இஸ்மத், கணவர் திரவ்வை எப்படியோ சம்மதிக்க வைத்து டவுன் ஆஸ்பத்திரிக்கு குழந்தையின்மை சிகிச்சைக்காகச் செல்கிறார். மருத்துவ பரிசோதனை முடிவுகள் அவரது கணவருக்குத்தான் குறை எனச் சொல்கிறது. கணவர் அதைக் கேட்டால் தாங்க மாட்டார் என நினைக்கும் இஸ்மத் செயற்கை கருவுறுதல் மூலம் தாய்மை அடைகிறார். அதை கணவரிடமும் மறைக்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஆரம்பம் திரவ், இஸ்மத் திருமணத்தில் ஆரம்பமாகி அதன்பின் அவர்களது குடும்ப வாழ்க்கை என முக்கால்வாசி திரைக்கதை நகர்கிறது. அதில் குழந்தையில்லாத பிரச்னையை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை கிராமங்களில் இருப்பதைப் போல உள்ளது உள்ளபடி அப்படியே பிரதிபலித்திருக்கிறார். கிளைமாக்சுக்கு முன்பாகத்தான் இஸ்மத் தாய்மை அடைவது அதன்பின் உருவாகும் பிரச்னைகள் என பரபரப்பாக்கி ஒரு அழகான அறிவுறுத்தலுடன் படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து.

பெத்தபெருமாள் என்ற கதாபாத்திரத்தில் அறிமுக நாயகன் திரவ். கிராமத்து இளைஞரை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். உடல்மொழியும், பேச்சும் நடிகர் ஜிஎம் சுந்தர் போல உள்ளது. எந்த ஒரு இடத்திலும் அவர் நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு யதார்த்தமான ஒரு நடிப்பு. அறிமுகப் படத்திலேயே நடிப்பிற்கு அதிக அளவு ஸ்கோப் உள்ள கதாபாத்திரம். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இஸ்மத் பானு, இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நம் பக்கத்து வீட்டுப் பெண் தோற்றத்தில் உள்ள கதாநாயகிகளை அதிகம் பார்க்க முடிவதில்லை. அந்தக் குறையைத் தீர்த்து வைத்துள்ளார். பாண்டி கதாபாத்திரத்தில் இஸ்மத்தின் நடிப்பு அவருக்கு இன்னும் பல படங்களைப் பெற்றுத் தரும். குழந்தையில்லை என்றால் நகரம் என்ன, கிராமம் என்ன எல்லா இடங்களிலுமே அவப்பெயர்தான் கிடைக்கும். அதைக் கேட்டு பொங்குவதாகட்டும், மாமியாரை எதிர்த்து பேசுவதாகட்டும், கணவனிடம் எதிர்த்துப் பேசி பின் அடங்குவதாகட்டும் இஸ்மத் நடிப்பு இயல்பாக அமைந்துள்ளது.

திரவ் அம்மாவாக ரமா. 'மெட்ராஸ்' மாமியார், 'கிராமத்து' மாமியாராகவும் மாற முடியும் என மிரட்டியுள்ளார். ஊரில் இருக்கும் வம்புகளைத் தேடிப் பிடித்து பரப்பும் பெரியவராக எம்எஸ் பாஸ்கர். ஒவ்வொரு கிராமத்திலும் இப்படி ஒரு கதாபாத்திரம் நிச்சயம் இருக்கும்.

உணர்வுபூர்வமான காட்சிகளில் சங்கர் ரங்கராஜனின் பின்னணி இசை கூடுதல் அழுத்தத்தைத் தருகிறது. பிரித்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவு அந்தக் கிராமத்தின் மூலை முடுக்குகள் அனைத்தையும் அதன் இயல்புடன் பதிவு செய்துள்ளது.

ஒரே பிரச்னையைச் சுற்றிச் சுற்றியே திரைக்கதை நகர்வது கொஞ்சம் சலிப்பைத் தருகிறது. கிளைமாக்சுக்கு சற்று முன்தான் அடுத்த கட்ட நகர்வுக்கே செல்கிறது திரைக்கதை. மாடுகள் கருவுற செயற்கை சினை ஊசி போடும் வேலை பார்க்கும் திரவ்வுக்கு மனிதர்களுக்கான செயற்கை கருமுறை பற்றிய தெளிவு இல்லாமல் இருப்பது ஆச்சரியமாகவும், முரணாகவும் உள்ளது.

கிளைமாக்ஸ் காட்சியில் திரவ் பேசும் அந்த ஒரு வசனம் இப்படத்தின் தரமான சம்பவம்.

வெப்பம் குளிர் மழை - மழை

 

பட குழுவினர்

வெப்பம் குளிர் மழை

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓