3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : கோகுலம் கோபாலன் பிலிம்ஸ் & பறவ பிலிம்ஸ்
இசை : சுஷின் ஷியாம்
இயக்கம் : சிதம்பரம்
நடிப்பு : சவ்பின் சாகிர், ஸ்ரீநாத் பாஷி, ஜார்ஜ் மரியான், ராம்ஸ்
வெளியான தேதி : 22 பிப்ரவரி 2024
ஓடும் நேரம் : 2 மணி 15 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5

கொச்சியை சேர்ந்த மஞ்சும்மேல் பாய்ஸ் என அழைக்கப்படும் பத்து நண்பர்களை கொண்ட குழு கொடைக்கானலுக்கு சுற்றுலா கிளம்பி செல்கின்றனர். ஆர்வம் மிகுதியால் பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட குணா குகை பகுதிக்கு சென்று பார்க்க விரும்புகின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக நண்பர்களில் ஒருவரான ஸ்ரீநாத் பாஷி அங்கு இருக்கும் பள்ளத்தை கவனிக்காமல் கால் நழுவி குகைக்குள்ளே விழுந்து விடுகிறார். அதிர்ச்சி அடையும் நண்பர்கள் அவரைக் காப்பாற்றுமாறு அருகில் இருப்பவர்களையும் காவல் நிலைய அதிகாரிகளையும் அழைத்து கெஞ்சுகின்றனர்.

அந்த குகையில் விழுந்தவர்கள் இதுவரை உயிர் பிழைத்ததில்லை என்றும் அவர்களது உடலின் பாகங்கள் கூட கிடைத்ததில்லை எனக் கூறி நண்பர்களை ஊருக்கு கிளம்புமாறு போலீசார் அறிவுரை கூறுகின்றனர். அதற்குள் விஷயம் வெளியே பரவ வேறு வழியின்றி தீயணைப்புத் துறை வரவழைக்கப்பட்டு மீட்பு முயற்சி துவங்குகிறது. ஆனாலும் வீரர்கள் எவரும் உயிர் பயத்தில் பள்ளத்தில் இறங்கி தேடுவதற்கு மறுக்கின்றனர்.

இந்த நிலையில் நண்பர்களில் ஒருவரான சவ்பின் ஷாகிர் தானே இறங்குவதாக முன் வருகிறார். உருவத்தில் பருமனான அவரால் அதில் இறங்க முடிந்ததா ? ஸ்ரீநாத் பாஷியை காப்பாற்ற முடிந்ததா ? அதுவரை அவர் உயிரோடு இருந்தாரா என்பதற்கு பரபரப்பான மீதிக்கதை விடை சொல்கிறது.

எப்போதாவது நாம் செய்தித்தாள்களில் பார்க்கும் ஒரு நிகழ்வு, அதே சமயம் நிஜத்தில் நடந்த சம்பவம் இவற்றை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சுஷின் சியாம். கமல் நடித்த குணா படம் மூலம் புகழ்பெற்ற 'குணா குகை'யை சுற்றி பின்னப்பட்டுள்ள கதை என்பதாலோ என்னவோ படத்தின் துவக்கத்திலேயே குணாவில் இடம் பெற்ற கண்மணி அன்போடு என்கிற முழு பாடலையும் டைட்டில் கார்டில் விஷுவலாக இடம் பெறச் செய்து கமலுக்கு தங்களது நன்றியை வெளிப்படுத்தி உள்ளனர். கிளைமாக்ஸிலும் இதே டச்சிங்கை கொடுத்துள்ளனர்.

இளைஞர்கள் பத்து பேர் என கூட்டமாக இருந்தாலும் அவர்களில் நமக்கு அறிமுகமானவர்கள் என்னவோ பள்ளத்தில் விழுந்த ஸ்ரீநாத் பாஷியும் துணிச்சலாக அவரைக் காப்பாற்ற முயற்சிக்கும் சவ்பின் ஷாகிரும் மட்டும் தான். இதில் நண்பனை காப்பாற்ற முயற்சிக்கும் சவ்பினின் போராட்டம் நம்மை கடைசி அரை மணி நேரம் பதட்டத்திலேயே வைத்திருக்கிறது.

இவர்களை தாண்டி தமிழ் நடிகர்களான ஜார்ஜ் மரியான் மற்றும் ராம்ஸ் இருவரும் இந்த இளைஞர்கள் குழுவுக்கு உதவத் துடிக்கும் அந்தப்பகுதி மனிதர்களாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதை நிகழும் இடம் தமிழகத்தில் உள்ள கொடைக்கானல் என்பதால் படத்தின் பெரும்பாலான வசனங்கள் தமிழிலேயே இருக்கின்றன. மேலும் படம் துவங்கிய அரை மணி நேரத்திற்கு பிறகு எங்கும் தமிழ் முகங்களாகவே காட்சியளிப்பதால் ஒரு தமிழ் படம் பார்ப்பது போன்ற உணர்வு தான் ஏற்படுகிறது.

எப்போதுமே இதுபோன்று மீட்பு பணியை மையப்படுத்தி சர்வைவல் த்ரில்லராக உருவாகும் படங்கள் குறைந்தபட்ச விறுவிறுப்புக்கும் வெற்றிக்கும் உத்தரவாதம் தருபவையாகத்தான் இருக்கும். இந்தப் படமும் அதேபோல இடைவேளைக்கு பின் என்ன நடக்குமோ என நம்மை பதைபதைக்க வைத்து விடுகிறது.

இந்த இளைஞர்கள் குழு தங்களது ஊரில் கயிறு இழுக்கும் போட்டியில் அடிக்கடி கலந்து கொள்பவர்கள் என காட்டியது, நண்பனை மீட்க சவ்பின் பள்ளத்தில் இறங்குவதற்காக அவர்களது சிறுவயது பிளாஷ்பேக் சம்பவம் ஒன்றை காட்டுவது என இந்த மீட்பு பணியில் எழக்கூடிய லாஜிக்குகளை அழகாக சரி செய்திருக்கிறார் இயக்குனர் சுஷின் சியாம். ஆரம்பத்தில் தமிழக காவலர்களை மோசமானவர்களாக காட்டினாலும், போகப்போக கிளைமாக்ஸில் அவர்களது பெருந்தன்மையையும் வெளிப்படுத்த தவறவில்லை.

படத்தில் ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித்தின் பங்கு மகத்தானது. குறிப்பாக குகைக்குள் மீட்பு பணி நடக்கும் காட்சிகளில் அவர் மட்டுமல்ல நாமும் சிக்கிக்கொண்டதை போன்ற ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார். அதிலும் ஸ்ரீநாத் பாஷி அந்த குகைக்குள் உள்ள இந்து இடுகுகளில் சிக்கி ஒவ்வொரு ஸ்டெப்பாக கீழே விழுவது நம்மை உறைய வைக்கும் காட்சி.

தமிழில் இதேபோன்று கதையம்சத்துடன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் விதமாக உருவாகி இருந்த அறம் திரைப்படத்தை நாம் எப்படி பார்த்து ஆர்ப்பரித்தோமோ அதேபோல கேரளாவிலும் இந்த படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பை திரையரங்குகளில் பார்க்க முடிந்தது. மொழி தாண்டி ரசிக்கக் கூடிய படங்களின் பட்டியலில் இந்த படமும் இணைந்துள்ளது.

குறிப்பு : இந்தப்படத்தில் காதலும் இல்லை.. கதாநாயகியும் இல்லை..

மஞ்சும்மேல் பாய்ஸ் : நண்பேண்டா

 

பட குழுவினர்

மஞ்சும்மேல் பாய்ஸ் (மலையாளம்)

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓