மறக்குமா நெஞ்சம்,Marakkuma Nenjam

மறக்குமா நெஞ்சம் - பட காட்சிகள் ↓

Advertisement
2

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - பிலியா என்டர்டெயின்மென்ட், குவியம் மீடியா ஒர்க்ஸ்
இயக்கம் - ராக்கோ யோகேந்திரன்
இசை - சச்சின் வாரியர்
நடிப்பு - ரக்ஷன், மலினா, தீனா
வெளியான தேதி - 2 பிப்ரவரி 2024
நேரம் - 2 மணி நேரம் 17 நிமிடம்
ரேட்டிங் - 2/5

பள்ளியில் படிக்கும் காலங்களில் வரும் காதல் என இன்னும் எத்தனை படங்களில்தான் காட்டுவார்களோ ?. இப்படியான படங்களைப் பார்க்கும் அந்த வயது மாணவ, மாணவியருக்கு படிக்க வேண்டிய வயதில் படிக்காமல் காதலித்துப் பார்க்கலாமே என்ற ஆசை வராதா ?. வருடத்திற்கு ஓரிரு படங்கள் இப்படி வந்து போகிறது ?. '96' படம் தந்த வரவேற்பும், வெற்றியும் பலரையும் இப்படியான படங்களை எடுக்க வைக்கிறது.

இயக்குனர் ராக்கோ யோகேந்திரன் அது போன்ற ஒரு படத்தை எடுத்துப் பெயர் வாங்க வேண்டுமென நினைத்து ஏதோ முயற்சித்திருக்கிறார். ஆனால், நடிக்கத் தெரியாதவர்களைத் தேர்ந்தெடுத்து அல்லது அவர்களை சரியாக நடிக்க வைக்காமல் கோட்டை விட்டிருக்கிறார்.

தனியாக கம்பெனி நடத்தி வருபவர் ரக்ஷன். அவருக்கு சில வருடங்களுக்கு முன்பு முடித்த பள்ளி நாட்களைப் பற்றி அடிக்கடி நினைவு கூர்பவர். ஒரு ரியூனியன் நடத்த வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர். இந்நிலையில் அவர் படித்த 2008ம் ஆண்டில் முறைகேடு நடந்துதான் +2 தேர்வில் அந்தப் பள்ளியில் மாணவ, மாணவியர் வெற்றி பெற்றார்கள் என வேறொரு பள்ளி வழக்கு தொடர்ந்ததற்கு இப்போது தீர்ப்பு வருகிறது. நீதிமன்றத் தீர்ப்பின்படி அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தச் சொல்கிறார்கள். அதனால், அந்த வருடம் படித்த மாணவ, மாணவியர் மீண்டும் அவர்களது பள்ளிக்குச் செல்கிறார்கள். பள்ளியில் படித்த போது மலினா-வை காதலித்து அதை சொல்லாமல் விட்ட ரக்ஷன் இப்போதாவது அந்தக் காதலைச் சொல்ல முயற்சிக்கிறார். அவர் சொன்னாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இதே மாதிரியான சில பல படங்களில் பார்த்த காட்சிகள்தான் இந்தப் படத்தில் மீண்டும் வந்து போகிறது. 2008ல் தேர்வு எழுதியவர்கள் மீண்டும் மறுதேர்வு எழுத வேண்டும் என்பது மட்டுமே புதிதான ஒன்று.

கொஞ்சம் நிதானமாகப் பேசினால் பள்ளி மாணவர் கதாபாத்திரத்தில் நடித்துவிடலாம் என ரக்ஷனுக்கு யார் சொன்னது என்று தெரியவில்லை. அப்படி நடித்தால் அப்பாவி மாணவராகத் தெரியும் என்று நினைத்துவிட்டார் போலும். பள்ளியில் படித்த போதும், மீண்டும் பள்ளிக்குச் சென்ற போதும் ஒரே மாதிரியே நடித்திருக்கிறார்.

ரக்ஷன் காதலிக்கும் பெண்ணாக மலினா. படம் முழுவதும் அவர் வந்தாலும் மனதில் பதிய மறுக்கிறார். அவருக்கான அழுத்தமான காட்சிகள் எதுவும் இல்லாததே அதற்குக் காரணம்.

ரக்ஷன் நண்பராக தீனா, பேசுகிறார், பேசுகிறார், பேசிக் கொண்டே இருக்கிறார். காமெடி என நினைத்து அவர் பேசுவது ஒன்று கூட சிரிப்பை வரவழைக்கவில்லை. இவர்கள் கூட்டணியில் உள்ள அந்த ஒரு தோழி ஸ்வேதா வேணுகோபால் மட்டும் கவனம் ஈர்க்கிறார்.

வழக்கம் போல சில டெம்ப்ளேட் நண்பர்கள், எதிரிகள் கதாபாத்திரங்கள், சென்டிமென்ட் கதாபாத்திரங்கள் என இப்படத்திலும் இருக்கிறது. 2008ல் படித்தவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருகிறார்கள். ஆனால், ஒரே ஒரு வகுப்பில் உள்ளவர்களை மட்டுமே அதுவும் ஒரு 20 பேரை மட்டுமே காட்டுகிறார்கள். பட்ஜெட் பிரச்சனை போலிருக்கிறது.

பள்ளி, கல்லூரி கதைகள் என்றால் பாடல்கள் ஹிட்டாக வேண்டும். அதை செய்யத் தவறிவிட்டார் இசையமைப்பாளர் சச்சின் வாரியர். பள்ளியை வளைத்து வளைத்து படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபி துரைசாமி.

பள்ளி நண்பர்கள், உடன்படிப்பவர்களுடன் காதல் என்ற அரைத்த மாவை தமிழ் சினிமா எப்போது நிறுத்தப் போகிறதோ ?.

மறக்குமா நெஞ்சம் - மெமரி லாஸ்

 

மறக்குமா நெஞ்சம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மறக்குமா நெஞ்சம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓