எனக்கு என்ட்-யே கிடையாது
விமர்சனம்
தயாரிப்பு - ஹங்கிரி ஒல்ப் புரொடக்ஷன்
இயக்கம் - விக்ரம் ரமேஷ்
இசை - கலாசரண்
நடிப்பு - விக்ரம் ரமேஷ், ஸ்வயம் சித்தா
வெளியான தேதி - 6 அக்டோபர் 2023
நேரம் - 1 மணி நேரம் 44 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
ஒரு படத்தின் கதை ஒரு வரியில் எழுதக் கூடியதாக இருந்தாலும், ஒரே இடத்தில் நடக்கக் கூடியதாக இருந்தாலும், பரபரப்பான, விறுவிறுப்பான திரைக்கதை இருந்தால் அந்தப் படத்தை ரசித்துவிடலாம். அப்படி ஒரு படமாக இந்தப் படத்தைக் கொடுக்க முயற்சித்து அதில் குறிப்பிடத்தக்க பாராட்டையும் பெறுகிறார் படத்தின் இயக்குனர் விக்ரம் ரமேஷ்.
டிராவல்ஸ் கார் டிரைவராக இருப்பவர் விக்ரம் ரமேஷ். ஒரு நாள் இரவில் ஸ்வயம் சித்தா-வை பிக்கப் செய்து அவரது வீட்டில் விடுகிறார். காரைவிட்டு இறங்கிய ஸ்வயம் சித்தா, குடிப்பதற்குக் கம்பெனி தரும்படி விக்ரம் ரமேஷை அழைக்க அவரும் செல்கிறார். இருவரும் நன்றாகக் குடிக்கிறார்கள். போதை தெளிந்து கிளம்பலாம் என நினைக்கும் விக்ரம் ரமேஷ், வீட்டின் அறையில் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதைப் பார்க்கிறார். பதறி அடித்து வெளியில் வருபவருக்கும் ஸ்வயம் சித்தாவுக்கும் லேசான சண்டை வர அதில் தடுமாறி விழுந்து இறந்து போகிறார் ஸ்வயம் சித்தா. வீட்டை விட்டு வெளியேற நினைக்கும் போது ஒரு திருடன் வீட்டிற்குள் நுழைய விக்ரமும் உள்ளேயே இருக்க நேருகிறது. திருடனுக்குப் பின் அரசியல்வாதி ஒருவரும் உள்ளே வர மூவருக்கும் சண்டை வந்து பின் சமாதானமாகிறார்கள். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு அழகான, கொஞ்சம் பிரம்மாண்டமான ஒரே ஒரு வீடுதான் கதைக்களம். சிசிடிவி, ஆட்டோமேட்டிக் லாக், பாஸ் வேர்டு தவறாகப் போட்டால் அலாரம் அடித்து போலீஸ் வரும் என டெக்னிக்கலாக பாதுகாப்பு செய்யப்பட்ட ஒரு வீடு. அந்த வீட்டிற்குள் வெவ்வேறு காரணங்களுக்காக நுழையும் அந்த மூவரும் தப்பித்தார்களா இல்லையா என்பதை பரபரப்பாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
விக்ரம் ரமேஷ் படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். இயக்கத்திலும், நடிப்பிலும் பாராட்டைப் பெறுகிறார். அவரது நடிப்பும் குரலும் அவருக்கு பிளஸ் பாயின்ட். முயற்சி செய்தால் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக உயரலாம்.
போதையிலும், கிளாமரிலும் தள்ளாட வைக்கும் நடுத்தர வயதுப் பெண்மணியாக ஸ்வயம் சித்தா. படத்தின் ஆரம்ப அரை மணி நேரத்தில் ரசிகர்களைக் கட்டிப் போட்டுவிடுகிறார்.
வீட்டிற்குள் திருட வருபவரான கார்த்திக் வெங்கட்ராமன், அரசியல்வாதியாக நடித்துள்ள சிவக்குமார் ராஜு, இருவரும் கூட அவரவர் கதாபாத்திரங்களில் இயல்பாய் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக குடித்து விட்டு போதையில் பேசும் காட்சிகளில் நடித்திருக்கும் அனைவருமே நிஜமாகவே குடித்துவிட்டு நடித்திருப்பார்களோ என்று ஆச்சரியப்படும் அளவிற்கு நடித்திருக்கிறார்கள்.
ஒரே ஒரு வீடு, அதில் தனது லைட்டிங்கில், கோணங்களில் நன்றாக முயற்சி செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தளபதி ரத்னம். இசையமைப்பாளர் கலாசரண் பின்னணி இசை பதட்டத்தை இன்னும் அதிகமாக்குகிறது.
இப்படியான புதியவர்களின், வளரும் கலைஞர்களின் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஹீரோக்களின் பின்னாலும், பிரம்மாண்டத்தின் பின்னாலும் போய்க் கொண்டிருக்கும் தமிழ் சினிமா இம்மாதிரியான படைப்புகளால் கொஞ்சம் மீண்டு வரட்டும்.
எனக்கு என்ட்-யே கிடையாது - நல்ல 'ஸ்டார்ட்'.