சிறுவன் சாமுவேல்,Siruvan samuel

சிறுவன் சாமுவேல் - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - கன்ட்ரிசைடு பிலிம்ஸ்
இயக்கம் - சாது பர்லிங்டான்
இசை - சாம் எட்வின் மனோகர், ஸ்டாண்ட்லி ஜான்
நடிப்பு - அஜிதன் தவசிமுத்து, கே.ஜி. விஷ்ணு
வெளியான தேதி - 12 மே 2023
நேரம் - 1 மணி நேரம் 30 நிமிடம்
ரேட்டிங் - 3/5

குழந்தைகளுக்கான படங்கள் தமிழ் சினிமாவில் வருவது மிகவும் அபூர்வம். அப்படி ஒரு அபூர்வமான படமாக, ஆச்சரியமான படமாக வெளிவந்துள்ளது இந்த 'சிறுவன் சாமுவேல்'.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் இருக்கும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனின் ஆசையும், அவன் செய்யும் தவறுகளும்தான் படத்தின் கதை. அதை இயக்குனர் சாது பர்லிங்டான் கன்னியாகுமரி கிராமத்து வாழ்வியல் படமாகக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

90களில் நடக்கும் கதை. விவசாய நிலத்தில் வேலை செய்யும் கூலித் தொழிலாளியின் மகன் சிறுவன் சாமுவேல் (அஜிதன் தவசிமுத்து). அவனுக்கு கிரிக்கெட் மீது அவ்வளவு ஆசை. ஒரு கிரிக்கெட் பேட் வாங்க வேண்டும் என நினைக்கிறான். வீட்டில் கேட்டு திட்டும், அடியும் வாங்கியதுதான் மிச்சம். 90களில் கிரிக்கெட் கார்டுகளை அதிலிருக்கும் பாயின்ட்டுகளுக்கு ஏற்றபடி சேர்த்துக் கொடுத்தால் பேட் இலவசமாகக் கிடைக்கும். அந்த கார்டுகளை சேகரிக்க ஆரம்பிக்கிறான். அதற்கு அவனது டியுஷன் நண்பன் ராஜேஷ் உதவி செய்கிறான். இந்நிலையில் ஒரு பணக்கார வீட்டுப் பையனின் வீடியோ கேம் காணாமல் போகிறது. அந்தப் பழி ராஜேஷ் மீது விழுகிறது. அவன் படிப்பை விட்டு கூலி வேலைக்குச் செல்கிறான். ராஜேஷை சில மாத இடைவெளிக்குப் பிறகு சாமுவேல் பார்க்கிறான். கூலி வேலை செய்து கஷ்டப்படும் ராஜேஷைப் பார்த்து ஒரு முடிவெடுக்கிறான். அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சிறுவன் சாமுவேல் ஆக அஜிதன் தவசிமுத்து நடித்திருக்கிறார். படத்தில் அதிகமான வசனங்கள் சாமுவேலுக்கு இல்லை என்றாலும் பார்வையாலேயே அனைத்து பாவங்களையும் காட்டிவிடுகிறார். பார்ப்பதற்கு அப்பாவி போல இருந்தாலும் கிரிக்கெட் கார்டு சேகரிப்பதற்காக அவர் செய்யும் வேலைகள் ஒன்று, இரண்டல்ல. ஒரு கட்டத்தில் அவரது தவறுகளை உணர்ந்து அவர் எடுக்கும் முடிவு நம்மையும் கண் கலங்க வைத்துவிடும்.

சாமுவேல் நண்பன் ராஜேஷ் ஆக நடித்திருக்கும் கே.ஜி. விஷ்ணு காட்டும் அன்பும், அவர் மீது திருட்டுப் பட்டம் வந்த பிறகு காட்டும் தவிப்பும் ஒரு தேர்ந்த நடிகர் போல இருக்கிறது. இப்படியான நண்பர்கள் நம் சிறு வயதிலும் நம்முடன் இருந்திருப்பார்கள்.

மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களில் அந்த டியூஷன் டீச்சர் அவ்வளவு இயல்பாய் நடித்திருக்கிறார். மற்றவர்களை அந்த ஊரிலேயே இயக்குனர் தேர்வு செய்து நடிக்க வைத்திருப்பார் போலிருக்கிறது.

கன்னியாகுமரி வட்டாரத் தமிழைப் புரிந்து கொள்வது கொஞ்சம் சிரமமாக உள்ளது. சில வார்த்தைகளுக்கான அர்த்தம் என்னவென்று அந்த ஊர் மக்களைக் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள முடியும். படமாக்கப்பட்ட ஊரை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சிவானந்த் காந்தி.

மேக்கிங்கில் மட்டும் செலவை மிச்சப்படுத்தி இருப்பது தெரிகிறது. அதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் ஒரு உணர்வு பூர்வமான படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற இயக்குனரின் உருவாக்கம் ரசிக்க வைக்கிறது. இது போன்ற சிறிய படங்கள், அந்தந்த வட்டாரப் பின்னணிப் படங்கள் இன்னும் நிறைய வர வேண்டும்.

சிறுவன் சாமுவேல் - சிறப்பு…

 

பட குழுவினர்

சிறுவன் சாமுவேல்

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓