குடிமகான்
விமர்சனம்
தயாரிப்பு - சீனரியோ மீடியா ஒர்க்ஸ்
இயக்கம் - பிரகாஷ்
இசை - தனுஜ் மேனன்
நடிப்பு - விஜய் சிவன், சாந்தினி
வெளியான தேதி - 17 மார்ச் 2023
நேரம் - 2 மணி நேரம் 22 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதைகள் என்று பார்த்தால் இன்னும் நிறைய கதைகள் இருக்கின்றன. அப்படி ஒரு சொல்லப்படாத கதையை இந்தப் படத்தில் நகைச்சுவையுடன் கொடுத்து ரசிக்க வைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பிரகாஷ்.
படத்தின் கதாநாயகன் விஜய் சிவன், ஏடிஎம்--களில் பணத்தை நிரப்பும் வேலையைச் செய்பவர். அவருக்கு பஜ்ஜி, போண்டா என கண்டதைச் சாப்பிடும் பழக்கம் இருக்கிறதோ தவிர குடிப்பழக்கம் இல்லை. ஆனால், திடீரென குடிப்பவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்களோ அப்படி நடந்து கொள்கிறார். அப்படி பாதிக்கப்படும் போது, ஒரு முறை ஏடிஎம்--மில் பணத்தை நிரப்பும் போது 100 ரூபாய் டிரேயில் 500 ரூபாயை வைத்துவிடுகிறார். அதனால், அவரை வேலையை விட்டு நீக்கிவிடுகிறார்கள். யார் யாரெல்லாம் அப்போது ஏடிஎம்மில் பணம் எடுத்தார்களோ அவர்களிடமிருந்து மீண்டும் பணத்தை வாங்கி வந்தால் வேலை தருவதாகச் சொல்கிறார்கள். அவர்களை தேடிச் செல்ல ஆரம்பிக்கிறார். அந்தப் பணத்தை மீட்டாரா, அவரது குடி நோயிலிருந்து மீண்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
அப்பாவித்தனமானவராக விஜய் சிவன் பொருத்தமாகவே நடித்திருக்கிறார். ஒரு பக்கம் அப்பாவின் அலப்பறை, மறுபக்கம் மனைவியின் கோபம், வேலை பிரச்சினை என தடுமாறும் ஒரு சராசரி குடும்பத் தலைவன் கதாபாத்திரம். பணத்தை எடுத்தவர்களிடம் எப்படியாவது பணத்தை மீட்க வேண்டும் என அலையோ அலை என அலைகிறார். வித்தியசாமான கதாபாத்திரத்தில் முடிந்தவரை தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
முதல் பாதி வரை விஜய் சிவன், அவரது மனைவி சாந்தினி, அப்பா சுரேஷ் சக்கரவர்த்தி என கதை நகர்கிறது. இடைவேளைக்குப் பின் நமோ நாராயணன் அவரது கூட்டாளிகள் கதிரவன், ஆனஸ்ட்ராஜ் என கதையை கலகலப்பாக நகர்த்த முயற்சித்திருக்கிறார் இயக்குனர். இடைவேளைக்குப் பின் மொத்த படத்தையும் இந்தக் குழுதான் குத்தகைக்கு எடுத்துள்ளது. சில காட்சிகள் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகின்றன.
படத்திற்குண்டான வட்டத்திற்குள்ளேயே தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கு அமைந்துள்ளது.
ஒரே மாதிரியான கதைகளையே பார்த்த நமக்கு இப்படி புதுமாதிரியான கதைகள் கொஞ்சம் மாற்றத்தைத் தருகிறது. நட்சத்திர அந்தஸ்துடன் உள்ள சிலரை நடிக்க வைத்திருந்தால் இன்னும் அதிகமான கவனத்தை படம் ஈர்த்திருக்கும். 'குடிமகான்' எனப் பெயரை வைத்துவிட்டதால் குடியைப் பற்றிய பாதிப்புகளை கொஞ்சம் பதிவு செய்திருக்கலாம்.
குடிமகான் - குடி(கடி)க்காத மகன்…