2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ரசூல் பூக்குட்டி, அஜய் மாத்யூ
தயாரிப்பு - பால்ம்ஸ்டோன் மல்டிமீடியா
இயக்கம் - பிரசாத் பிரபாகர்
இசை - ராகுல் ராஜ்
வெளியான தேதி - 5 ஏப்ரல் 2019
நேரம் - 1 மணி நேரம் 42 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

சினிமாவுக்காக வழங்கப்படும் விருதுகளில் உலகின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது மற்றும் நம் நாட்டின் தேசிய விருது உட்பட பல விருதுகளை தன்னுடைய ஒலிப்பதிவுக்காக வாங்கியவர் ரசூல் பூக்குட்டி.

இந்தியாவில் நடைபெறும் இந்து மத திருவிழாக்களில் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாக இருக்கும் திருச்சூர் பூரம் விழாவை ஒலிப்பதிவு செய்து அதை மக்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஆசை கொண்ட ரசூல் அதை எப்படி பல தடைகளுக்குப் பிறகு செய்து முடித்தார் என்பதுதான் 'ஒரு கதை சொல்லட்டுமா' படத்தின் கதை.

ஒரு டாகுமென்டரியாகவும் இல்லாமல், திரைப்படமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது இந்தப் படம். பிரசாத் பிரபாகர் படத்தை இயக்கியிருக்கிறார்.

படத்திலும் ரசூல் பூக்குட்டியை அவரது நிஜ கதாபாத்திரமாகத்தான் காட்டுகிறார்கள். ஒரு ஆஸ்கர் விருது வென்றவரை இந்தியாவே கொண்டாடும் போது, சக மலையாளி தயாரிப்பாளர் ஒருவரே அவரை அழைத்து அந்த அளவிற்கு அவமானப்படுத்துவது கேள்வியை எழுப்புகிறது.

திருச்சூர் பூரம் விழாவை அவர் பல கோடிகள் கொடுத்து செலவு செய்து எடுக்கவில்லை. சிலபல லட்சங்கள் செலவு செய்துதான் எடுக்கிறார். அதற்காக அந்தத் தயாரிப்பாளருக்கு அவ்வளவு திமிர். கதையாக இருந்தாலும் நிஜ வாழ்க்கை கதாபாத்திரத்தை படத்தில் வைக்கும் போது விருது வென்ற ஒருவரை அமானப்படுத்தும் அளவிற்கான காட்சிகளை வைக்கலாமா ?.

ரசூல் பூக்குட்டி, அவராகவே நடித்துள்ளார். அவர் தினமும் செய்யும் வேலைகள்தான் படத்தில் வருவதால் அவர் நடித்தாலும் பரவாயில்லை, நடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்று ஆறுதல்படுத்திக் கொள்ளலாம். அவருக்கான டப்பிங்கில் மட்டும் லிப் சின்க் இல்லை. அவரை மலையாளம் பேச வைத்து எடுத்துவிட்டு, தமிழில் டப்பிங் செய்திருப்பார்கள் போலிருக்கிறது. முடிந்தவரையில் நடிப்பை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார் ரசூல் பூக்குட்டி.

திருச்சூர் பூரம் விழாவை படமாக்கும் தயாரிப்பாளராக அஜய் மாத்யூ. ஆஸ்கர் விருது வென்றவராக இருந்தாலும் அவர் தன் பணத்திமிருக்குக் கீழாகத்தான் இருக்க வேண்டும் என்ற வில்லத்தனத்தை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் ரசூலை அவமதிக்கும் போதெல்லாம் நமக்கு கோபம் வருகிறது.

திருச்சூர் பூரம் விழாவுக்காக வாசிக்கப்படும் அந்த மேள வாத்தியங்களின் முழக்கங்கள் படத்தின் மற்ற பின்னணி இசையையும் மிஞ்சி நிற்கின்றன. அதிலும் பாண்டி மேளத்தின் இசையே தனிச்சிறப்புடன் ஒலிக்கிறது.

ரசூல், அஜய் இரண்டு கதாபாத்திரங்கள்தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். அவமானத்தால் விழாவை ஒலிப்பதிவு செய்யாமலே திரும்பிப் போக நினைக்கும் ரசூல் மனதை பார்வையற்ற இசையமைப்பாளர் ஒருவர் மாற்றுகிறார். அவருடைய பார்வையற்ற அகாடமி பற்றிய காட்சிகள் கண்கலங்க வைக்கின்றன. அவர்களை வைத்தே படத்தின் கிளைமாக்சையும் முடித்திருப்பது நெகிழ்ச்சியோ நெகிழ்ச்சி. பார்வை தெரிந்தவர்கள் ரசிக்கும் ஒலியைவிட, பார்வையற்றவர்கள் ரசிக்கும் ஒலியின் ரசனை வேறு என்பது நமக்கு புதிய தகவல்.

ஒரு பெரிய விழாவை ஒலிப்பதிவு செய்ய எப்படியெல்லாம் தயார் ஆவார்கள், அதற்காக எப்படியெல்லாம் உழைக்க வேண்டும் என்பதை இன்னும் 'டீடெயில்' செய்து காட்டியிருந்தால் உணர்வுபூர்வமாக நம்மை இன்னும் இந்தக் கதை உருக வைத்திருக்கும்.

ஒரு கதை சொல்லட்டுமா - விரிவாக சொல்லியிருக்கலாம்.

 

பட குழுவினர்

ஒரு கதை சொல்லட்டுமா

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓