1.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - நகுல், ஆஞ்சல் முஞ்சால் மற்றும் பலர்
இயக்கம் - ராஜ் பாபு
இசை - நிக்ஸ் லோபஸ்
தயாரிப்பு - ட்ரிப்பி டர்ட்டில்
வெளியான தேதி - 23 நவம்பர் 2018
நேரம் - 2 மணி நேரம் 8 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5

தமிழ் சினிமாவில் ஒரே கதையை, அல்லது ஒரே ஹாலிவுட் படத்தை காப்பியடித்து இதற்கு முன் சில படங்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் இதற்கு முன் வந்த சில படங்களின் கதையைக் கொண்ட படமாக வந்திருக்கும் படம் தான் செய்.

அஜித் நடித்து வெளிவந்த என்னை அறிந்தால், சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த காக்கிச் சட்டை இரண்டு படங்களும் ஒரே கதையைக் கொண்ட படங்கள். அந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளிவந்த படங்கள். இரண்டு படங்களிலும் மனிதர்களின் உடல் உறுப்புக்கள் திருடப்படுவது தான் அந்தப் படங்களின் கதையாக இருந்தது. இரண்டு படங்களிலும் கதாநாயகன் போலீஸ் ஆக இருப்பது அந்தப் படங்களுக்குள் உள்ள மற்றொரு ஒற்றுமை.

அப்படங்களின் கதையான மனிதர்களின் உடல் உறுப்புக்கள் திருடப்படுவது தான் இந்த செய் படத்தின் கதை. ஆனால், கதாநாயகன் ஒரு சாதாரண குடிசைப்பகுதி இளைஞன். ஒருவேளை இந்தப் படமும் அந்தப் படங்கள் ஆரம்பித்த போது ஆரம்பிக்கப்பட்ட படமாகவும் இருக்கலாம்.

ஒரு ஆம்புலன்ஸ் டிரைவரின் மகன் நகுல். சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது இவருடைய ஆசை. அதற்கான தீவிர முயற்சியில் இருக்கிறார். ஒருநாள் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இவர் ஆம்புலன்ஸ் எடுத்து ஓட்ட வேண்டிய சூழல். அந்த சமயத்தில் இறந்து போன ஒருவரின் உடலை வேறு ஊருக்கு எடுத்துச் செல்கிறார். ஆனால், அந்த இறந்தவருடன் வருபவர்கள் அந்த உடலை மலைப் பகுதியில் அழிக்க நினைக்கிறார்கள். அது தெரிந்ததும் அந்த உடலுடன் தப்பிக்கிறார் நகுல். இறந்து போய் பிணமாக இருக்கும் நபர்தான் நகுலின் அப்பாவுக்கு மாரடைப்பு வரும் போது முதலுதவி செய்து காப்பாற்றியவர். அந்த நபர் எப்படி இறந்து போனார், அந்த உடலை ஏன் யாருக்கும் தெரியாமல் அழிக்க நினைக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் நகுல். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

பொதுவாக சாதாரணமாக நடிக்கச் சொன்னாலே நடித்துத் தள்ளுபவர் நகுல். இந்தப் படத்தில் சினிமாவில் நடிக்கத் துடிக்கும் கதாபாத்திரம் என்று சொன்னவுடனேயே நடிக்க ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது. நல்லவேளை இடைவேளைக்குப் பின் கதை சீரியசாக நகர்ந்ததும் அந்த நடிப்புப் பேராசையைக் குறைத்துவிட்டார் நகுல்.

படத்தின் நாயகியாக ஆஞ்சல் முஞ்சால். நாயகன் நகுலும், நாயகி ஆஞ்சலும் பார்த்துக் கொள்ளாமலேயே காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். கடைசி வரை இருவரும் பார்த்துக் கொள்ளவேயில்லை. ஒரே ஒரு முறை மட்டும் காதலியின் புகைப்படத்தைப் பார்க்கிறார் நகுல். போனிலேயே காதலை வளர்த்துக் கொள்கிறார்கள். நாயகியுடன் இருக்கும் நண்பர்களும், தோழியும் வித்தியாசமான தோற்றத்தில் நம்மை சோதிக்கிறார்கள்.

உடல் உறுப்புக்களை கடத்துபவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து உயிரை விடும் பத்திரிகையாளராக அஸ்கர் அலி, அவருடைய காதலியாக சந்திரிகா ரவி. கொஞ்சமாக வந்தாலும் கதையின் கனமான பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இயக்குனருக்கோ, தயாரிப்பாளருக்கோ பிரகாஷ்ராஜ், நாசர் இருவரும் நண்பர்களாக இருக்கலாம். குறைவான நேரமே வரும் கதாபாத்திரம் என்றாலும் நடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.

நிக்ஸ் லோபஸ் இசையில் பாடல்கள் பிரமாதமாக இல்லை. விஜய் உலகநாத் ஒளிப்பதிவில் காடுகளையும், மேடுகளையும் ரசிக்கும் விதத்தில் படமாக்கியிருக்கிறார்.

படத்தின் வில்லன் யார் என்பதில் மட்டும் ஒரு சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்கள். மற்றபடி திரைக்கதையில் பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லை. அதிலும் ஆம்புலன்சில் காட்டுக்குள் நகுல் தப்பிக்க ஆரம்பித்த பின் கதையை எப்படி முடிப்பது என தடுமாறியிருக்கிறார்கள். டக்கென படத்தை முடித்துவிடுகிறார்கள்.

நகுல் நடிக்கும் படங்கள் என்றால் காதல், காமெடி என போய்விடுவது நல்லது. ஆக்ஷன் படங்களைத் தாங்கும் அளவிற்கு அவர் இன்னும் தயாராகவில்லை என்பது உண்மை.

செய் - இன்னும் செய்திருக்க வேண்டும்.

 

செய் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

செய்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

நகுல்

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் ஐந்து ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் நடிகர் நகுல். நடிகை தேவயானியின் தம்பியான நகுல் ஜெய்தேவ், 1984ம் ஆண்டு, ஜூன் 15ம் தேதி மும்பையில் பிறந்தவர். 2008ம் ஆண்டு, காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை கொடுத்தது. தொடர்ந்து மாசிலாமணி, நான் ராஜாவாகப் போகிறேன். வல்லினம் போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து தமிழில் நல்ல இடத்தை பிடிக்க போராடி வருகிறார். நடிகராக மட்டுமல்லது, பின்னணி பாடகராகவும் சிலகாலம் இருந்துள்ளார் நகுல்.

மேலும் விமர்சனம் ↓