நடிகர்கள் : பிருத்விராஜ், நமீதா பிரமோத், இந்திரஜித், ஜெயசூர்யா
டைரக்சன் : நாதிர்ஷா
நடிகராக இருந்து இயக்குனராக மாறியுள்ள நாதிர்ஷா இயக்கியிருக்கும் படம்.
ஷாப்பிங் மால் ஒன்றில் குழந்தைகளின் பேட்டரி கார் ஓட்டும் ட்ரைவர் பிருத்விராஜ்(அமர்), பீட்சா டெலிவரி பாய் இந்திரஜித்(அந்தோணி), போலியோவால் இடதுகால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு கம்பெனியின் லிப்ட் ஆபரேட்டராக வேலைபார்க்கும் ஜெயசூர்யா(அக்பர்) மூவரும் ஒரே காலனியில் குடியிருக்கும் நண்பர்கள்.. தங்கள் ஏரியாவில் குடியிருக்கும் டான்சரான நமீதா பிரமோத்தை லவ் பண்ண முயற்சி செய்வது இவர்களின் உபரி வேலை. கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வைத்து தாய்லாந்தில் உள்ள பட்டாயா நகருக்கு சென்று உல்லாசமாக இருந்துவிட்டு வரவேண்டும் என்பது தான் இவர்களது வாழ்க்கை லட்சியம்.
ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தால் அது தட்டிப்போகிறது. இந்நிலையில் நகரில் ஆங்காங்கே பத்து வயதிற்குட்பட்ட சிறுமிகள் திடீரென மாயமகிறார்கள். ஒருகட்டத்தில் இந்த மூவரின் அன்புக்கு பாத்திரமான காலனியை சேர்ந்த சுட்டிப்பெண்ணும் ஒருநாள் இரவு காணாமல் போய், மறுநாள் பாலியல் பலாத்காரம் பண்ணப்பட்ட நிலையில் சாக்கடையில் பிணமாக மிதக்கிறாள்.. போலீஸ் விசாரணையில் குற்றவாளி யாரென தெரியவர பொதுமக்களே அதற்கு தீர்ப்பெழுதுவதுதான் க்ளைமாக்ஸ்.
சமூகத்தில் அவ்வப்போது தனது கோர முகத்தை காட்டிவரும் ஒரு சீரியசான விஷயத்தை, ஜாலியான கதையோட்டத்துடன் இணைத்து ஒரு ஜனரஞ்சகமான படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் நாதிர்ஷா..
நண்பர்களாக வரும் மூவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளும், ஒருவரை ஒருவர் காலைவாரி விட்டுக்கொள்வதும் என மொத்த நகைச்சுவையையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு விட்டார்கள் பிருத்விராஜ், இந்திரஜித், ஜெயசூர்யா மூவரும். சில நாட்களுக்கு முன் வெளியான 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தில் நாம் பார்த்த காதல் நாயகன் ப்ருத்விராஜா இவர் என சத்தியம் செய்தால் கூட நம்பமுடியாது. இதில் காமெடியில் இறங்கி அடித்திருக்கிறார் மனிதர்.
ஜெயசூர்யாவை ரவுடி ஒருவன் தாக்கிவிட்டான் என அறிந்ததும் அவனை பழிவாங்க ஆக்ரோஷத்துடன் மற்ற இருவரும் ஸ்லோமோஷனில் புறப்படுவதும், பின்னர் பைக் ஸ்டார்ட் ஆகாமல் நீண்டநேரம் போராடிவிட்டு, டயர்டா இருக்கு, நாளைக்கு போய் பழிவாங்கிக்கலாம் என ஒத்திவைப்பதும் செம லந்து. காதலியிடம் பைலட் என சொல்லிவிட்டு பேட்டரி கார் ஒட்டி காதலில் பல்பு வாங்கும் பிருத்விராஜை விட, பணக்கார காதலியின் அப்பாவை இம்ப்ரெஸ் செய்வதற்காக பாட்டுப்பாதுகிறேன் என கர்ணகடூரமாக பாடி காதலை கோட்டைவிடும் இந்திரஜித் இன்னும் அதிகம் சிரிக்க வைக்கிறார்.
போலியாவல் பாதிக்கப்பட்டவராக சிறிதுகூட நடிப்பில் பிறழாமல் யதார்த்தம் காட்டியுள்ள ஜெயசூர்யா, நம்மை பரிதாபமெல்லாம் படவேண்டாம் என சொல்லும் விதமாக காமெடி காட்சிகளில் தூள் கிளப்புகிறார். ஹோட்டலில் சாப்பிடும்போது நண்பன் திட்டிவிட்டான் என ரோஷத்தில் பாதியில் எழுந்து கைகழுவதும், அதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல், அவர் தட்டில் உள்ள மீனை எடுத்துக்கொள்ளவா என பிருத்விராஜ் கேட்டதும் டபக்கென மீண்டும் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிப்பதுமாக மூவருமே நான்ஸ்டாப் காமெடிக்கு உததரவாதம் தந்திருக்கிறார்கள்.
போதாக்குறைக்கு இவர்கள் கூடவே அவ்வப்போது சரக்கடிக்க கூட்டணி சேரும் சஜூ நவோதயா வேறு “'இப்படித்தான் ஊர்ல எங்க பெரியப்பா ஒருத்தரு..” என எப்போது பார்த்தாலும் சாவு விஷயங்களாக பேசி அப்ளாஸ் அள்ளுகிறார். ஒரிஜினல் டச் ஸ்கிரீன் போனில் அவரது பாட்டி பேஸ்புக் அப்டேட்டில் பிஸியாக இருப்பதும், பழைய நோக்கியா போனை டச் ஸ்க்ரீன் கவருக்குள் வைத்துக்கொண்டு பேரனான சஜூ பந்தா காட்டுவதும் பார்த்தவுடனே வயிற்றை பதம் பார்க்கும் காமெடி..
பிருத்விராஜின் அம்மாவாக வரும் கே.பி.ஏ.சி லலிதா, தனது மகன் விரும்பும் பெண்ணை அவருக்காக பெண் கேட்கலாம் என விசாரிக்கப்போக, அந்தப்பெண்ணின் அம்மா காட்டும் பந்தாவை பார்த்து, அட கல்யாணம் பண்றதுக்கு இல்லைங்க.. என் பையன் சும்மா ஜாலியா சுத்துறத்துக்கு செட்டாகுமான்னு தான் விசாரிச்சேன்.. கல்யாணம் பண்ணுவதற்கு வேற நல்ல இடத்துல பொண்ணு பார்ப்போம் என பிருத்விராஜ் காதலுக்கு வேட்டுவைப்பது காமெடி அட்ராசிட்டி.
காமெடி கதையில் நாயகிக்கு எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்குமோ அதுதான் நமீதா பிரமோத்துக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இலையில் வைக்கப்பட்ட ஸ்வீட்டாக தித்திக்கிறார் நமீதா. மூவரில் ஜெயசூர்யாவை காதலிப்பதாக சொல்லும்போது காதலில் ஆழம் தொடுகிறார். பிருத்விராஜின் அம்மா, மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்த காலணிப்பெண் சிருந்தா ஆசப், புருஷன் ஓடிப்போனதால் குழந்தையுடன் இங்கே வந்து டேரா போடுவது, அடிபட்டு மாருத்துவமனையில் சேர்க்கப்படும் பிருத்விராஜின் தந்தை, பதட்டத்துடன் தன்னை பார்க்க வரும் மகனிடம் இங்கே ரெண்டு மூணு அழகான நர்ஸ்கள் என்று சொல்வது என படம் முழுக்க இயக்குனர் நாதிர்ஷா, ரசிகர்களின் லெவலுக்கு இறங்கி அடித்திருக்கிறார்
இறுதியில் குழந்தைகள் மீது பிரயோகிக்கப்படும் பாலியல் பலாத்காரம் பற்றிய பகுதியில் சீரியஸ் மோடுக்கு செல்லும் படம், வட மாநிலத்தில் இருந்து நாம் ஊருக்கு வேலைபார்க்க வரும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதோடு, நம் அருகிலேயே பசுத்தோல் போர்த்திய புலியாக காமக்கொடூரர்களாக உலாவரும் ஆட்களையும் இனம் கண்டறிந்து குழந்தைகளை கவனத்துடன் பழகவிடவேண்டும் என்பதையும் சொல்லி குழந்தை வளர்ப்பில் கவனம் காட்ட சொல்கிறது. போலீஸ் அதிகாரியாக வரும் சித்திக் பாலியல் அரக்கன்களுக்கு மக்களே தண்டனை வழங்கும்படி விட்டுவிடுவது சினிமாத்தனம் என்றாலும், அதுதான் பொருத்தமான முடிவாக கைதட்டலை அள்ளி குவிக்கிறது...
ஓகோவென ஹிட் இல்லையென்றாலும் இரண்டரைமணிநேர பொழுது போக்கு அம்சம் நிறைந்த படமாக வெறி பெற்றிருக்கிறார்கள் இந்த அமர் அக்பர் அந்தோணி.