அசின் ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நடித்துள்ள படம் ''ஆல் இஸ் வெல்''. உமேஷ் சுக்லா இயக்கத்தில், அபிஷேக் பச்சன், ரிஷி கபூர் ஆகியோர் நடித்துள்ள இப்படம் ''வெல்''-ஆக இருந்ததா என்று பார்ப்போம்...
பேங்காக்கில் கதை ஆரம்பமாகிறது. இந்தர் பல்லா எனும் அபிஷேக் பச்சன் கிதாரில் பாட்டு பாடியபடி தனது இளமைக்காலத்து வாழ்க்கையை நினைத்து பார்க்கிறார். அவருக்கும், அவரது அப்பாவுமான பஜன்லால் பல்லா எனும் ரிஷிகபூருக்கும் அந்தளவுக்கு புரிதல் கிடையாது. அது இப்போதும் தொடர்கிறது. இப்படிப்பட்ட சூழலில் நிம்மி எனும் அசின், அபிஷேக் மீது காதல் கொள்கிறார். இந்தசூழலில் தனது அப்பா ரிஷி கபூரிடமிருந்து போன் வருகிறது. சீமா எனும் முகமது சீசன் அயூப் எனும் தாதாவிடம் வாங்கிய பணத்திற்காக, ரிஷி கபூரின் கடையை அபகரித்து கொள்கிறார் அந்த தாதா. இதைக்கேள்விப்பட்டு தன் அப்பாவை பார்க்க வரும் அபிஷேக், உரிய பணத்தை கொடுத்து தங்களுக்கு சொந்தமான கடையை மீட்டாரா.? அப்பா-மகனுக்குமான உறவு சரியானதா.?, அசினின் காதல் என்ன ஆனது...? உள்ளிட்ட கேள்விக்கு பதிலளிக்கிறது ஆல் இஸ் வெல் படத்தின் மீதிக்கதை.
அபிஷேக் பச்சன், ரிஷி கபூர் அவ்வளவு அருமையாக நடித்திருக்கிறார்கள். அசினும் சிறப்பாக நடித்திருக்கிறார் ஆனால் பெரிய அளவில் நடிப்பு ஒன்றும் இல்லை. அதேசமயம் முகமது சீசன் அயூப் வில்லானிக் ரோலில் வந்து அசத்துகிறார். சுப்ரியா பதக்கின் நடிப்பு சுத்த வேஸ்ட்.
ஓ மை காட் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு குடும்ப பாங்கான கதையை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் உமேஷ் சுக்லா. கூடவே சமூகம் சார்ந்த சில விஷயங்களையும் சொல்லியிருக்கிறார். ஆனால் ஓ மை காட் அளவுக்கு இந்தப்படம் ரசிகர்களை கவரவில்லை. சீரியஸான காட்சிகளில் எல்லாம் காமெடி காட்சிகளை வலிய திணித்து வேறுப்பேற்றுகிறார் இயக்குநர். இசையும், வசனமும் புதிதாக ஒன்றும் இல்லை. அரைத்த மாவையே அரைத்திருக்கிறார்கள். சோனாக்ஷி சின்ஹாவின் குத்தாட்டம் தேவைதானா...? என்று கேட்க தூண்டுகிறது. இதுபோன்ற மைனஸ்களால் ''ஆல் இஸ் வெல்'' படத்தை பார்த்தவர்களுக்கு வலியைத்தான் தருகிறது.
மொத்தத்தில், ''ஆல் இஸ் வெல் - நாட் வெல்!''
ரேட்டிங் - 2/5