டோலிவுட்டின் குறிப்பிடத்தக்க நடிகரான சுதீப் கிருஷ்ணா தற்போது தன்னை முன்னிறுத்தும் படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார். டைகர் படத்தில் நடித்துள்ள சுதீப் கிருஷ்ணா புலியாக எப்படி உறுமியிருக்கிறார் என்று பார்ப்போம்.
டைகர் படத்தில் டைகராக சுதீப், விஷ்ணுவாக ராகுல் ரவீந்திரன் நடித்துள்ள இருவரும், சிறு வயது முதலே மிக நெருங்கிய நண்பர்கள். டைகர் சற்றே முரட்டுத்தனமான கதாபாத்திரம். நட்பிற்காக எதையும் செய்ய துணிகின்ற பாத்திரம்.இடையில் விஷ்ணு நாயகி கங்காவின் மீது காதல் கொள்கின்றார். நாயகியான கங்கா காசியில் மிகவும் கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்தவள்.இவர்களின் காதல் விவகாரம், கங்காவின் குடும்பத்திற்கு தெரிய வருகிறது. இருவரையும் கொலை செய்ய முடிவெடுக்கிறார்கள்.
பிறகென்ன, டைகர் கதைக்குள் வருகிறது. தன் நண்பனை எப்படி காப்பாற்றுகிறது என்பது மீதிக்கதை. சுதீப்பை ஒரு முழு நீள ஆக்ஷன் ஹீரோவாக காட்டுவதில் இந்த டைகர் வெற்றி பெற்றிருக்கிறது. மொத்த படத்தையும் திடமாக தைரியமாக தாங்கி செல்கிறார் சுதீப்.அதுவும் சண்டை காட்சிகளில் அவரது உடற்மொழியும் மற்ற காட்சிகளில் அவரது வசன உச்சரிப்பும் அவரை ரசிக்க வைக்கிறது.இதற்கு நேர் எதிராக ராகுல் ரவீந்திரன் தனது உள்ளடக்கிய நடிப்பால் படத்தை சமன் செய்கிறார். இருவருக்கும் இடையிலான காட்சிகள் நன்றாக வந்திருக்கின்றன.
படத்தின் இன்னொரு மிகப்பெரிய பலம் இசையமைப்பாளர் தமன். பின்னணி இசை படத்தை வேறு ஒரு தளத்திற்கு கூட்டி செல்கிறது.படத்தின் குறைவான நீளமும் மிகப் பெரிய பலம். முதல் பாதியில் இளமை துள்ளளுடன் செல்லும் கதை பின் பாதியில் மிகவும் உணர்வு பூர்வமாக செல்கிறது.
எடுத்து கொண்ட கதைக்கு தேவையானவற்றை மட்டுமே கொடுத்திருப்பதால் இயக்குநரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். சுதீபிற்கென தனியாக காதல் காட்சிகள் ஏதும் இல்லை அப்படி இருந்திருந்தால் அது வெறுமனே கட்டாயமாக சேர்த்ததாக இருந்திருக்கும்.
இனி படத்தின் மிக மெல்லிய பலவீனங்களை பார்ப்போம், படத்தின் சில இடங்களில் லாஜிக் இல்லாமல் இருக்கிறது. பழகிய கதையில் ,வில்லன்களையாவது மாற்றி இருக்கலாம், அதுவும் பழக்கப்பட்ட முகங்களாக இருக்கிறது. தொழில் நுட்ப ரீதியில் பார்த்தால், முன்னர் சொல்லியது போல் தமன் இசையாதிக்கம் செலுத்தியிருக்கிறார்.திரைக்கதையும் அதற்கு ஏற்றார் போல் இடம் பெறும் வசனங்களும் படத்திற்கு நன்றாகவே பொருந்துகின்றன.
சுதீப்பை திறமையாக கையாண்ட விதத்தில் இயக்குநர் ஆன்ந்த் பாராட்டு பெறுகின்றார். ஆக்ஷன் ஹீரோவாக அளவாக காட்டியதில் படம் வெற்றி பெறுகின்றது. மொத்தமாக , சுதீப்பிற்கு இது முக்கியமான படம், அழுத்தமான ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்திருக்கிறார். கதை சொல்லலில் உள்ள நேர்த்தி பழகிய கதையானாலும் ஒரு வித ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.
டைகர் - நட்பின் பாய்ச்சல்