Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

தலைமுறைகள்

தலைமுறைகள்,Thalaimuraigal
 • தலைமுறைகள்
 • நடிகர்: பாலுமகேந்திரா, சசிகுமார்
 • நடிகை:ரம்யா, வினோதினி
 • இயக்குனர்: பாலுமகேந்திரா
26 டிச, 2013 - 15:40 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தலைமுறைகள்

தினமலர் விமர்சனம்


பெரும் ஒளிப்பதிவாளர், எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் இயக்குநர்... என பண்முகங்கொண்ட பாலுமகேந்திரா, முதன்முதலாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் "தலைமுறைகள்! அவரே, இயக்குநர் எம்.சசிகுமாருடன் இணைந்து தயாரித்திருப்பதுடன் வழக்கம்போல ஒளிப்பதிவும் செய்து இயக்கியும் இருக்கும் இப்படத்தில் விசேஷம்... விழா வேத்திகளில் மட்டுமின்றி வீட்டிற்குள்ளேயும் கூட இதுநாள் வரை தொப்பியுடன் வாழ்ந்து, திரிந்த பாலுமகேந்திரா, தன் தொப்பியை தரமான தமிழ் சினிமாக்களின் தலைக்கு மணிமகுடமாக சூடிவிடும் முகமாக வெறும் தலையுடன் நடித்து "தலைமுறைகள் படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவுக்கு ராஜமரியாதை சேர்த்திருக்கிறார் என்றால் மிகையல்ல!

கதைப்படி காவேரிக்கரை கிராமத்தை சேர்ந்த வயதான ஓய்வுபெற்ற தமிழ் வாத்தியர் பாலுமகேந்திராவின், வாரிசு எஸ்.சஷிக்குமார், சென்னையில் பெரிய டாக்டர். அப்பாவின் பேச்சை மீறி உடன் பணி செய்யும் பெண் டாக்டர் ரம்யா சங்கரை மணம் முடித்து ஊருக்கு வருகிறார். கோவாவை சேர்ந்த கிறிஸ்துவ பெண்ணான ரம்யாவுக்கு தமிழும் தெரியாது, தன் ஜாதி பாரம்பரியமும் புரியாது... எனும் காரணத்தால் மகனையும், மருமகளையும், தான் செத்தாலும் வரக்கூடாது என அடிக்காத குறையாக விரட்டுகிறார் பாலுமகேந்திரா. மகள், அதேஊரில் வசிக்கும் பாலுவின் இன்னொரு தாரம், அவரது மகள்... எல்லோரும் இருந்தும் யாரும் இல்லாத குறையுடன் வாழ்கிறார்.

ஒருகட்டத்தில் பக்கவாதம் வந்து இரண்டு மாதகாலம் கஷ்டப்பட்டு மீளும் பாலுமகேந்திராவை பார்க்க, விஷயம் கேள்விப்பட்டு 12 ஆண்டுகள் கழித்து வருகிறார் மகன் எஸ்.சஷிக்குமார். இரண்டு நாட்களில் மருமகளும், தமிழே தெரியாத பேரனும் வந்து சேர, தன் வயோதிகத்தாலும், வாழ்க்கை தந்த பாடத்தாலும், பேரன் மீதான பாசத்தாலும் பாலுமகேந்திராவின் கோபம் படிப்படியாக குறைகிறது. அதன்பின் சென்னைக்கு மகன் திரும்ப, மருமகளும், பேரனும் அந்தஊர் மருத்துவ தேவையை மனதில் கொண்டு பாலுமகேந்திராவுடன் தங்கி விட, பிரசவத்திற்கு வந்திருக்கும் மூத்ததாரத்து மகள், இரண்டாம் தாரத்து மகளின் அன்பு, மருமகளின் நன்னடத்தை, பேரனுக்கு இவர் கற்றுத்தந்த தமிழ், பேரனிடம் இவர் கற்கும் ஆங்கிலம் என கூட்டுக் குடும்பத்தின் அத்தியாவசத்தையும் அழகாக உணர்த்தி மன நிறைவுடன் மரணத்தை தழுவுகிறார் பாலுமகேந்திரா! பேரனும் தாத்தா கற்றுத்தந்த தமிழுடன் தாத்தாவையும் மறக்காமல், தமிழையும் மறக்காமல் பெரும் எழுத்தாளனாக எம்.சசிக்குமாராக உருமாறி "தாத்தாவும் நானும் எனும் நாவல் எழுதி பெரும் விருது பெற இனிதே நிறைவடைகிறது தலைமுறைகள்!

பாலுமகேந்திரா, தாத்தா பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். யதார்த்தத்தை மீறாமல் அந்த தாத்தாவாகவே அவர் வாழும் வாழ்க்கை... ஆஹா, நமக்கு இப்படி ஒரு தாத்தா இல்லையே என எல்லாதரப்பு ரசிகர்களையும் ஏங்க வைக்கும்! அதுவும் பேரனுக்கு விஜயதசமி நாளில், நெல்லில் கோயிலில் வைத்து, "அ எழுத கற்றுக் கொடுத்துவிட்டு அவர் படும் ஆனந்தமாகட்டும், தமிழ்வாத்தியார் பேரனுக்கு தமிழ் தெரியவில்லை என அவர் தலையில் அடித்து கொள்ளும் இடமாகட்டும், ஆரம்பகாட்சிகளில் ஜாதிபிரியத்துடன் அவர் நடந்து கொள்ளும் முறையாகட்டும், மகன் மீது காட்டும் கோபத்தில் ஆகட்டும், மகள்கள், மருமகள் மீது காட்டும் அன்பிலாகட்டும், பேரம் மீது காட்டும் பாசத்திலாகட்டும், அனைத்திலும் ரசிகனை சீட்டோடு சேர்த்து கட்டி போடும் வகையில் ஜமாய்த்திருக்கிறார் சபாஷ்!

மகன், எஸ்.சஷிக்குமார், பேரன், மாஸ்டர் கார்த்திக், ரம்யா சங்கர், "எங்கேயும் எப்போதும் வினோதினி, சக்தி, நண்பர் ரயில் ரவி, தில்லை பெருமாள், ஆர்யான், கெஸ்ட்ரோலில் வரும் இயக்குநர் எம்.சசிக்குமார் எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் அந்த பேரன் ஆதியாக வரும் கார்த்தி சூப்பர்ப்!

தாத்தாவிடம் "அ எழுத கற்றதும் தனது சிறுநீரை பீய்ச்சி அடித்து "அ போடும் அவரது குறும்பை பார்த்து பாலுமகேந்திரா முயற்சிப்பதும், அதைப்பார்த்துவிட்டு சிறுவன் "ஷேக்கிங் "அ என கிண்டல் அடிப்பது எல்லாம் பாலுமகேந்திரா டச்! அந்த காட்சியில் இன்னும் கொஞ்சம் புதுமை புகுத்த பாலுமகேந்திரா முயன்றிருந்தார் என்றால், பேரனிடம் ஆங்கிலம் கற்கும் அவர் பேரனுக்கு போட்டியாக "ஏ வை சிறுநீரில் முயற்சித்து தமிழை காப்பாற்றி இருக்கலாம்! மற்றபடி இசைஞானி இளையராஜாவின் இசையும், பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவும், இயக்கமும் பின்னிப் பிணைந்து உலகப்படங்களுக்கு நிகரான ஒரு படத்தை "தலைமுறைகளாக தந்துள்ளது என்றால் மிகையல்ல!

பாலுமகேந்திராவின், "தலைமுறைகள் - ஏழேழு தலைமுறைகள் தாண்டியும் பேசப்படும்!


-------------------------------------------------------------------

கல்கி விமர்சனம்"வீடு, "சந்தியா ராகம் ஆகிய படங்களில் மூலம் தமிழர் ரசனையை உயர்த்திய பாலுமகேந்திராவின் அடுத்த கைவண்ணம் "தலைமுறைகள். ஆங்கில மோகத்தை வளர்க்கும் தனியார்ப் பள்ளிகள், தமிழைப் புறக்கணித்து, குழந்தைகள் ஆங்கிலத்தல்தான் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பள்ளிகள் "தலைமுறைகள் படத்தைப் பார்த்துவிட்டு இனிமேல் தமிழுக்கு முக்கியத்துவம் தருவார்கள் என்று நம்புவோம்.

தாத்தாவுக்கும், பேரனுக்கும் இருக்கும் பரிபூரணமான அன்மை துளித்துளியாக எடுத்துச் சொல்லி நம்மை அசத்துகிறது "தலைமுறைகள். ஜாதிப் பற்றுகொண்ட பிடிவாத மனிதர் சுப்புப் பிள்ளையாக பாலுமகேந்திரா. அவரது மகன் சீனிவாசன் (சசிகுமார்), ஸ்டெல்லா என்ற கிறிஸ்துவப் பெண்ணைக் காதலித்து அழைத்துவர, கோபம் கொண்ட சுப்பு இருவரையும் திட்டி வெளியே அனுப்புகிறார். வருடங்கள் 12 ஓடுகிறது. சீனிவாசனும், ஸ்டெல்லாவும் சென்னையில் பிரபல மருத்துவர்கள். அப்போது கிராமத்தில் இருக்கும் நண்பன் மூலமாக அப்பாவின் உடல்நிலையைச் சொல்லும் போன் அழைப்பு சீனிவாசனுக்கு வருகிறது.

மகனை மீண்டும் திட்டி அனுப்புகிறார். சீனிவாசனின் தங்கை, அப்பாவைத் திட்டிவிட்டு அண்ணனை வீட்டுக்குள் அழைக்கிறார். உடல்நிலை இல்லாத அப்பாவை, மகன் கவனித்து தந்தையின் மனதில் இடம் பிடிக்கிறார். தன் மனைவியையும், மகன் ஆதித்தியாவையும் கிராமத்துக்கு அழைத்து வருகிறார். அந்தப் பேரக் குழந்தை ஆதித்யா, சுப்புவின் வீட்டுக்குள் நுழைந்ததும் கதையில் அவ்வளவு சுவாரசியம்.

தாத்தாவைப் பேரன் ஆங்கிலத்தில் விளாசுவதும் குட்டிக் குழந்தையின் ஆங்கிலம் கேட்டு தாத்தா வியப்பதும் ஒருபக்கம் நடக்க, கூடவே தன் பேரன் தமிழை மறந்து இப்படி ஆங்கிலம் பேசும் குழந்தையாக வளர்ந்துவிட்டானே என்று வருந்துவதும் படத்துக்கு அழுத்தம் சேர்க்கிறது.

இந்நிலையில் கிராமத்திலேயே ஒரு சின்ன மருத்துவமனைக்கான தேவை எழ, மருமகளான ஸ்டெல்லா தானே மருத்துவமனையைக் கட்டி சேவை செய்ய முன்வருகிறாள்.
பேரக்குழந்தையின் படிப்பு என்னாகும், நீ சென்னைக்கே போய்விடு என்று சுப்பு சொன்னாலும் கூட, இது உங்க மண்ணு, பேரன் உங்க நிழல்ல தான் வளரணும் என்று பிடிவாதமாக அவள் கிராமத்திலேயே தங்கிவிடுகிறாள். தன்னுடன் பேரனை வைத்துக் கொண்டு, அவனுக்குத் தமிழ் கற்றுத் தந்து, தமிழ்க் கலாசாரத்தைக் கற்றுத்தந்து, ஒரு மழைக்காலத்தில் பேரனும், தாத்தாவும் துள்ளி விளையாடும்போது, சுப்பு பிள்ளை உயிரை விடுகிறார்.

ஒளிப்பதிவு, இயக்கம், எடிட்டிங் என்று வளைய வந்த பாலுமகேந்திராவிடம் இவ்வளவு அழகான நடிப்பா? பேரன் ஆதித்யா பாத்திரம் மனத்தில்நிற்கிறது. பல இடங்களில் ஜாதி மதத்துக்கு சவுக்கடியும் ஆங்கில மோகத்துக்கு அதிர்வேட்டும் குடும்ப உறவுகள் சிதறிப் போவதைச் சாடியும் கர்ஜித்துள்ளது பாலுமகேந்திராவின் பேனா. படத்தின் இன்னொரு நாயகன் இளையராஜாவேதான். பாடல்களே இல்லாமல் பின்னணி இசை மூலம் படத்துக்கு பலமான உயிரோட்டம் தந்துள்ளார்.

உறவுகளின் அழுத்தத்தை ஃப்ரேம்களின் மௌனம் உரத்துப் பேசுகிறது. எளிய கதையின் மூலம் ரசிகர்களைக் கட்டிப்போட முடியும் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் பாலுமகேந்திரா.

தலைமுறைகள் - குறிஞ்சிப் பூ!வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

தலைமுறைகள் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in