தினமலர் விமர்சனம்
இளம் விமான பைலட்டுகள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் வித்தியாசமான படம், வீறிட்டு அலறவைக்க முயன்றிருக்கும் விவகாரமான பேய் படம்! இப்படி ர படம் பற்றி ர, ரா என அடுக்கி கொண்டே போகலாம்!
காதலித்து கரம்பிடித்த மனைவியை முதல் இரவு முடிவதற்குள்ளாகவே பறிகொடுக்கும் ஹீரோ, அவரது ஆவி எனும் ஆன்மாவைத்தேடி புறப்படுகிறார். அதனால் அவர் எதிர்கொள்ளும் ஆபத்துகளும், அழிவுகளும் தான் ர படத்தின் கரு, கதை, களம் எல்லாம்!
நாயகர் ஜெய்யாக அறிமுகம் அஷ்ரப், அவரது நண்பரும், பத்திரிகையாளருமான பிரபுவாக லாரன்ஸ் ராமு, நாயகி ரென்யாவாக அதிதீ செங்கப்பா, நாயகரின் அம்மாவாக ஜிட்டா பிரபு, அக்கா-ஆர்த்தி போக ரித்திகா, பேபி யுவினா, போலீஸ் தீனதயாளன், ஆவி விஞ்ஞானி ரவி பிரகாசம், நாயகரின் அக்கா வீட்டுக்காரரும், வில்லனுமான ராஜ்-ஜெயந்த் உள்ளிட்டோர் பாத்திரமறிந்து பயந்திருக்கின்றனர், பயமுறுத்தி இருக்கின்றனர்.
ஆர்.சரவணனின் ஒளிப்பதிவும், ராஜ் ஆர்யனின் இசையும் மிரட்டுகிறது. பிரபு யுவராஜின் இயக்கத்தில், ரெட்டோர், உலக அழிவு, இன்சிடியஸ், இன்ஷப்சன் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களின் உல்டாக்களை உதறிவிட்டு பார்த்தால் ர, ர, ரா... என பயமுறுத்துமா.? என்பது சந்தேகம்!
மொத்தத்தில், ஹாலிவுட் பேய் படங்கள் பார்த்திராதவர்கள் ரவை ரசிக்கலாம்! பார்க்கலாம்!! பயமாகலாம்!!!