தேசிய விருதுகளை பெற்றவர் நடிகை கங்கனா ரணவத். சுதந்திர போராட்ட வீராங்கனை ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றை மணிகர்னிகா என்ற பெயரில் படமாக தயாரித்து நடித்தார். அந்த படத்தை முதலில் தெலுங்கு இயக்குனர் கிரிஷ் இயக்கினார். படம் 70 சதவிகிதம் முடிந்திருந்த நிலையில் கங்கனாவுக்கும், கிரிஷூக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கிரிஷ் படத்தில் இருந்து விலகினார். மீதி படத்தை கங்கனாவே இயக்கினார். படத்தின் புரமோசன்களிலும் இயக்கம் என்று தனது பெயரையே போட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் மீண்டும் படம் இயக்குகிறார். முன்னாள் பிரதமர் இந்திராவீன் வாழ்க்கை வரலாற்று படத்தில் தான் நடிக்கப் போவதாக அறிவித்திருந்த கங்கனா, தற்போது படத்திற்கு எமெர்ஜென்சி என்று டைட்டில் வைத்திருப்பதாகவும், தானே இயக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். இந்திரா எமெர்ஜன்சியை கொண்டு வந்தபோது நடந்த அரசியல் நிகழ்வுகளை மையமாக கொண்டு இந்த படம் தயாராகிறது.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மீண்டும் இயக்குநர் பொறுப்பை ஏற்பதில் மகிழ்ச்சி. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக எமர்ஜென்ஸி திரைக்கதையில் பணியாற்றிய பிறகு, என்னைவிட அதை வேறு யாரும் இயக்க முடியாது என்பதை நான் புரிந்துகொண்டேன். இதற்காகச் சில நடிக்கும் வாய்ப்புகளை நான் தியாகம் செய்ய வேண்டியிருக்கும் என்றாலும், இதைச் செய்ய நான் தீர்மானமாக இருக்கிறேன். உற்சாகம் அதிகமாக இருக்கிறது. இது ஒரு அட்டகாசமான பயணமாக, எனது அடுத்தகட்டப் பாய்ச்சலாக இருக்கும். என்கிறார் கங்கனா.