தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஒரியா, சமஸ்கிருதம், துலு, படுகா என ஏரக்குறைய அனைத்து இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர் முன்னணி பின்னணி பாடகி பி.சுசீலா. தனது இனிமையான குரலால் அனைவரின் மனதையும் கவர்ந்த சுசீலா, 5 தேசிய விருதுகளையும், ஏராளமான மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது தாய்மொழி தெலுங்கு என்றாலும், தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் பேச தெரிந்தவர். சிறு வயது முதலே முறைப்படி கர்நாடக இசை பயின்ற இவர், 1950ம் ஆண்டு ஆல் இந்தியா ரேடியோவில் சில நிகழ்ச்சிகளுக்கு பாடி வந்தார். அப்போது இசையமைப்பாளர் பென்டியாலா நாகேஸ்வர ராவ் புதிய குரல் தேடிக் கொண்டிருந்தார். இதற்காக ஆல் இந்தியா ரேடியோவின் உதவியை நாடிய அவர், பல கட்ட தேர்வுகளுக்கு பின் சுசீலாவை தேர்வு செய்தார். அதன் பின்னர் 1952ம் ஆண்டு பெற்ற தாய் என்ற படத்தில் ஏன் அழைத்தாய் என்ற பாடல் மூலம் திரையுலகில் தனது இசைப் பயணத்தை தொடங்கினார் சுசீலா. 1955 முதல் தமிழ் திரையுலகின் முன்னணி பாடகியாக திகழ்ந்தவர் சுசீலா. 1990ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் புதியமுகம் படத்தில் கண்ணுக்கு மை அழகு பாடலுக்கு பின், சினிமாவில் பாடுவதை நிறுத்திய சுசீலா, பல பக்தி பாடல்களையும் பாடி உள்ளார். இசைநிகழ்ச்சி பலவற்றில் பாடி வருகிறார். 2008ம் ஆண்டு இவர் பெயரில் டிரஸ்ட் ஒன்று துவங்கப்பட்டு, நலிவடைந்த இசை கலைஞர்கள் பலருக்கும் மாதாந்திர பென்ஷன் வழங்கப்பட்டு வருவதுடன், ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளான நவம்பர் 13ம் தேதி இசைநிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் மூத்த இசை கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், பி.சுசீலா டிரஸ்ட் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.