இரண்டே நாட்களில் 30 கோடி வசூலித்த 'பாகுபலி த எபிக்' | அடுத்த ஆண்டு ஜூனில் தனுஷ் - மாரி செல்வராஜ் இணையும் பிரமாண்ட படம்! | ஷாருக்கானின் 60வது பிறந்தநாளில் வெளியான கிங் படத்தின் டீசர்! | நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! |

முதல் படத்திலேயே அழுத்தமான கேரக்டர். ஆனாலும் அந்த கேரக்டராகவே மாறி அனைவரது பாராட்டுதல்களையும் பெற்ற சந்தோஷத்தில் சுருதி குறையாமல் பேசினார் சுருதி பெரியசாமி. ஊட்டச்சத்து நிபுணர், மாடலிங், தொகுப்பாளினியாக இருந்து 'நந்தன்' படத்தின் மூலம் நாயகியாக உயர்ந்திருக்கிறார்.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் பேசியதிலிருந்து...
மாம்பழத்துக்கு பெயர் பெற்ற சேலம் தான் எனது ஊருங்க. அப்பா பெரியசாமி அரசு ஊழியர். அம்மா டெய்லர். சினிமாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லைங்க. சேலத்தில் பள்ளி படிப்பை முடித்த கையுடன் பி.டெக் படிப்பதற்காக சென்னைக்கு போனேன். படிப்பை முடித்த கையுடன் நெஸ்லே நிறுவனத்தில் ஊட்டச்சத்து நிபுணராக பணியிலும் சேர்ந்து விட்டேன். கொஞ்சம் உயரமாகவும், ஸ்டைலாகவும் நான் இருப்பதாக கூறிய தோழிகள் ஏன் மாடலிங் செய்ய கூடாது என உசுப்பேத்தி விட்டனர்.
ஐந்தாண்டுகளுக்கு முன் தோழிக்காக அவருடன் இணைந்து மாடலிங் செய்தேன். அதிர்ஷ்டவசமாக அந்த மாடலிங் போட்டியில் வெற்றி பெற்றோம். அதையடுத்து சில நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் என்னை பார்த்து விட்டு பல வாய்ப்புகள் வந்ததால் பணியிலிருந்து விலகி விட்டேன். தொழில், வர்த்தக நிறுவனங்களுக்காக மாடலிங் செய்தேன். தனியார் டிவியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் வாய்ப்பு கிட்டியது. இதன் மூலம் பிரபலமானேன்.
என் விளம்பர படமொன்றை பார்த்து இயக்குனர் சரவணன், 'நந்தன்' படத்தில் நாயகியாக நடிக்கிறீர்களா என்றார். சிறுவனுக்கு தாயாக தைரியமான கேரக்டராக இருக்கும் என்றார். முதல் படத்திலேயே 'அம்மா கேரக்டரா' என தயக்கம் இருந்தது. இயக்குனர் கொடுத்த தைரியத்தால் தயக்கத்துடன் ஒப்புக் கொண்டேன். ஆனால் படம் பெரிய பிரேக் கொடுத்தது.
'உங்களுக்கு இது முதல் படமாக தெரியாத அளவிற்கு செல்வி என்ற கேரக்டராகவே மாறியிருந்தீர்கள்' என்று சிலர் என்னை பாராட்டினர். லக்கி பொண்ணு நான் என கருத வைத்தது. பள்ளி, கல்லுாரி காலங்களில் கூடைபந்தாட்டங்களில் பங்கேற்றிருக்கிறேன். இதனால் சண்டை காட்சிகளில் நடிக்க ஆசை இருக்கிறது. முழு நீள காமெடி படம் செய்ய வேண்டும் என்ற விருப்பமும் உள்ளது.
நந்தன் படத்துக்காக ஒரு கிராமத்திற்கு சென்று அங்கு பெண்கள் எப்படி சேலை கட்டுகிறார்கள், குழந்தைகளுடன் பேசுகிறார்கள். ஆடு, மாடு மேய்க்கிறார்கள் என ஒரு வாரம் தங்கி தெரிந்து கொண்டேன். இதனால் நந்தனில் அந்த கேரக்டராகவே மாற முடிந்தது.
இன்றும் கூட கிராமங்களில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்களுக்கு அங்கீகாரம் முழுமையாக கிடைக்கவில்லை. அந்த நிலை விரைவில் மாறும் என நம்பிக்கை இருக்குங்க என்றவாறு விடைபெற்றார் சுருதி.