தினமலர் விமர்சனம் » சாட்டை
தினமலர் விமர்சனம்
பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கே பாடமாக வெளிவந்திருக்கும் படம்தான் "சாட்டை". ஆசிரியர் பணி புனிதமானது, அதில் அலட்சியர்கள் இருக்க கூடாது, என்பதை பக்குவமாக போதித்திருப்பதற்காகவே பாராட்டலாம்!
கதைப்படி, அன்பும், பண்பும் நிறைந்த கண்டிப்பான ஆசிரியர் சமுத்திரகனி. மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கிய தேர்ச்சி தரும் அந்த ஊர் பள்ளிக்கூடத்திற்கு இயற்பியல் ஆசிரியராக அடியெடுத்து வைத்ததுமே, திருத்த வேண்டியது அந்தப்பள்ளி மாணவர்களை அல்ல, ஒழுக்க கேடான ஆசிரியர்களை... என்பதை உணர்ந்து அதிரடியில் இறங்குகிறார். அவரால் பெரிதும் பாதிக்கப்படுவது அந்தப்பள்ளியிலேயே பல வருடங்களாக டிரான்ஸ்பர் இல்லாமல் பழம் திண்ணு கொட்டை போட்டு வரும் உதவி தலைமை ஆசிரியர் தம்பி ராமைய்யா தான். தம்பி ராமைய்யாவும் அவரது சகாக்களும், சமுத்திரகனிக்கு எதிராக போடும் சதிராட்டங்களையும், சதி ஆட்டங்களையும் சமுத்திரகனி, தலைமை ஆசிரியர் ஜூனியர் பாலையா மற்றும் யுவன், மகிமா, பாண்டி உள்ளிட்ட மாணவ, மாணவிகளின் உதவியோடு தவிடு பொடியாக்கி, பள்ளியின் தரத்தை உயர்த்துவதும், தேர்ச்சியிலும் மற்ற பயிற்சிகளிலும் மாவட்டத்திலேயே முதன்மையான பள்ளியாக அந்த அரசு பள்ளியை மாற்றுவதும் தான் "சாட்டை" படம் மொத்தமும்!
சமுத்திரகனி சமுதாய அக்கறை நிரம்பிய கண்டிப்பான ஆசிரியராக அதேசமயம் கடைசி பெஞ்ச் மாணவர்கள் வரை கனிவு நிரம்பிய ஆசிரியராக கச்சிதமான பாத்திரத்தில் பொருந்தி நடித்திருக்கிறார். கடைநிலை மாணவர்களையும் கூட அவர்கள் வழியில் போய் முதல்நிலை மாணவனாக மாற்றும் இடங்களில் சபாஷ் போட வைக்கும் சமுத்திரகனி, அலட்சியர்களாகிப்போன ஆசிரியர்களுக்கு பாடம் புகட்டும் காட்சிகளிலும் பலே சொல்ல வைக்கிறார். அதேநேரம், அடிக்கடி புதிய விஷயங்களை திணித்து போதனையிலேயே பொழுதை கழிப்பதும் போரடிக்கிறது. மாணவி ஒருவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு யாரோ ஒருவர் செய்த பாவத்திற்கு தான் பழி ஏற்று அடி உதைபட்டு காவல் நிலையம் செல்வதும் சமுத்திரகனி மீது பச்சாதாபத்தை ஏற்படுத்துவதோடு, நமக்கு இப்படி ஒரு நல்லாசிரியர் வாய்க்கவில்லையே என ஏங்க வைக்கிறது.
சமுத்திரகனி மாதிரியே ரகளையான மாணவனாக வரும் யுவனும் "நச்" என்று நடித்து பல இடங்களில் "உச்" கொட்டவும் சில இடங்களில் "இச் இச்" கொடுக்கவும் வைத்திருக்கிறார். வீட்டில் படி, படி என அப்பா படுத்தும் பாட்டிற்கு பதிலடியாக பள்ளியில் வெடி, வெடி என வெடிக்கும் பாத்திரத்தில் "பச்சக்" கென்று ஒட்டிக்கொள்ளும் படி நடித்திருக்கும் யுவன், மகிமாவுடனான இன்பாட்சுவேஷன் காதல் காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார். மகிமாவை ஒருதலையாக காதலிக்கும் யுவன், ஒருகட்டத்தில் மகிமா காதலிக்க ஆரம்பித்ததும் ஒதுங்கி கொள்வதும் அதற்கு அவர் தரும் பொறுப்பான பொருள் விளக்கமும் யுவன் மீது இன்னமும் மரியாதையை ஏற்படுத்திவிடுகிறது.
யுவன் மாதிரியே மகிமாவும் நடிப்பில் பியித்து பெடலெடுத்துவிடுகிறார். தாவரவியல் ஆசிரியர் அவரிடம் தரங்கெட்டதனமாக நடக்க முயலும் காட்சியில், அவரிடமிருந்து விடுபட்டு வெளியேற நினைக்கும், துடிக்கும் சீன்களில் அவர் காட்டும் பரபரப்பும், விறுவிறுப்பும் போதும் மகிமாவின் நடிப்பாற்றலை பறைசாற்றுவதற்கு. மிகப்பெரிய நடிகைகளே தடுமாறும் அதுமாதிரி காட்சிகளில் மகிமா பிரமாதப்படுத்தி இருக்கிறார் பேஷ், பேஷ்!
சுவாசிகா, ஜூனியர் பாலையா, குண்டு பாண்டி, தம்பி ராமைய்யா, பாவா லட்சுமணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் படத்தின் பெரும்பலம்! அதில் தம்பி ராமைய்யாவும், பாவாலட்சுமணனும் சில இடங்களில் பெரிய பலவீனமும் கூட.
இமானின் பின்னணி இசை, ஜீவனின் யதார்த்தமான ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்டுகளுடன் எம்.அன்பழகனின் இயக்கத்தில் "சாட்டை" ஒருசில குறைகள் இருந்தாலும் அரசுப்பள்ளிகளின் அவல நிலையையும், அதன் ஆசிரியர்களின் அலட்சியபோக்கையும் சொன்ன விதத்தில் "நல் வேட்டை!" பிடித்திருக்கிறது "கோட்டை!!" செய்திடும் "வசூல் வேட்டை!!!"
மொத்தத்தில் "சாட்டை" - "வேட்டை!!"-----------------------------------------------------
குமுதம் விமர்சனம்
படத்தின் இயக்குநரை சாட்டையால் அடிக்க வேண்டும் போலிருக்கிறது. இரண்டு குத்துப்பாட்டு, மூன்று சண்டைக்காட்சி, நான்கு இரட்டை அர்த்த வசனம் என்று தமிழ் சினிமாவின் பார்முலா எதுவும் இல்லாமல், சமூக பிரக்ஞையோடு துணிச்சாலாக ஒரு படம் தந்திருப்பதற்காக ரோஜா மலர்களை நிரப்பி,தங்க நூலினால் கட்டப்பட்ட ஒரு சாட்டையை செய்து செல்லமாய் இயக்குநர் அன்பழகனை அடிக்க வேண்டும் போலிருக்கிறது.
பள்ளி மாணவர்களை பற்றி பலரும் படமெடுத்திருக்கும் நிலையில் பள்ளி ஆசிரியர்களை பற்றி, அதுவும் அரசாங்க பள்ளியின் ஆசிரியர்களை பற்றி சொல்கிறது படம்.
வாத்தியாருக்கெல்லாம் வட்டிக்கு கடன் கொடுத்து, அராஜகம் பண்ணிக்கொண்டிருக்கும் ஏ.ஹெச்.எம். தம்பிராமய்ணாவை எதிர்த்து புதிதாக பள்ளிககு வரும் ஆசிரியர் சமுத்திரக்கனி போராடி, மாணவர்களின் தோழனாக வாதாடி அந்த பள்ளிக்கு விருது வாங்கி கொடுப்பது தான் கதை.
கம்பீரத் தோற்றம், காந்தக் குரல், பிரிவு, அடி வாங்கும்போது திருப்பி அடிக்காத அன்பு என்று ஆளைக் கட்டிப்போடுகிறார் சமுத்திரக்கனி. மாணவர்களுக்கு ஆதரவாக அவர் பேசும் வசனம் எல்லாம் செமை ஷார்ப். ஆனால் எப்போதுமே மிடுக்கான அதிகாரி போல் தோற்றம் தருவதை அவர் தவிர்த்திருக்கலாம். மாணவர்கடைள புத்திசாலிகளாக்க அவர் வைக்கும் பயிற்சிகளை இனி எல்லா பள்ளிகளிலும் பயன்படுத்தலாம். அவருக்கு ஒரு மனைவி இருந்தாலும் டூயட், குடும்பம் என்று செல்லாமல் பிரசவத்துக்கு ஊருக்கு அனுப்பி வைத்த கதை அமைப்பு இனிப்பு. ஆனால் கணவன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும்போது, மனைவி வீர வசனம் பேசுவது துவர்ப்பு.
வில்லனாக தம்பிராமய்ணா. அதுவும் எகத்தாளமாக அவர் கைத்தட்டுவதாகட்டும், ஹீரோவை கொல்ல ஆள் அனுப்புவதாகட்டும், என்று வெறுப்பை சம்பாதிப்பவர் கடைசியில் சமுத்திரக்கனி, அவரையே தலைமை ஆசிரியராக நியமிக்க சொல்லும்போது, குனிக்குறுகி செய்த பாவங்களுக்கெல்லாம் பிராயசித்தம் போல் நடந்து வருகிறாரே. தம்பி ராமய்யாவை அண்ணன் ராமய்யா என்று இனி அழைக்கலாம்.
அடக்கி வாசித்தே அப்ளாஸை வாங்குகிறார் ஜூனியர் பாலையா. கதாநாயகனை தவிர மற்ற எல்லா ஆசிரியர்களையும் கெட்டவர்களாகவும் ஞானம் இல்லாதவர்களாகவும் காட்டியிருப்பதை தவிர்த்திருக்க வேண்டும்.
ஏற்கனவே யூ.ட்யூப்பில் ஹிட் ஆகிவிட்ட சகாயனே பாடலால் ஆமாம் போட வைக்கிறார் இமாம். ஒவ்வொரு ஆசிரியரும் பார்க்க வேண்டிய இந்த படத்தை அரசாங்கம் வரிச்சலுகை தந்து கௌரவிக்கலாம்.
சாட்டை தமிழில் ஓர் உலகப்படம்.
நன்றி: குமுதம்