தினமலர் விமர்சனம் » வேட்டை
தினமலர் விமர்சனம்
போலீஸ் பரம்பரையில் பிறந்த அண்ணன் தம்பிகள் மாதவனும், ஆர்யாவும்! எதிர்பாராமல் இவர்களது தந்தை திடீரென அகால மரணமடைய, அப்பாவின் போலீஸ் உத்தியோகம் மகன் மாதவனுக்கு கிடைக்கிறது! பயந்த சுபாவமுடைய மாதவன் முதலில் அதை ஏற்க மறுக்கிறார். அவருக்கு தைரியம் சொல்லி, அண்ணன் மாதவனை அந்த வேலையை ஏற்க செய்யும் அடிதடிக்கு அஞ்சாத தம்பி ஆர்யா, மாதவனுக்கு இறுதிவரை எப்படி உறுதியாக அவரது உத்தியோகத்தில் உதவி செய்கிறார்...? என்பதை காமெடியாகவும், கலக்கலாகவும் சொல்லியிருக்கும் படம்தான் "வேட்டை" மொத்தமும்! இதனூடே அக்கா-தங்கைகளான சமீரா ரெட்டி-அமலாபால் இருவருடனும் மாதவன்-ஆர்யா இருவரும் இணையும் கல்யாணம் மற்றும் காதல் காட்சிகளையும் கலந்து கட்டி காதலாகவும், அதேநேரம் "வேட்டை" படத்தை விளையாட்டாகவும், விறுவிறுப்பாகவும் வித்தியாசமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் என்.லிங்குசாமி என்றால் மிகையல்ல!
அந்தகாலத்து எம்.ஜி.ஆர்., பார்முலா கதை! அவசர போலீஸ்-100 எனும் பெயரில் கடந்த சில வருடங்களுக்கு முன் கே.பாக்யராஜ் செய்த கதையும் கூட! ஆனாலும், போரடிக்காமல் புதிய விருந்தாக ரசிகர்களுக்கு புத்தம் புதுசாக வேட்டையை படைத்திருப்பதில் இயக்குநர் லிங்குசாமி உயர்ந்து நிற்கிறார்! அவரது உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு பளிச்சிட்டிருக்கின்றனர் மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால், அண்ணாச்சி ஹஸூதோஷ் ரானா, நாசர், தம்பி ராமையா, ராஜூ ரவிந்திரன், ஸ்ரீஜித்ரவி, முத்துக்குமார், சண்முகராஜன் உள்ளிட்ட ஒவ்வொரு நட்சத்திரமும்!
இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும், எந்த குழப்பமும் இல்லாமல் மாதவனுக்கும், ஆர்யாவுக்கும் ஈக்குவல் முக்கியத்துவம் உடைய பாத்திரங்கள் என்பதால் பயந்த மனநிலை உடைய போலீஸாக மாதவன், அவருக்கு உதவும் தம்பியாக அடிதடிக்கு அஞ்சாத ஆர்யா என இருவருமே போட்டி போட்டு பொளந்து கட்டியிருக்கின்றனர்.
அதேமாதிரி அக்கா-தங்கைகளான சமீரா ரெட்டி, அமலாபால் இருவரும் இருவேறு கோணங்களில் பட்டையை கிளப்பி இருக்கின்றனர். வெறும் கவர்ச்சி மட்டுமின்றி இருவருக்குமே நடிக்க நல்ல வாய்ப்புகள் தரப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது!
வில்லன் ஹஸுதோஷ் ரானாவிற்கு தரப்படும் அதிகப்படியான முக்கியத்துவம், கடத்தல் லாரிகள் இல்லாமல் கடத்தல் பொருட்களை மட்டும் இரயிலில் ஆர்யா கோர்ட்டுக்கு கொண்டு செல்லும் லாஜிக் மிஸ் - டேக் உள்ளிட்ட ஒரு சில குறைகளை கண்களுக்கு தெரியாமல் நச் என்று படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்டுகள் லிங்குசாமியின் இயக்கத்திற்கு பக்க(கா) பலமா இருந்து வேட்டையை தமிழ் சினிமா ரசிகர்களின் கோட்டை ஆக்கியிருக்கின்றன!
ஆக மொத்தத்தில் "வேட்டை" பிடித்திருக்கிறது ரசிகர்களின் "கனவு கோட்டை!"------------------------------------------------------------
கல்கி விமர்சனம்
ஹண்ட்ரட் பர்சன்ட் ஆக்ஷன் முத்திரை. லாஜிக் பற்றிக் கவலைப்படா இயக்குனர் லிங்குசாமியின் மேஜிக் பொங்கல்தான் "வேட்டை. மாதவனும் - ஆர்யாவும் முறையே அண்ணன், தம்பி. இவர்களது குடும்பமே போலீஸ் குடும்பம். "எங்க வீட்டு பிள்ளை பட எம்ஜிஆர் போல் அண்ணன் பயந்த சுபாவம் உள்ளவர். தம்பி அசகாய சூரர். அப்புறம் இருக்கவே இருக்கு காதல், சரவெடி, அதிரடி...
அமலாபால் - ஆர்யா காதல் ஓர் இயல்பான காதல் களம். பெண் பார்க்க வந்த ஆர்யாவை, அக்கா சமீரா ரெட்டியிடம் மைனா பொண்ணு "ஆள் ஹேன்சம் என்று சொல்வதும், அது மாப்பிள்ளை இல்லை, மாப்பிள்ளையின் தம்பி எனத் தெரிந்ததும் அமலா தம் கண்ணுக்கு மை தீட்டித் தமது காதலை வெளிப்படுத்துவது இயக்குனரின் டச்.
எங்கே கடைசிவரை மாதவனை, பயந்த சுபாவமுள்ள சப்-இன்ஸ்பெக்டராகக் காட்டிவிடுவாரோ என பயந்து போன நமக்கு "எனக்கே ஷட்டரா என ரன் பட டயலாக் பேசி மாதவன் துள்ளி எழும்போது தியேட்டரில் கரகோஷம். ஆர்யா காட்டில்தான் அடைமழை. சிங்கம் போல எதிரிகளை வேட்டையாடுவதும்; அமெரிக்க மாப்பிள்ளை முன்னே அமலா பாலுக்கு முத்தமழை பொழிந்து "நாங்க காதலிக்கிறோம் என்று சொல்வதும் ஆரம்பகால ரஜினி செய்த சேட்டை. உயர் போலீஸ் அதிகாரி நாசர், மாதவனைப் பாராட்டிவிட்டு ஆட்டம் போட்டுவிட்டுப் போகும் காட்சியும் தூள்.
சமீரா ரெட்டியின் இளமை, கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கிறது என்பதை அவரது முகம் பல காட்சிகளில் காட்டுகிறது. அமலாபால் "பப்பரப்பா பாட்டும் சரி விழியால் ஆர்யாவை ஓரம் கட்டுவதும் சரி இயல்பான நடிப்பு.
வில்லன் ஹசு தோஷ்ரானா நல்ல தேர்வு. ஆனால் என்ன, படம் முழுக்க அவர் ஏமாந்துகொண்டே இருப்பது காமெடி! எம்ஜிஆரின் டபுள் ஆக்ஷன் படங்கள் ஞாபகத்துக்கு வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை; மிரட்டல், அண்ணன், தம்பி, அக்கா-தங்கை, வில்லன்கள் என மாமூல் கதைதான் என்றாலும் படம் முழுக்க வலுவாக முடிச்சுப் போட்டு அதை எப்படி அவிழ்க்கப் போகிறார் இயக்குனர் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்பதில் இயக்குனருக்கு வெற்றியே.
வேட்டை - அசைவ மசாலா!-----------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
அண்ணன் மாதவனுக்கு பயந்த சுபாவம். தம்பி ஆர்யா அதிரடியான ஆள். அப்பா இறந்த பிறகு அந்த போலீஸ் வேலை மாதவனுக்குக் கிடைத்துவிட, பயந்து நடுங்கும் அண்ணனுக்கு பக்கபலமாய் எதிரிகளைப் பந்தாடுகிறார் ஆர்யா. இறுதியில் இருவரும் கைகோர்த்து ஆடுவதுதான் வேட்டை.
மாதவனை இனிமேல் சாக்லெட் பாய் என்று சொல்ல முடியாது. உடம்பு பெருத்து தொப்பையுடன் வருகிறார். ரவுடிகளை கண்டு பயப்படுவதும், தம்பி ஆர்யா உதவியுடன் எதிரிகளின் செயல்களை முறியடித்துவிட்டு "சிங்கிள் ஆளா ஜெயிச்சுட்டியே என மேலதிகாரி நாசர் பாராட்டும்போது சிரித்தபடியே சமாளிப்பதுமாக ரசிக்க வைக்கிறார்.
அண்ணனுக்காக எதையும் செய்யும் கேரக்டராக ஆர்யா. கடத்தப்பட்ட கஸ்டம்ஸ் அதிகாரியின் குழந்தையை மாதவனுக்காக மீட்பதிலும் கடத்தல் சரக்குகளை லாவகமாக ரயிலில் கொண்டு சென்று ஒப்படைப்பதிலும் கைதட்டல் வாங்குகிறார். தம்பி உதவியுடன்தான் மாதவன் இத்தனையும் செய்கிறார். உண்மையில் அவர் ஒரு பயந்தாங்கொள்ளி என்பது புரியாமல் டிபார்ட்மெண்ட் அவரை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. எதிரிகளும் பயப்படுகிறார்கள்.
"ஒரு கட்டத்தில் தம்பியை தூக்குடா என் ஆர்யாவை அப்பாவி என நினைத்து கடத்தி வருவதும், வில்லனின் அல்லக்கையின் கட்டை விரலை ஆர்யா காவு வாங்குவதும் ரசிக்க வைக்கும் காட்சி.
வில்லன் மாரியை ஆர்யாவுடன் கோர்த்துவிட்டு என்கவுன்டர் செய்யும் காட்சியும், பெருந்தலை அண்ணாச்சியின் அள்ளக்கைக்கு டீ வாங்கிக் கொடுத்து சந்தேகத்தை ஏற்படுத்தி வாக்குமூலம் வாங்கும் காட்சியும் சபாஷ் போட வைக்கின்றன. திரைக்கதையில் நல்ல விறுவிறுப்பை தந்திருக்கிறார் டைரக்டர் லிங்குசாமி. பாராட்டலாம்.
பஜாரித்தனமான சவுண்டு பார்ட்டியாக சமீரா ரெட்டி. ஸ்கூட்டியை உடைத்ததற்காக ஆர்யாவைத் திட்டுவதும், மாதவனுக்கு ஜோடியாகி அண்ணியாக வந்து மிரட்டி வேலை வாங்குவதுமாக கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார்.
அடேங்கப்பா அமலாபாலா இது? பாடல்களிலும் சிலசில காட்சிகளிலும் கவர்ச்சியில் முக்கால்வாசி மூழ்கடிக்கிறார்கள். குறிப்பாக, வீட்டில் ஆர்யா உட்கார்ந்திருக்கும் சமயத்தில் மார்பில் கட்டியிருந்த துண்டை விலக்கிவிட்டு சரிக்கட்டும் காட்சி இருக்கே... கண்ணாடியில் ஆர்யா அதைப் பார்த்துவிட்டு "தேங்ஸ் சொல்ல, "ஐயோ பார்த்துட்டான் என அமலா பதறுவது ஒன்ஸ் மோர் கேட்க வைக்கும் ரகம். இதில் நீ...ண்ட உதட்டு முத்தம் வேறு இருக்குப்பா... மிஸ் பண்ணிடாதீங்க. அமலாபால்-ஆர்யா நல்ல கெமிஸ்ட்ரி. படத்தில் இருவருக்கும் நிறைய ரொமான்ஸ் காட்சிகள் வெச்சுருக்காங்க.
ஒரு கட்டத்தில் மாதவன் வெறும் டம்மி என்பது வில்லன் கோஷ்டிக்குத் தெரியவர நையப்புடைக்கிறார்கள். மாதவனால் எழுந்து நடக்க முடியாத சூழ்நிலை. ஸோ... போலி போலீஸான தன் அண்ணன் மாதவனுக்கு உடற்பயிற்சியெல்லாம் கற்றுக் கொடுத்து நிஜ போலீஸாக... வீரனாக மாற்றிக் காட்டுகிறார் ஆர்யா.
அப்புறமென்ன? படத்தின் பின்பாதியில் மாதவனின் அடிதடி அமர்க்களம் ஆரம்பமாகி நம்மை கைதட்ட வைக்கின்றன.
வழக்கமான சராசரி க்ளைமாக்ஸ். வில்லனை போட்டுத் தள்ளுகிறார்கள். அவ்ளோதான்.
"பரபரப்பா பாடலிலும் பின்னணி இசையிலும் யுவன் நம்மை கவனிக்க வைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு துல்லியமான வெண்மேகமாய் ஈர்க்கிறது.
வேட்டை - வேங்கை பாய்ச்சல்குமுதம் ரேட்டிங் ஓ.கே.