குரங்கு பெடல்,Kurangu Pedal

குரங்கு பெடல் - பட காட்சிகள் ↓

Advertisement
3.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், மாமன்டேஜ் பிக்சர்ஸ்
இயக்கம் - கமலக்கண்ணன்
இசை - ஜிப்ரான் வைபோதா
நடிப்பு - காளி வெங்கட், மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன்
வெளியான தேதி - 3 மே 2023
நேரம் - 1 மணி நேரம் 59 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5

2009ல் வெளிவந்த 'பசங்க' படத்திற்குப் பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பின் சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு உணர்வுபூர்வமான படம். 80களில் நடக்கும் கதை. இந்தக் காலத்து சிறுவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு அனுபவம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. 80களில் பிறந்தவர்கள் வரை இப்படம் அவர்களது சிறு வயது கால ஞாபகங்களை மீண்டும் கொண்டு வந்து கொடுக்கும்.

சேலம் மாவட்டம், கத்தேரி கிராமத்தில் நெசவு தொழில் செய்பவர் காளி வெங்கட். அவருக்கு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது. அவரது ஒரே மகன் பத்து வயதான சந்தோஷ் வேல்முருகன். அப்பாவைப் போல அல்லாமல் அந்த வயதிலேயே சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார். வீட்டிலிருந்து காசு திருடி வாடகை சைக்கிளை எடுத்து ஓட்டப் பழகுகிறார். ஒரு நாள் சைக்கிளை விட சிறிது தாமதமாகிவிட பயத்தில் சைக்கிளுடன் பக்கத்து ஊரில் உள்ள அக்கா வீட்டிற்குச் சென்றுவிடுகிறார். காணாமல் போனதாக நினைத்து அவனைத் தேடிக் கண்டுபிடிக்கிறார் காளி வெங்கட். சைக்கிள் வாடகையைக் கொடுப்பதற்காக அந்தக் கடையிலேயே வேலைக்குச் சேர்கிறார் சந்தோஷ். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இயக்குனர் கமலக்கண்ணன் 80களின் கிராமம், கிராமத்து மனிதர்கள், அப்போதைய சைக்கிள் ஆசை என பலவற்றைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் அவ்வளவு யதார்த்தமாய் நடித்துள்ளார்கள். நம் வாழ்க்கையில் இது போல சொல்லப்படாத விஷயங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்று மனதிற்குள் வந்து போகிறது.

படத்தில் கதையின் நாயகன் மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன். அந்த வயதில் உள்ள சிறுவர்கள் அனைவருக்கும் இருக்கும் ஆசை அவனுக்கும் இருக்கிறது. அப்பாவிற்கு சைக்கிள் ஓட்டத் தெரியாததால் அவரை எல்லோரும் நடராஜா சர்வீஸ் என கிண்டல் செய்வது பிடிக்கவில்லை. அதனாலேயே எப்படியாவது சைக்கிள் ஓட்டிப் பழக வேண்டும் என வெறி கொண்டு திரிகிறார். சின்னச் சின்ன பாவனைகளைக் கூட நடிப்பென்றே தெரியாத அளவிற்கு இயல்பாய் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் முக்கியமானவர் காளி வெங்கட். எந்தவிதமான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்குள் அப்படியே ஐக்கியமாகிவிடுகிறார். அவர் ஒரு தண்ணீர் போல, எந்தப் பாத்திரத்தில் ஊற்றினாலும் அதற்குப் பொருத்தமாய் மாறிவிடுகிறார்.

சந்தோஷ் நண்பர்களாக நடித்திருக்கும் சில சிறுவர்களும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். மிலிட்டரி ஆக நடித்திருக்கும் பிரசன்னா பாலசந்திரன், குடிகார கணேசனாக நடித்திருக்கும் ஜென்சன் திவாகர் இருவரது நகைச்சுவையும் கதையோடு வந்து சிரிக்கவும் வைத்திருக்கிறது.

ஜிப்ரான் வைபோதா பின்னணி இசை உணர்வுபூர்வமான காட்சிகள் ஒவ்வொன்றையும் கூடுதலாக ரசிக்க வைத்திருக்கிறது. சுமீ பாஸ்கரன் ஒளிப்பதிவு, சதீஸ் சிவன், சுரேஷ் திலகவதி கலை அமைப்பு இரண்டு சக்கரங்களாய் அமைந்துள்ளது.

நல்ல படங்கள் வந்தால் அவற்றை பாராட்டி வரவேற்று ரசிப்பது தமிழ் சினிமா ரசிகர்களின் குணம். அது போல இந்த 'குரங்கு பெடல்' படத்தையும் ரசிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

குரங்கு பெடல் - மெடல்…

 

குரங்கு பெடல் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

குரங்கு பெடல்

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓