பம்பரக் கண்ணாலே என்ற ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் பார்த்தி பாஸ்கர் இயக்கி வரும் படம்தான் அர்ஜூனன் காதலி.
படத்தில் ஹீரோவாக நடிப்பவர் நடிகர் ஜெய். அவருக்கு ஜோடியாக நடிகை பூர்ணா நடிக்கிறார். குற்றாலம், தென்காசி, மதுரை, திருப்பரங்குன்றம், பாண்டிச்சேரி என பல இடங்களில் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. காதல், சுப்பிரமணியபுரம் வரிசையில் இந்த அர்ஜூனன் காதலி படமும் ஒரு யதார்த்தமான படமாகவும், வெற்றிப்படமாகவும் இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குனர் பார்த்தி பாஸ்கர். ஜெய், பூர்ணா தவிர படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகளை மதுரை ஏரியாவில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்து கண்டு பிடித்திருக்கிறார் பார்த்தி பாஸ்கர். அவர்களுக்கு நடிப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டிருக்கிறது.
காதல் கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களை தயாரித்த சிவசக்தி பாண்டியனின் எஸ்.எஸ்.மூவிமேக்கர்ஸ் தயாரிக்கும் படம் இது. இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த தேவாதான் இசையமைக்கிறார். கவிஞர் வாலி எழுதியிருக்கும், கண் திறந்தான் கந்தன்... அதனால் நான் வந்தேன்... ஜெயிக்கத்தான் பிறந்தேனடா... கை கொடுத்தான் கந்தன்... முன்னேறி நான் வந்தேன்... கொடி கட்டி பறப்பேண்டா... என்ற பாடல் படத்தின் ஹைலைட்டாக இருக்குமாம். ஒரே ஒரு வரி கதையான இந்த படம் காதல் கோட்டை ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என்கிறது அர்ஜூனன் காதலி குழு!
- தினமலர் சினி டீம் -