''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கூட்டத்தில் ஒருவராக சினிமாவில் அறிமுகமாக, மக்களிடம் பிரபலமடைந்தவர்கள் மிகக்குறைவு. அவர்களில், சிரிப்பு நடிகர், முத்துக்காளையும் ஒருவர். சினிமாவுக்காக, கராத்தே கற்று, அதில் பிளாக் பெல்ட் வாங்கிய இவர், மக்களை சிரிக்க வைக்கும் தொழிலே மகிழ்ச்சி தருவதாக சொல்கிறார்.
ஆரம்பத்தில் சண்டை காட்சிகளில், கூட்டத்தில் ஒருவராக, நாயகனிடம் அடி வாங்கிக் கொண்டிருந்தவர், இப்போது, 200க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக வலம் வந்துள்ளார்.
அவர் மனம் திறந்து கூறியதாவது: ராஜபாளையம் அருகே, சங்கம்பட்டி என்ற திருக்கோதையாபுரம் தான், நான் பிறந்த ஊர். இரண்டு சகோதரர்கள், நான்கு தங்கைகள். அரசு பள்ளியில், 6ம் வகுப்பு வரை படிப்பு. சிறு வயதில், எம்.ஜி.ஆர்.,- புரூஸ்லியின் சண்டை படங்கள் மிகவும் இஷ்டம். அந்த ஆர்வத்தில், கராத்தே பயிற்சியில், 'பிளாக் பெல்ட்' வாங்கினேன். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தேன். 'உன் மூஞ்சிய கண்ணாடியில் பாத்திருப்பியா; 'டயலாக்' என்றால் என்னன்னு தெரியுமா' என, பலரிடம் அவமான சொற்களை கேட்டேன்.
படப்பிடிப்பு இடங்களில் இருந்தால், சினிமா வாய்ப்பு கிடைத்துவிடாதா என்ற ஆசையில், 1987ல், ஏ.வி.எம்., ஸ்டுடியோவில், கார்பென்டராக சேர்ந்தேன். சம்சாரம் அது மின்சாரம் படப்பிடிப்பில், சினிமா செட் பிரிப்பது தான் முதல் வேலை. சம்பளம், 13 ரூபாய். மூன்று ஆண்டுகள், ஷூட்டிங் பார்த்தது தான் மிச்சம்; வாய்ப்பு கிடைக்கவில்லை. என்னைப் போலவே சினிமா வாய்ப்பு தேடுவோர் அடிக்கடி சந்திக்கும் இடமாக, ஒரு தையல் இருந்தது. அங்கு, தையல் தொழில் கற்றேன். மிச்ச நேரங்களில், சைக்கிளில் ஒவ்வொரு சினிமா நிறுவனத்துக்கும் சென்று வாய்ப்பு தேடினேன். யாரும் வாய்ப்பு தரக் காணோம். தையல் தொழிலுடன், சொந்த ஊர் திரும்பினேன். அங்கு, 'மெட்ராஸ் டெய்லர்' என்ற பெயரில், கடை நடத்தினேன். ஆனாலும், சினிமா ஆசை விடவில்லை.
மீண்டும், 1997ல், சென்னை வந்தேன். கராத்தே பிளாக் பெல்ட் தகுதியை வைத்து, 'ஸ்டண்ட் யூனியன்' தேர்வில் பங்கேற்றேன். 3,000 பேரில், 120 பேர் தேர்வானோம். காதலுக்கு மரியாதை படத்தில், சண்டை காட்சி வாயிலாக, சினிமாவுக்குள் வந்தேன். தொடர்ந்து, 20 படங்களில், கும்பலில் ஒருவனாக, நாயகனிடம் அடிவாங்குவது தான் என் வேலையாகிப் போனது. பிரபு நடித்த, பொன்மனம் படத்தில் சண்டை காட்சியே காமெடியாக எடுத்தனர். 'பிரச்னையை பெரிசாக்கி தான் பழக்கம்; மோதி பார்ப்போம் வா' என, பிரபுவை நான் சண்டைக்கு இழுத்த காட்சி, சிறப்பாக வந்தது.
அதுவரை பாதகமாக இருந்த என் ஒல்லியான உருவம், சினிமாவுக்கு சாதகமாக்கி விட்டது. நடிகர் வடிவேலுடன், 'செத்து செத்து விளையாடுவோமா' என, நான் பேசிய காமெடி வசனம், சினிமா வாய்ப்புகளை அள்ளி கொடுத்தது. அப்போதிருந்து, என் உடலை ஒரே மாதிரியாக பராமரிப்பது முக்கியமாகி விட்டது. உடலை வருத்தி தான், காமெடிகளில் நடிக்கிறேன்.
சினிமாவில் நான் கற்றுக் கொண்டது, உருவத்தை வைத்து யாரையும் குறைத்து மதிப்பிட கூடாது; ஒவ்வொருவரிடமும், வெவ்வேறு வகையான திறமைகள் இருக்கும்; வாய்ப்பு தான் இங்கு தேவை. என் தவறுகளால், சினிமா வாய்ப்புகளை தவறவிட்ட சம்பவங்களும் உண்டு. கசப்பான அனுபவங்கள் தான் வாழ்க்கையை மேம்படுத்தும். மனைவி, ஒரு மகன். கிடைத்ததை வைத்து நிம்மதியாக வாழ்கிறோம்.
கொரோனா காலத்தில், 'யுடியூப்' நிகழ்ச்சி, அரசு விளம்பரம் கை கொடுத்தது. படிக்க முடியாமல் விட்டதை இப்போது தொடர்கிறேன். பி.ஏ., வரலாறு, எம்.ஏ., தமிழ் முடித்து விட்டேன். தொடர்ந்து படித்தும் வருகிறேன்.
இவ்வாறு கூறினார், நடிகர் முத்துக்காளை.