நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெற்றியை பெற்று சுமார் 600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார் என மலையாள, கன்னட முன்னணி நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தது படத்திற்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது, அதேசமயம் படத்தில் ரஜினிகாந்த்திற்கு அடுத்ததாக மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றவர் வில்லனாக வர்மன் கதாபாத்திரத்தில் நடித்த மலையாள நடிகர் விநாயகன் தான். ஏற்கனவே இவர் திமிரு உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலர் படம் மூலமாக இவருக்கென ஒரு தனி ரசிகர் வட்டமே உருவாகிவிட்டது.
அதே சமயம் ஜெயிலர் படம் வெளியாகி கிட்டத்தட்ட நான்கு வாரங்களுக்கு மேல் ஆன நிலையில் இதுவரை எந்த ஒரு சேனலிலும் சோசியல் மீடியாவிலும் தலை காட்டாமல் இருந்து வந்த விநாயகன் தற்போது தான் முதல் முறையாக வீடியோ மூலமாக தோன்றி ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஜெயிலர் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சில பெண்கள் விநாயகன் மற்றும் ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டபோது நடந்த ஒரு சுவாரசிய நிகழ்வை பகிர்ந்துள்ளனர்.
படத்தில் விநாயகனை எட்டி உதைத்து அவரது நெஞ்சில் தனது ஷூ அணிந்த காலால் ரஜினிகாந்த் மிதிக்கும் ஒரு காட்சி படத்தில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த காட்சி படமாக்கப்பட்ட போது சில காரணங்களால் நான்கைந்து முறைக்கும் மேல் ரீடேக் எடுக்கப்பட்டது. அப்படி எடுக்கப்பட்ட ஒவ்வொரு சமயத்திலும் விநாயகனின் நெஞ்சைத் தொட்டு கும்பிட்டு தனது வருத்தத்தை அவரிடம் ரஜினிகாந்த் தெரிவித்து கொண்டாராம். எவ்வளவு பெரிய நடிகர் என்றாலும் சக நடிகரின் மனம் புண்பட்டு விடக்கூடாது என்பதை ரஜினிகாந்த் கவனத்தில் கொண்டுள்ளார் என்பதை நேரிலேயே பார்த்தபோது ஆச்சரியப்பட்டு போனோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.